தமிழ் எழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும்



ஒருங்குறி என்றால் என்ன? அதில் தமிழெழுத்துக்களும் மற்றவையும் எங்குள்ளன? இப்பொழுது தமிழெழுத்தை நீட்டிக்கச் சொல்லி முன்மொழிவு வந்திருக்கிறதே? இது எதற்காகச் செய்யப்படுகிறது? எங்கு இது வரக்கூடும்? வந்திருப்பது நல்லதா? கெட்டதா?


இதேபோலக் கிரந்தத்திற்கான முன்மொழிவை யார் செய்கிறார்கள்? அம் முன்மொழிவு என்ன? அது தமிழெழுத்தைத் தாக்குமா? தாக்காதா? அந்தத் தாக்கம் இல்லாது, கிரந்தத்தை மட்டுமே முன்மொழிய முடியாதா?

இப்படிப் பல்வேறு கேள்விகளை விவரந் தெரிந்தவரிடம் கேட்டுத் தெளிந்து அவற்றிற்கு விடை கண்டு, வெற்றிபெறத் தக்க தடந்தகையை உருவாக்காது, போராடப் போனால் விளைவு என்ன? இன்னொரு முள்ளிவாய்க்காலா? அது தேவையா?
  • “ஆகா.., எம் அன்னைக்குக் கேடுற்றதே! இதை வீணே பார்த்திருக்க முடியுமா? மறத்தமிழன் போருக்கு அஞ்சுவானா? ஓடிவாருங்கள் தோழர்களே! அன்னையைக் காப்போம்” என்று கூவியழைத்து மானகக் கவணுக்கு (machine gun - இயந்திரத் துப்பாக்கி) முன்னால் அணிவகுத்து நிற்பது தற்கொலைக்குச் சமம் அல்லவா?



முழுக் கட்டுரை:-

1.தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 1

2.தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 2

  • நன்றி: வளவு வலைப்பதிவு

கிரந்தம் வடிவில் வரும் எமன்

இது 'தமிழக அரசியல்' இதழில் வெளிவந்த கட்டுரை. அன்பர்கள் வாசிப்புக்கு இங்கு அப்படியே தருகின்றேன். -தமிழ் ஊழியன்


கிரந்தம் வடிவில் வரும் எமன்:
தமிழ்ப் பகைவர் விழித்திருக்க... தமிழர்கள் தூங்கலாமா?



‘என்றும் உள தென்தமிழ்’ எனக் கம்பன் பாடிய தமிழுக்குக் காலம் தோறும் தமிழ்ப் பகைவர்கள் கேடு செய்து வருகின்றனர். இப்பொழுது தமிழுக்கு எதிராக அவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டது கணிணியை. கணிணியில் கிரந்தப் பயன்பாடு வேண்டும் என்ற போர்வையில், தமிழ் ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதனை நம்மில் பலர் உணரவில்லை. இதுபற்றி, தனது ஆய்வுக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இருபது ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துச் சிதைவை எதிர்த்துப் போராடிவரும் ஆட்சித் தமிழறிஞரான இலக்குவனார் திருவள்ளுவன்.

கணிணியச்சிடுவதற்குப் பயன்படுத்தும் அதே எழுத்துரு மற்றவர் கணிணியில் இருந்தால்தான் நாம் அனுப்புவனவற்றை அடுத்தவர் படிக்க முடியும். இந்தக் குறையைப் போக்க, தகவல் மாற்றமைப்பிற்கான இந்தியத் தரக்குறியீட்டு முறையும் (ISCII - Indian Standard Code for Information Interchange) தமிழ்த்தரக் குறியீட்டு முறையும் (TSCII - Tamil Standard Code for Information Interchange)அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அடோப், ஆப்பிள், ஐ.பி.எம்., கூகுள், மைக்ரோசாப்டு முதலிய பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டிணைவான ஒருங்குறி அவையம்.

(Unicode Consortium) அறிமுகப்-படுத்திய ஒருங்கீட்டு முறை மேலாதிக்கம் செலுத்தி-யமையால் நம் நாட்டு முறைகள் பின்தங்கின.

இப்பொழுது, உலக-மொழிகளின் கணிணிப் பயன்பாட்டிற்கு இந்த அமைப்பின் ஒதுக்கீடே அடிப்படை என்னும் நிலை வந்துவிட்டது. இந்த அமைப்பின் மூலம் கிரந்த எழுத்துகளைக் கணிணியில் பயன்படுத்த ஒதுக்கீடு வேண்டும்பொழுதுதான் தமிழுக்கு எதிரான சதி தெரியவந்திருக்கிறது.

கிரந்தம் என்றால் என்ன?

சமசுகிருத எழுத்துகளைத் தமிழ் முதலான மொழிகளில் எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட எழுத்துவகைதான் கிரந்தம். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அயல் மொழி எழுத்துகளை நீக்கி எழுத வேண்டும் என்று வரையறுத்துள்ளார். ஆனால், நாம் கிரந்தத்தைப் பயன்படுத்தியதால் எண்ணற்ற சமசுகிருதச் சொற்களும், பின்னர் அரபு, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களும் தமிழில் கலந்து தமிழைச் சிதைத்தன.

இந்த நிலையில்... மணிப்பிரவாள நடைக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடு, கிரந்தத்திற்கு ஒருங்குறியில் இடம் வேண்டி மத்திய அரசு 2 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தது. அதற்கிணங்க, மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை பல கூட்டங்களுக்குப் பின் செப்டம்பர் 2010இல் இறுதிக் கூட்டம் கூட்டி முடிவெடுத்து, ஒருங்குறி அவையத்திற்கு 18.10.2010 அன்று பரிந்துரைத்துள்ளது. அதனை ஏற்பதற்கான முடிவெடுப்பு 06.11.2010 அன்று நடந்த ஒருங்குறி அவையத்தில் நடைபெறுவதாக இருந்தது.

அவ்வாறு அன்று அந்த முடிவை ஏற்றிருந்தால், பின் எந்த நாடு சொன்னாலும் அதனை அவ்வமைப்பு திரும்பப் பெற்றிருக்காது. நல்ல வேளையாகத் தமிழ்க் காப்பு அமைப்புகள் சார்பில் 2.11.2010 அன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாயிலாக, அப்போதைய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசாவிடம் முறையிட்டதன் தொடர்ச்சியாக இந்த முடிவெடுப்பு 26.02.2011 அன்று நடைபெற உள்ள கூட்டத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சுருக்கமாகக் கூறுவதாயின், மணிப்பிரவாள நடைக்காக, தமிழ் எழுத்துகளில் க1 க2 க3 க4 என்பதுபோல் 26 கிரந்த எழுத்துகளைப் புகுத்த முதலில் திட்டமிட்டனர். பின் எ, ஒ, ழ, ற, ன ஆகிய தமிழ் எழுத்துகளையும் தமிழ் எண்களையும் கிரந்தத்தில் சேர்த்து 89 குறியீடுகளுக்காகக் கருத்துரு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ், விரிவாக்கத் தமிழாக வளர்ச்சி பெறுவதாகக் கதையும் கூறப்பட்டது. மேலும், தமிழ் எழுத்துகளையும் கிரந்தத்தில் சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் அனைத்து மொழிகளையும் கிரந்த எழுத்து கொண்டே எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ‘இந்தியா ஒரே நாடாக விளங்க அனைத்து மொழிகளையும் எழுதக் கூடிய கிரந்த எழுத்துகளைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என்ற முறையை அறிமுகப் படுத்துவதுதானே இதன் உள்நோக்கம்?

இதை வீண் கவலை என்று ஒதுக்கிட முடியாது. செந்தமிழ் வழங்கிய சேரநாட்டில் கிரந்த எழுத்துகளின் செல்வாக்கைப் புகுத்தியதால்தான் தமிழ், மலையாளம் ஆயிற்று. ஆக, மீண்டும் ஒரு மலையாள மொழி தமிழ்நாட்டில் தோன்ற வேண்டும் என்ற அவலத்திற்கு வித்திடத்தானே கிரந்தத்தைப் புகுத்துகின்றனர். ஆனால், இதைத் தடுத்திட நாம் என்ன செய்தோம்? ஒருங்குறி அவையத்தில் தமிழ்நாடும் உறுப்பினராக இருந்தது. ஆனால், உறுப்பினர் கட்டணம் அமெரிக்கப் பணத்தில் 12,000 செலுத்தத் தவறியமையால், உறுப்பினர் தகுதியைத் தமிழ்நாடு இழந்து விட்டது. பல நூறு கோடி ரூபாய் செலவழித்துச் செம்மொழி மாநாட்டை நடத்திய நமக்கு இந்தத் தொகை பெரிதா?

மத்திய அரசின் மனித மையக் கணிணிப் பிரிவு (Human Centered Computer Division) இயக்குநர் சொர்ணலதா 2008&லிருந்து நடத்திய கூட்டங்களில், தமிழ்நாடு சார்பில் யாரும் பங்கேற்காததன் காரணம் என்ன? அப்படிப்பட்ட சூழலிலும் கூட்ட விவரத்தைத் தெரிவித்துக் கருத்து கேட்டுள்ளது மத்திய அரசு. உரிய காலத்தில் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் தமிழ் இணையப் பல்கலைக்கழக (தமிழ் இணையக் கல்விக் கழக) இயக்குநர் மறுமொழி அளித்துள்ளார். அதற்கு முன்னரே, தமிழ் இணைய வளர்ச்சிக்கு என அமைக்கப்பட்ட உத்தமம் (INFITT) சார்பிலும் ஒருங்குறி அவையத்திற்கு மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள கணிணி அறிஞர்களும் தமிழார்வலர்களும் இது குறித்து எச்சரித்தும்... தமிழக அரசு கவனத்திற்கும் பொது மக்களின் கவனத்திற்கும் முன்னரே இதை ‘உத்தமம்’ ஏன் கொண்டுசெல்லவில்லை? முதலமைச்சர் கவனத்-திற்குப் பிறரால் இது குறித்த தகவல்கள் கொண்டு செல்லப்பட்ட பொழுது 4.11.2010 அன்று ஒரு கூட்டம் கூட்டியுள்ளார். ஆனால், ஒத்தி வைக்க வேண்டும் என்ற ஒரு பக்க மடலை, மத்திய அரசிற்கு உடனே அனுப்பாமல், ஒருங்குறி அவையம் அமெரிக்காவில் கூடும் நாளான 6.11.2010 அன்று காலத்தாழ்ச்சியாக அனுப்பியது ஏன்?

ஒருவேளை, முன்பே இது தொடர்பான முடிவெடுப்பு ஒத்தி வைத்திருக்காவிட்டால் கிரந்தத்துடன் தமிழைக் கணிணி எழுத்துருப் பட்டியலில் ஒருங்குறிக்காக இணைக்கும் அவலம் அரங்-கேறியிருக்கும். தமிழாய்ந்த தமிழர்கள் முதல்வர் அருகே இருக்கும் பொழுதே இந்த நிலை!

இப்பொழுது கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதால், பஸ், ஜாமீன், மிக்ஸி, ஜாம், ஷவர், முதலான அயற்சொற்கள் நம்மிடையே புகுந்து விட்டன.

எனவே தமிழ் நிலைப்பதற்கு, நாம் இப்பொழுது உடனடியாக தமிழ்ப் பாடநூல்களில் இருந்து கிரந்த எழுத்துகளை அடியோடு நீக்க வேண்டும். கிரந்தம் அறியாத தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். இலங்கையில் அறிவியல் அகராதிகளில்கூடக் கிரந்த எழுத்துகள் இல்லையே! நம்மால் ஏன் முடியாது?

அடுத்த கூட்டம் அடுத்த ஆண்டுதான் என்று அமைதி காக்காமல், உடனே தமிழறிஞர்களையும் கலந்து பேசிச் சரியான கருத்துருவை அனுப்பி கிரந்தம் தொடர்பான முன்மொழிவைத் திரும்பப் பெற வேண்டும். இதைத்தான் உலகமெங்கும் உள்ள தமிழன்பர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

தமிழ்ப் பகைவர்கள் விழிப்புடன் இருக்கையில் தமிழ், தமிழ் என முழங்கிக் கொண்டிருப்பவர்கள் உறங்குவது ஏன்? தமிழக அரசு ஆவன செய்யுமா? கணிணி உருவில் வரும் இடரிலிருந்து கன்னித் தமிழைக் காப்பாற்றுமா தமிழக அரசு?

எழுத்துச் சீர்திருத்தம், தமிழ் ஒருங்குறி கலந்துரையாடல்


ஒருங்குறியில் தமிழ்க்காப்பு - கருத்தரங்கம்


பேரன்புடையீர், வணக்கம்.

கணிணி மூலமாக ஒருங்குறியில் தமிழையும் கிரந்தத்தையும் சேர்த்துத் தமிழுக்குக் கேடு விளைவிக்க மேற்கொண்டு வரும் சிலரின் முயற்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதன் பொருட்டுத் தமிழக அரசு அமைக்க இருக்கும் குழுவிற்கு உரிய பரிந்துரைகளை அளிக்கவும் தமிழ்க்காப்பு அமைப்புகள் திசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் தமிழ்க்காப்பு அரங்கம் நிகழ உள்ளது. இதில் பங்கேற்க,

"ஒருங்குறியில் தமிழ்க்காப்பு"

என்னும் பொதுத் தலைப்பில் 4 பக்கங்களுக்கு மிகாமல் நவம்பர் 25 ஆம் நாளுக்குள் கட்டுரை அளிக்க வேண்டுகின்றோம். கட்டுரையாளர்களும் பார்வையாளர்களும் உடனே,


மின்வரிக்குத் தங்கள் பெயர், முகவரி, பேசி எண், கட்டுரைத் தலைப்பு முதலிய விவரங்களை அளிக்க வேண்டுகிறோம். நேரில் பங்கேற்க இயலாதோர் கட்டுரையை அனுப்பி உதவலாம். நாளும் இடமும் முடிவான பின்னர்த் தெரிவிக்கப்பெறும்.


தொடர்பிற்கான பேசி எண்கள்:
98844 81652 (இலக்குவனார் திருவள்ளுவன்)
94452 37754 (அன்றில் பா.இறையெழிலன்)


கெடல்எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக்
கிளர்ச்சி செய்க! - பாவேந்தர் பாரதிதாசன்


இவ்வண்ணம்,
இலக்குவனார் திருவள்ளுவன்
ஒருங்கிணைப்பாளர், தமிழ்க்காப்பு அமைப்புகள்.

Grantha Philosophy in Tamil Would Be a Dangerous Trend


Grantha script and it's associated scripts are not based on scientific analysis, rather they are based on hear-say additions. As the Grantha script was built on a random hear-say knowledge, it's ability to scientifically scale is very limited.

So expanding Grantha in a non scalable and non-structured manner to write certain Tamil passages is a very dangerous trend. As the random based script and it's associated scripts has a wide user base (population) this can lead to the dismantling of scientifically defined Tamil alphabet system, which is scalable and structured.

The scalable nature of the definition of Tamil alphabet, that of names of the places of articulation, gives rise to large number of phonemes in day to day usage of spoken Tamil. The number of phonemes used in Tamil is largest for any language in the world and the definition of alphabet in Tamil is based on scientific philosophy and different to any other language in the world.

Scientifically analysed, philosophy used in Tamil alphabet is the only correct approach. however, due to usage numeracy reason there is a danger that this foundation of all languages might be lost for ever by introducing random based system to replace Tamil methodology.

In another front, any attempt to expand the Tamil script base has to be done again on a scientific basis and on an scalable basis. Random, hear-say approaches should not be allowed to modify Tamil. (An example of expansion would be creating scalable diacritics to indicate the numerous phonemes for pronunciation dictionary. The diacritics must be defined structurally. Numerous vowel phonemes including half, full and in between vowels, all consonantal phonemes possible at of each of the places of articulations, definitions for (aytham) different types of modulations, such as aspirations need to be structurally defined. The theory of minimal number of alphabet to clearly describes all possible phonemes and modulations must be adhered to.)

In essence, using Grantha philosophy in Tamil would be a dangerous trend that can destroy the only surviving alphabet system that is scientifically accurate.

Kind Regards,
Sinnathurai
tamil_araichchi@googlegroups.com.

முதல்வர் கலைஞருக்கு மலேசியாவிலிருந்து நன்றியும் பாராட்டும்

ஒருங்குறி தமிழில் கிரந்தம் திணிப்பை தடுத்து நிறுத்தக் கோரி இந்திய நடுவண் அரசுக்கு அவசர மடல் எழுதிய தமிழ்க முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு மலேசியத் தமிழ்ப் பற்றாளர்களின் நன்றியும் பாராட்டும். மலேசிய நாளிதழ் (மக்கள் ஓசை 10.11.2010) செய்தி.




தமிழ் ஒருங்குறியில் கிரந்தம்:- தமிழக முதல்வர் கலைஞர் அவரசக் கடிதம்

தமிழில் உள்ள ஒருங்குறியில் (யூனிகோடு) பிற மொழி ஆதிக்கத்தைத் தடுக்க, தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்,
இந்திய நடுவண் அரசுக்கு எழுதிய அவசரக் கடிதம்




ஒருங்குறி தமிழில் கிரந்தம் திணிப்பு கேடு நல்கும்


“தமிழின் முப்பத்தோரெழுத்துகளும் அவ்வாறே யின்றளவு மிருக்கின்றன. சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக்கொள்ளு மியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற் கேற்றபடி, தமிழிலிபியை யொட்டிக் ‘கிரந்தம்’ என்னும் பெயரிற் புதுவதோர் இலிபி வகுத்தனர்.. . . . தமிழுஞ் சம்ஸ்கிருதமுங் கலந்த மொழி கேள்விக்கின்பம் பயக்கு மென்ற போலியெண்ணமே இத்தகைய ஆபாச மொழி யொன்று வகுக்குமாறு தூண்டிற்று.” என்று பரிதிமாற்கலைஞர் எழுதுவார்.

“பாரதி – பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதற்குக் குறியீடுகள் உருவாக்க வேண்டும் என்று 1916–இல் ஞானபானு இதழில் “தமிழில் எழுத்துக்குறை” என்றத் தலைப்பில் எழுதினார். விடுதலைப்போராட்டத்தில் பாரதியுடன் இணைந்து நின்றவரும், அன்போடு உறவுமுறையில் “மாமா” என்று அழைத்தவரும் ஆகிய வ.உ.சிதம்பரனார் இதனால் தமிழின் ஒலிப்புமுறைக்கும் தனித்தன்மைக்கும் கேடு நிகழும் என்றும் கூறி இதனைக்கடுமையாக எதிர்த்தார்.

ஒருங்குறி மூலமாக சமற்கிருதத்தை புகுத்தவும், தமிழைச் சிதைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தமிழுக்குக் கேடு செய்வன. மொழி என்பது ஒலி அடிப்படையிலானது. தமிழ் ஒலிமுறையைக்காக்க வேற்றொலிகள் வராமல் காக்க வேண்டும். வடமொழி ஒலிகள் (கிரந்த எழுத்தின் மூலம் ) ஈட்டுரையில் புகுத்தினர். அது தோல்வி அடைந்தது (மு.வ.- இலக்கிய வரலாறு) 5 கிரந்த எழுத்துக்கள் மட்டும் நிலைத்தன். அவற்றையும் பெரிதும் புறக்கணித்து வருகிறோம். வட எழுத்துமுறை - கிரந்தம்- வர்க்க எழுத்துகள் இவற்றை அதிகம் கலந்ததனால்தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் தமிழிலிருந்து சிதைவால் தோன்றின. இனியும் தமிழைச் சிதைக்க விடவேண்டா.

(தமிழ் ஒருங்குறியில் திணிக்கப்படும் கிரந்த எழுத்துகள்)

கிரந்தத்தில் தமிழின் சிறப்பு எழுத்துகளாகிய எ, ஒ, ற, ழ, ன என்ற 5 எழுத்துகளைச் சேருங்கள் என்று 'சிலர்' முயல்கிறார் என்றால் கிரந்த எழுத்தின் தூய்மையைக் காக்க வேண்டியவர்கள்தானே கவலைப்பட வேண்டும்! நாங்கள் எங்கள் தமிழில்- தமிழ் ஒருங்கு குறியில் - தமிழின் ஒலிச்சிறப்பையும் தனித்தன்மையையும் கெடுக்கும் வகையில் தமிழோடு அதன் எழுத்துக்களாகக் காட்டும் வகையில் - கிரந்த எழுத்துகள் 5 ( ஜ,ஷ, , ஹ, க்‌ஷ) சேர்க்கக்கூடாது என்றோம்; ஆனால், அவை முன்பே தமிழ்ப் பாடப்புத்தகத்தில் கூட உள்ளன என்று வாதாடி அதனைச் சேர்த்தார்கள்! இப்போது- தமிழ் எழுத்துகளோடு- மேலும் 26 எழுத்துகளைச் சேர்க்கவேண்டும் என்பதல்லவா இரமண சர்மாவின் கோரிக்கை! இதற்கும் 1916-இல் காஞ்சி காமகோடி பீடத்தால் வெளியிடப்பெற்ற நூலை சர்மா எடுத்துக் காட்டியுள்ளார்.

இவ்வொலிகள் தமிழுடன் முரண்படுபவை. அதனால்தான் புத்த, சமண மதத்தினராலும் ஈட்டுரையாசிரியர்களாலும் கொண்டுவரப்பட்ட மணிப்பவழ(பிரவாள) நடை தோற்றது. தமிழில் கிரந்த எழுத்துகளைச்சேர்த்துத் தமிழின் தனித்தன்மையைக் கெடுத்து, மேலும் கன்னடம் மலையாளம் போல் சிதைக்க முயலும் இக்கேட்டைத் தடுக்கவேண்டும் என்பதுதான் தமிழ் எழுத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என்னும் எங்களின் கருத்து.

உயிராகிய மொழி எழுத்தாகிய உடலில்தான் தங்கியுள்ளது எனவே எழுத்தைச் சிதைக்கக் கூடாது என செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இதற்கு மாறாக நாம் சில கிரந்த எழுத்துகளைப் புகுத்தியதால்தான் தமிழ் மொழி பல புதிய மொழிகளாகச் சிதைவுற்றது. தற்காலத் தமிழ் என்ற பெயரில் அகராதிகளில் சார், டீச்சர் முதலான பல ஆங்கிலச் சொற்கள் தமிழாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பொழுது புகுத்தமுயலும் முறையால் தமிழ் நெடுங்கணக்கில் கிரந்த எழுத்துகளும் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் சமற்கிருதசொற்களும் புகுந்து, தமிழ் மலையாளம் மொழி 2என அழைக்கப்படும் வகையில் திரிவுறும். இதனால் பழந்தமிழ் இலக்கிய அழிவும் இன அழிவும் ஏற்படும். ஆதலின் உடனடியாக இந்திய அரசு சார்பில் முன்மொழியப்பட்ட ஒருங்குறி கருத்துருவை திரும்பப் பெறவேண்டும். மேலும் செப்பேடு, ஓலைச்சுவடிகளில், வடமொழி சார்ந்த நூல்களில் அச்சிட மொழியியல் குறியீடுகள் போதும்...

எனப் பிரஞ்சு நாட்டுத்தமிழறிஞர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்கள் கருத்தையும் பார்வைக்கு வைக்கிறோம்.

1)கிரந்த எழுத்துகள் இல்லாமலே இயங்கி வந்த தமிழ் இனியும் அப்படியே தங்கு தடை இன்றி இயங்கும்.

2)ஐந்து எழுத்தால் ஆன பாடை இல்லை தமிழ்! ஆகவே கிரந்த எழுத்துகள் தமிழுக்குத் தேவை இல்லை. மொழி இயலார் பயன்படுத்தும் குறியீடுகளை (IPA - International Phonetic alphabets) பயன்படுத்தியே அத்தனைத் தமிழ் ஒலிப்புகளையும் எழுதிக்காட்ட இயலும். அப்படி இருக்க, ஏன் இந்தக் கிரந்த எழுத்துகள்?

3)இன்றைய கணிப்பொறி அறிவியல், தொழில் நுட்பம், ஒருங்குறியீடுகள் முதலியன ...தமிழ் எழுத்துகளை எழுதத் தேவையான வசதிகளைக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில் கிரந்த எழுத்துகள் வலிந்து நுழைக்கப் படுவது தமிழின் அறிவியல். தொழில்நுட்பவியல், இலக்கியவியல் வளர்ச்சியைத் தடுக்கும்.

4)கிரந்த எழுத்துகள் கட்டாயத் திணிப்பு வன்புணர்ச்சிக்கு ஈடாகும். தமிழ்த் தாய் சீர்குலைப்புக்கு ஏதாகும் .

இப்படி இன்னும் அடுக்கிகொண்டே போகலாம். எப்படி இருப்பினும், கிரந்த எழுத்துகளின் படையெடுப்பை முறியடிக்க வேண்டிய கடமை தமிழறிஞர்களுக்கு மட்டும் அல்ல, எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு.

எழுத்தாக்கம்:-
முனைவர் பா.இறையரசன்
Dr.B.ERAIYARASAN,M.A.,M.Phil.,Ph.D

யுனிகோடு தமிழில் சமஸ்கிருதம் ஆக்கிரமிப்பு?


கணினியில் தமிழ் எழுத்துக்களை உள்ளிடுவதற்கான யூனிகோட் ஒருங்குறி முறையில் 26 சமஸ்கிருத எழுத்துருக்களைச் சேர்க்க திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், யுனிகோட் எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகெங்கும் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறை என்றும், அதில் தமிழ் ஒருங்குறி முறைக்குள் சமஸ்கிருத எழுத்துக்களை திணிக்க "ஆரிய சக்திகள்" முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் குறிப்பிட்ட இடங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையத்தளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதனால் தனியாக எந்த ஒரு புதிய தரவிறக்கமும் இன்றி சீனம் முதல் அரேபியம் வரை எந்தவொரு மொழி எழுத்தையும் யாரும் படிக்கலாம்; பயன்படுத்தலாம்.

தமிழில் எழுதுவதற்கும் அந்த ஒருங்குறி முறை இப்போது பயன்படுத்தப்படுவதால் உலகளாவிய அளவில் அனைவரும் இணையத்தின் மூலம் தமிழிலேயே தகவல்களைப் பறிமாறிக்கொள்ள முடிகிறது, யூனிகோடில் தமிழ் எழுத்துக்களுக்கு 128 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆயினும் அந்தக் குறுகிய அளவிற்குள்ளும் அனைத்துத் தமிழ் எழுத்துகளையும் ஒருவாறாக உள்ளே கொண்டு வந்துள்ளனர்.

அதை அதிகப்படுத்தினால் அனைத்துத் தமிழ் எழுத்துகளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கி எளிமையான பயன்பாட்டை உருவாக்க முடியும் என தமிழ் கணினி வல்லுநர்கள் யுனிகோடு சேர்த்தியம் அமைப்பிடம் முறையிட்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த சூலையில் சிறீ ரமண சர்மா என்பவர் தமிழ் எழுத்துகளுக்கான இடத்தை அதிகப்படுத்தி அதில் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று யுனிகோடு சேர்த்தியம் அமைப்பிடம் கோரியிருப்பதாகவும் அப்படிச்செய்தால் தமிழின் தனித்தன்மை கெட்டுவிடுமென்றும், தமிழை சமஸ்கிருதமாக்கும் முயற்சியே இது என்றும், இத்தகைய சதிகள் வெற்றிபெற அனுமதிக்கக்கூடாது என்றும் வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கணித்தமிழ் நிபுணரின் கருத்து


தொழில் நுட்ப அடிப்படையிலும், மொழித்தேவையின் அடிப்படையிலும் இந்த கூடுதல் எழுத்துருக்கள் தமிழ் ஒருங்குறிக்குள் தேவையில்லை என்கிறார் கணினித்தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட உத்தமம் என்கிற உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவரான மணி மு மணிவண்ணன்.

இந்தச் சர்ச்சை குறித்து பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில், தமிழின் மொழியியல் தேவையை ஏற்கெனவே இருக்கும் அடிப்படை எழுத்துருக்களே ஈடுசெய்யவல்லது என்று கூறும் மணிவண்ணன், கூடுதலாக 26 கிரந்த எழுத்துருக்களை தமிழ் ஒருங்குறிக்குள் கொண்டுவருவது தேவையற்றது என்கிறார்.

அதேசமயம், இந்த விடயத்தை யூனிகோட் நிறுவனம், உணர்வு ரீதியாக அணுகாது என்றும், வெறும் தொழில்நுட்ப பிரச்சினையாக மட்டுமே இந்த விடயத்தை அது பார்க்கும் என்றும் அவர் கூறினார்.

யுனிகோடு தமிழில் சமற்கிருத எழுத்துகளை வலிந்து திணிக்கும் சதிநாச வேலையைத் தடுத்து நிறுத்துங்கள்!

யூனிகோடு தமிழைச் சமஸ்கிருத மயமாக்கும் சதிநாசம்

...மிகப்பயங்கரமான மோசடி நாம் அனைவரும் இணையத்தில் பயன்படுத்தும் யுனிகோடுவை சமசுக்கிருத மயமாக்கும் மோசடி... சதிநாசம்.. தமிழ்மொழிக் கொலை.. கொடூரம்..!!


சிறீரமண சர்மா என்பவர், தற்போது இருக்கும் தமிழ், கிரந்த எழுத்துக்களோடு பிற சமசுக்கிருத எழுத்துக்களையும் சேர்க்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்.

ஏற்கனவே தமிழ் எழுத்தில் Ja Jaa Ju Juu எழுத்துக்கள் இருக்கின்றனவே என்று குழம்புகிறீர்களா?அந்தக் கிரந்த எழுத்துக்களை ஏற்கனவே யுனிகோடுவில் சேர்த்தாயிற்று. தற்போது சேர்க்கப்பட இருப்பவை இதுவரை எந்தத் தமிழனும் பார்த்துக் கூட இருக்காத பிற சமசுக்கிருத எழுத்துக்களாகும்.

யுனிகோடு சேர்த்தியம் (unicode consortium) வழியாக யாரும் அறியாமல் எல்லா சமசுக்கிருத எழுத்துக்களையும் தமிழோடு சேர்த்து விட்டு, அதனை "Extended Tamil" என்று ஆக்கிவிட்டால் தமிழர்களும், “ஆகா தமிழ் என்று இருந்தது.

இப்போது Extended என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்வதால் தமிழ் வளர்ச்சியைத்தானே காட்டுகிறது” என்று மகிழ்வார்கள் அல்லது மயக்கிவிடலாம் என்ற குறிக்கோளோடு இந்தப் படுகொலை திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் யுனிகோடுவை இப்பொழுதுதான் தமிழக அரசு அங்கீகரித்தது என்பது கவனிக்கத்தக்கது. அண்மைய செம்மொழி மாநாட்டின் போதுதான் தமிழக அரசு அங்கீகரிப்பைவெளியிட்டது. ஆனால் அது முடிந்த 3 மாதங்களிலேயே யுனிகோடுவை சமசுக்கிருதமயமாக்கும் முயற்சிகள் ஏறத்தாழ வெற்றிபெற்ற நிலையில் இருக்கின்றது கவலைப்பட வைக்கும் விதயமாகும்.

யுனிகோடு சேர்த்தியத்திற்கு மறுப்பினை தமிழக அரசாங்கம் சொல்லக் கடைசி நாள் 25 அக்டோபர் 2010.

அதற்குள் மறுப்பு போய்ச் சேரவில்லை என்றால் தமிழ், நீள்தமிழ் ஆகி, Ja Jaa Ju Juu போன்ற எழுத்துக்கள்இருந்தால் மட்டும் பற்றாது என்று எல்லா சமசுக்கிருத எழுத்துக்களையும் உள்வாங்கி அழியத் தொடங்கும் அவல நிலைக்குத் தள்ளப்படும்.

மேலும் படிக்க:- http://pettagam.blogspot.com/2010/10/unicode.html

இதைத் தடுத்து நிறுத்த நம்மால் ஆன முயற்சி.. நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிப்பதுதான்...

உங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து அஞ்சல் அனுப்பவும்.







  • நன்றி:- பெட்டகம் வலைப்பதிவு

சீர்திருத்தம் செய்து கிழிக்கப் போகிறார்களாம்

*(மலேசிய நண்பன் 22-08-2010 ஞாயிற்றுக்கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம் இது. மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்கள் இவ்வங்கத்தில் பதிலளிக்கிறார். எழுத்து மாற்றம் தொடர்பான அவருடைய பதிலை இங்குப் பதிவிடுகிறேன்.) -தமிழ் ஊழியன்


மணிவண்ணன், லூயி தீமோர், கெமாயாங்.
கேள்வி: தமிழ்மொழிக்கு எழுத்துச் சீர்த்திருத்தம் தேவை என்று சிலர் கட்சி கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். உண்மையிலேயே நமக்கு இப்போது எழுத்துச் சீர்த்திருத்தம் அவசியம் தானா?

பதில்: இளமை காலாவதியாகிறது. பணி ஓய்வு பெறும் காலம் வருகிறது. அந்த மாதிரியான சமயங்களில் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சியைப் பார்த்து வாழ்க்கையை ரசிக்க வேண்டும். அதை விட்டு விட்டு இருக்கிற தமிழைத் திருத்துகிறேன் என்று கிளம்பினால் மன உளைச்சல் தான் மிஞ்சும்.

இருக்கிற மனைவி அழகாகத்தானே இருக்கிறாள். இன்னும் அழகாய் ஆக்கிக் காட்டுகிறேன் என்று கிறுக்குப் பிடித்து அலையக் கூடாது. அழகாக இருந்தவளை அசிங்கமாக்கிய பாவத்தைச் சுமக்கக் கூடாது.

கணினியின் நிரல் ஆக்கத்திற்கு CPU எனும் மத்தியச் செயலகத்தின் வேகம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு Parsing எனும் கணினிக்கு உள்ளே இருக்கும் பகுத்தறித் தன்மை கூடுதலாக இருக்க வேண்டும். இது கணினி அறிஞர்களுக்குத் தெரிந்த விஷயம். இந்த Parsing கணினிப் பகுத்தறித் தன்மையைக் கூடுதலாக்க வேண்டும் என்றால் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் தேவை என்கிறார்கள் ஒரு தரப்பினர். என்னய்யா இது. அநியாயமாக இருக்கிறது. இப்போது வரும் Dual Core கணினிகள் இந்த Parsing தன்மைகளை எல்லாம் தாண்டி எங்கேயோ போய் விட்டன.

இவர்கள் என்னடா என்றால் இன்னும் பழைய குண்டு சட்டிக்குள் கும்பிப் போன குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். (குதிர்+ஐ). எங்கேயாவது காமா சோமா இருப்பான். அங்கே போய் காது வலிக்கிற மாதிரி பூ சுற்றுங்கள். இருக்கின்ற தாய்மொழியைக் கட்டாயம் ஆக்க துப்பு இல்லை. சீர்திருத்தம் செய்து கிழிக்கப் போகிறார்களாம்.


இப்போது இருக்கும் தமிழ் எழுத்துருகளை மாற்றினால் அச்சுத்துறையில் பெரிய பெரிய மாறுதல்கள் செய்ய வேண்டி வரும். உலகத்தில் உள்ள எல்லா தமிழ்ப் புத்தகங்களையும் மாற்றியாக வேண்டும். உலகத்தில் இருக்கிற எல்லா தமிழ் நிரலிகளையும் மாற்றியாக வேண்டும்.

உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களின் கணினிகளையும், ஏதாவது ஒரு வகையில் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். இப்போது தமிழில் இலவசமாக நிரலிகள் கொடுப்பவர்கள் கூட காசு கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அது மட்டுமா. சின்னச் சின்னப் பதிப்பகங்கள் எல்லாம் அடிபட்டு போகும். தமிழில் Unicode எனும் ஒருங்குறி இருக்கிறதே. அப்புறம் ஏன் அய்யா தமிழ்ச் சீர்த்திருத்தம்.

பேரும் புகழும் கிடைக்க ஆசைப் படலாம். ஆனால், உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த வேதனையில் அந்த ஆசை வரக்கூடாது. திசை மாறி வீசும் காற்றில் குளிர்காய்ந்து, ஆனந்த பைரவிக்கு காம்போதியில் சுதி தேடுவதில் அர்த்தமே இல்லை. தமிழ் மொழி சீர்திருத்தம் செய்யப்பட்ட செம்மொழி. அதைச் செத்துப் போன மொழியாக ஆக்கவேண்டாம். அந்தப் பாவத்தை ஏழேழு ஜென்மத்திற்கும் சுமக்க வேண்டாம்.

ம்அல்எ‘‘ச்இய்அ ந் அண்ப்அன் - இது என்ன எழுத்து என்று புரிகிறதா? எழுத்துச் சீர்த்திருத்தம் வந்தால் "மலேசிய நண்பன்" என்பதை இப்படியும் எழுதச் சொல்லுவார்கள். ஆக, இப்பொழுதே எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.


எழுத்தாக்கம்: மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (மலேசியா)

மூலம்: http://ksmuthukrishnan.blogspot.com/2010/08/69.html

எழுத்துச் சீர்திருத்தம் கூடவே கூடாது:- நக்கீரன் செய்தி

நக்கீரன் இதழில் வெளிவந்த செய்தி இது. ஐயா திருவள்ளுவன் இலக்குவனார் நக்கீரனுக்கு வழங்கிய நேர்க்காணல் இங்குச் செய்தியாக இடம்பெற்றுள்ளது.

மக்களுக்குத் தெரியாமல் எழுத்தை மாற்றுவது முறையா?


பெருமதிப்பிற்குரிய தமிழ் ஊழியன் அவர்களுக்கும் 'எழுத்துச் சீர்மை'யில் பங்காற்றும் என் பெருமதிப்பிற்குரிய பிற தமிழறிஞர்களுக்கும் பணிவன்பான வணக்கங்கள்!

அண்மையில்தான் நான் இணைய உலகத்துள் அடியெடுத்து வைத்தேன். வந்த புதிதிலேயே உயர்திரு. இராம.கி அவர்களின் வலைப்பூவான 'வள'வை எதேச்சையாகத்திருக்காண (தரிசிக்க) நேர்ந்ததென் பேறு! அங்கேதான் 'தமிழ் எழுத்துச் சீர்மை'யை எதிர்க்கும் சின்னத்தைக் கண்டேன். அஃது என்ன, ஏது என விவரம் அறிய நான் மேற்கொண்ட தேடல்கள் என்னை இத்தளத்துக்குக் கொண்டு வந்துசேர்த்தன. இங்கு வந்த பிறகுதான் தமிழில் இப்பேர்ப்பட்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதே எனக்குத் தெரிய வந்தது.


தீவிர தமிழ்ப் பற்றும், நாட்டு நடப்புகளை ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து கண்காணிக்கும் வழக்கமும் கொண்டிருந்தும் எனக்கே இங்கு வந்த பிறகுதான் இது தெரிகிறது எனில் பொதுமக்களுக்கு இது பற்றி என்ன தெரிந்திருக்கும்? சொல்லப் போனால், இப்படியொரு கேள்விக்கே இடமில்லை; பொதுமக்களுக்கு இப்படி ஒரு விவகாரம் நடப்பதே தெரியாது என்பதுதான் உண்மை.

இஃது அநியாயம் இல்லையா? உலகெங்கும் பத்துக் கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் ஒரு மொழியில், அந்த மக்களுக்கு எதையுமே தெரிவிக்காமல், அந்த மொழியின் அறிஞர்கள் மட்டும் -அதாவது அந்த மக்களின் எண்ணிக்கையில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லாத சிலர் மட்டும்- ஒன்று சேர்ந்து அந்த மொழியின் அடிப்படைக் கட்டமைப்பையே மாற்றியமைத்து விடப் பார்ப்பது நியாயமா? அன்னைத் தமிழ் என்ன தமிழறிஞர்களின் தலைமுறைச் சொத்தா?

பாலம் கட்டுவதற்கும், பாதை அமைப்பதற்கும், மலையை உடைப்பதற்கும், மரத்தைப் பிடுங்குவதற்குமெல்லாம் கூட மக்களிடம் கருத்துக் கேட்டு அரசாங்கங்கள் ஆட்சி புரியும் இக்காலத்தில், மக்களுடைய பண்பாட்டு உயிரான, வரலாற்று அடையாளமான, இனத்தின் உயிர்நாடியான தாய்மொழியில் கைவைப்பதற்கு முன்பு அம்மக்களிடம் கருத்து கேட்க வேண்டியது தேவையில்லையா?

ஆனால் எழுத்துச் சீர்திருத்தவாதிகள் இதுவரை மக்களிடம் இதைக் கொண்டு போகாததும் நல்லதாய்த்தான் போயிற்று! திரு. தமிழ் ஊழியன் அவர்களே! இந்தச் சீர்திருத்தத்தை எதிர்க்கும் பிற தமிழறிஞர்களே! நீங்கள் முந்திக் கொள்ள வேண்டும்! உடனே ஓர் ஏட்டினர் சந்திப்புக்கு (press meet) ஏற்பாடு செய்து மக்களுக்கு இது பற்றி நீங்கள் தெரிவிக்க வேண்டும்! தமிழ் இனத்தை -ஈழத்தில்- அழித்தது போதாதென்று அடுத்து தமிழ் மொழியையும் அழிக்க எடுக்கப்படும் இந்த முயற்சியை மக்களுக்கு நீங்கள் தெரியப்படுத்த வேண்டும்! அதுவும் 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' தொடங்குவதற்குள் இதை நீங்கள் செய்ய வேண்டும்!

ஏற்கனவே மக்கள் பயன்பாட்டிலிருந்து எழுத்துத் தமிழ் அழிந்து விட்டது. படைப்பாளிகளையும், ஊடகத்தாரையும் தவிர பொதுமக்கள் யாரும் இன்று தமிழை எழுதப் பயன்படுத்துவதில்லை. பேச்சுத் தமிழ் பற்றிச் சொல்லவே வேண்டா. ஒவ்வொரு தமிழ்ச் சொல்லுக்கு முன்னும் பின்னும் ஓர் ஆங்கிலச் சொல்லைப் போட்டுத்தான் இன்று மக்கள் 'தமிழ்(?)' பேசுகிறார்கள். பேச்சுத் தமிழ் ஏறத்தாழ தொண்ணூறு விழுக்காடு சிதைந்து விட்டது. இந்நிலையில் மக்களுக்குத் தமிழில் இருக்கும் ஒரே பயன்பாடு 'ஊடக நுகர்வு!' இந்த எழுத்துச் சீர்திருத்தம் வந்தால் அந்த ஒரே பயன்பாடும் தமிழுக்கு அற்றுப் போகும் என்பதை மக்களுக்கு நீங்கள் புரிய வைக்க வேண்டும்!

இதனால் அச்சு ஊடகங்களுக்கு விழப் போகும் பேரிடியைப் பற்றி அவர்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களையும் உங்களுடன் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

இவ்வாறு, இந்தச் சிக்கலை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் சென்று, பொதுமக்களையும் ஊடகத்தாரையும் உங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு போராடினால்தான் அதிகார வர்க்கத்தினரின் இந்தத் தமிழ்ச் சீர்(அழிப்பை)திருத்தத்தைத் தடுக்க முடியும் என்பது என் பணிவான கருத்து. இவ்வளவு அறிவுப்பூர்வமாக வாதங்களை நீங்கள் எடுத்து வைத்தும் ஏற்காத அவர்கள், மக்கள் சக்தியும் ஊடகங்களின் செல்வாக்கும் உங்கள் பின் சேர்ந்தால் எப்படி நடுநடுங்கி இந்த முயற்சியிலிருந்து பின்வாங்குவார்கள் என நான் உங்களுக்குக் கூற வேண்டியதில்லை.

எனவே அருள்கூர்ந்து பொதுமக்கள் ஊடகத்தார் என்னும் இரு மாபெரும் ஆற்றல்களையும் உங்கள் பின்னணியில் திரட்டிக் கொண்டு போராட, எங்களை(பொதுமக்களை)யும் மதித்து உங்களுடைய இந்தப் புனிதப் போராட்டத்தில் சேர்த்துக் கொள்ள நீங்கள் முன்வர வேண்டுமென வேண்டிக் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்!

நன்றி! வணக்கம்!!

எழுத்தாக்கம்:-
-இ.பு.ஞானப்பிரகாசன்,
சூன் கஅ, உ0க0, பகல் க:00.


எழுத்துச் சீரழிவுப் போக்கு தொடங்கிடுச்சுங்கோ..


தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு இணையத்தில் பரவத் தொடங்கிவிட்டது. மேலே உள்ள படத்தை ஊன்றிப் பார்க்கவும்

சீர்திருத்த அழிவி செந்தமிழின் வரிவடிவத்தைச் சிதைத்துச் சின்னபின்னப்படுத்தும் வேலையைத் தொடங்கிவிட்டது.

அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் கீழே உள்ள செய்தியைப் பார்க்கவும். இது மின்னஞ்சல் வழியாக வந்தச் செய்தி. அது அப்படியே இங்கு தரப்படுகிறது.


********* மின்மடல் செய்தி *********


இன்றைக்கு (19.6.2010) ஜீமெயில் ஆட்சென்சில் செந்தமிழ் சம்பந்த படுத்தி விளம்பரம் காட்டுச்சு.

இத்துடன் இணைக்கப் பட்டுள்ள ஒளிபடம்.

அந்த விளம்பரம் இருக்கும் சுட்டி...


.. இது தான் எழுத்து சீர்த்திருத்தமா என்று எனக்கு மயக்கமே வந்திடுச்சு.... :( :(

ஆண்டவா டமீல் பீப்பிள்களிடம் இருந்து தமிழைக் காப்பாற்றப்பா...

(எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும். சரியான தமிழ் உள்ளீட்டு கருவி இல்லை.)

அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
மின்னஞ்சல்: tamilpayani@gmail.com

தமிழி உயிர்மெய்களின் அடவு (design):- அரிய தகவல்

தமிழியில் உள்ள இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களை மாற்றி அவற்றை கிரந்தக் குறியீட்டோடு நிறுவுவதற்குத் தமிழெழுத்துச் சிதைப்பாளர்கள் இப்பொழுது பெரிதும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அதுவும் செம்மொழி மாநாடு இன்னும் 15 நாட்களில் வரப்போகிறதா? வயிற்றில் நெருப்புக் கட்டியதுபோல் இவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை ”இருக்கும் நாட்களுக்குள் குழப்பஞ்செய்து தமிழக அரசாணையைப் பெற்றுவிட மாட்டோமா?” என்று குட்டிக்கரணம் போடுகிறார்கள். கூடவே இன்னுஞ்சிலர் “கொம்புகளின் குதர்க்கம்” என்று உளறுகிறார்கள். மொத்தத்தில் ”அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்று மேலோட்டமாய்க் கூறி, அரசியலாரோடு கூடிக் குலவி, உண்மைத் திராவிட ஆர்வலரையும் ”பெரியார் பெயர் சொல்லி” ஏமாற்றி, எல்லோருக்கும் எல்லாமாய் கவடம் பேசிக் கருமமே கண்ணாய்ச் சிதைப்புவேலை செய்கிறார்கள்.

இந்தச் சிதைப்பாளர் தமிழுக்கு மட்டும் உலை வைக்கவில்லை. கூடவே தமிங்கிலம் என்னும் குறைப்பிள்ளையை பிறப்பித்தெடுக்க எழுத்துநடை போடுகிறார்கள். இந்தத் தமிங்கிலத்திற்கு 31அடிப்படை எழுத்துக்கள் பற்றாது; 51 இருந்தாற்றான் எழுதமுடியுமாம். எனவே கிரந்த எழுத்துக்களை நுழைப்பதிலும் சிதைப்பாளர்கள் மிகுவிருப்புக் கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் தமிழெழுத்துக்களைச் சிதைத்து, இன்னொரு பக்கம் தமிங்கிலத்திற்குத் தேவையான எழுத்துக்களை நுழைக்க வழி பார்த்திருக்கிறார்கள்.

உண்மையில் தமிழை எழுத இற்றைத் தமிழியிலிருக்கும் எழுத்துக்களே போதும். தேவையானால் ஏற்கனவே இருக்கும் 5 கிரந்த எழுத்துக்களைக் கொண்டு பிறமொழி ஒலிகளைக் கொண்டுவந்துவிட இயலும். தமிழெழுத்துப் பாதுகாப்பாளர்களைப் ”பண்டிதர்கள்” என்று பெயர்சொல்லிக் கேலிசெய்து, தமிழ்ப்புலவர்களை வேண்டாப்பிறவிகள் என்னுமாப்போல ஒதுக்கி வைத்து, ஒரு பண்பாட்டு ஒழிப்பே நடந்துகொண்டிருக்கிறது. வேடிக்கை பார்க்கும் பலரும், சிதைப்பாளர்கள் செய்வது ”தங்கள் அடிமடியில் கைவைக்கும் செய்கை, கொஞ்சநஞ்சம் இருப்பதையும் உருவிக் கொண்டு நம்மை அம்மணமாக்கி இச்சிதைப்பாளர்கள் ஓடப் பார்க்கிறார்கள்” என்பதை அறியாமல் ”இன்னொருவருக்கு வந்தது போல்” வாளா இருக்கிறார்கள்.

நடுவில் நிற்கும் பலருக்கும் ”தமிழ் உயிர்மெய்யெழுத்துக்கள் எப்படி எழுந்தன? அவற்றின் அடவு (design) எது?” என்ற பின்புலம் தெரியாமல் இச்சிதைப்பாளரின் முயற்சிகளுக்கு அரைகுறையாகத் தலையாட்டும் போக்கும் தென்படுகிறது. அறியாதவராய்ப் பொதுமக்கள் இருப்பதே ஏமாற்றின் அடிமானமாய் இருக்கிறது.

இந்தக் கட்டுரையின் குறிக்கோள் 2700 ஆண்டுகளாய் இங்கு மாறாது இருக்கும் தமிழி உயிர்மெய்களின் அடவை விளக்கிச் சொல்லுவதாகும்.

பழங் கல்வெட்டுக்கள், நடுகற்கள், ஓட்டுச் சில்லுகள் ஆகியவற்றை ஆராய்ந்த தொல்லியலாளர், ”இந்தியத் துணைக்கண்டத்தில் சிந்து சமவெளி காலத்திற்கு அப்புறம் எழுந்த எழுத்துக்களில் ஆகப் பழையவை தமிழ்நாட்டிலும், இலங்கை அநுராதபுரத்திலும் தான் கிடைத்திருக்கின்றன” என்று கொஞ்சங் கொஞ்சமாய் இப்பொழுது ஏற்றுக் கொள்ளுகிறார்கள். தமிழ் நாட்டில் (கரூருக்கு அருகில் கொடுமணத்திலும், தேனி மாவட்டத்திலும்) கிடைத்த தமிழிப் பொறிப்புகள் தாம் இதுவரை இந்தியாவிற் கண்ட பொறிப்புக்களில் ஆகப் பழையனவாகும். கி,மு,4/5 ஆம் நூற்றாண்டு என்றே இவற்றின் காலம் சொல்லப்படுகின்றது. இலங்கையில் கிடைத்த பொறிப்பும் தமிழிக்கு இணையாகவே தெரிகிறது.

ஒரு 70, 80 ஆண்டுகளுக்கு முன்னால் இதுபோன்ற பொறிப்புக்களை ”அசோகன் பெருமி” என்றழைத்தார்கள். இப்பொழுது அசோகன் காலத்திற்கும் முன்னால் கி.மு 4/5 ஆம் நூற்றாண்டுப் பொறிப்புக்களும் கிடைப்பதால் ”அசோகன் பெருமி என்று சொல்வது பொருளற்றது” என்ற முடிவிற்குத் தொல்லியலார் வந்துவிட்டனர். உண்மையாகப் பார்த்தால், இலங்கையிற் கிடத்த பொறிப்பு பாகத மொழியிற் கிடைத்த பெருமிப் பொறிப்பு என்றும், தமிழகத்திற் கிடைத்தது தமிழ்மொழியிற் கிடைத்த தமிழிப் பொறிப்பு என்பதுமே சரியாக இருக்கும்.

தமிழர் பலருங் கூடத் ”தமிழி” என்று பெருமிதத்தோடு இம்முற்கால எழுத்தைச் சொல்ல ஏன் தயங்குகிறார்கள் என்று புரிவதில்லை. அதை ”அசோகன் வழிப்பட்ட பெருமி”, ”தமிழ்ப் பெருமி” என்று “ஊராருக்கு வந்த செய்தியாய்” ஒட்டுதலின்றிச் சொல்வது வியப்பாக இருக்கிறது. இத்தனைக்கும் ”தமிழியில் இருந்து தான் பெருமி கிளைத்திருக்க வேண்டும், பெருமியில் இருந்து தமிழி கிளைத்திருக்க முடியாது” என்று வாதிப்பதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. [அந்தக் காரணங்களை எடுத்துரைக்க இந்தக் கட்டுரை களனில்லை. எனவே அவற்றைத் தவிர்க்கிறேன்.] தமிழி எழுத்துப் பொறிப்பு பரவலாக (அரசகட்டளைப் பொறிப்பாக அன்றி அன்றாடப் பொதுமக்களும், வினைஞரும், வணிகரும் பயன்படுத்தக் கூடிய அளவுக்குப் பரவலாக) இருந்திருக்கிறது அதாவது, தமிழரிடையே படிப்பறிவு பரவலாய் கி.மு.5/4 ஆம் நூற்றாண்டில் இருந்திருக்கக் கூடும் என்ற சிந்தனையை உணர்த்துகிறது.

இனி உயிர்மெய் அடவுகளைப் பார்ப்போம்.

  • முதலில் உயிருக்கும் மெய்க்குமே எழுத்துக்கள் அமைந்தன போலும். உயிர்மெய்களுக்கு அடையாளமாய், அடிப்படை மெய்யெழுத்தை ஒரு சதுரமாகக் கருதிக் கொண்டு அதில் இரண்டு தீற்றுக்களை (strokes) வெவ்வேறு திசைகளில் அமைத்திருக்கிறார்கள். [இனி வரப்போகும் விளக்கங்களைப் படம் 1 ஐக் கொண்டு அறிய வேண்டுகிறேன். வெறும் சதுரம் கொண்டு இரு வரிசையும், ககரத்தைக் கொண்டு இரு வரிசையுமாய் பழம் பொறிப்புக்கள் அடையாளங் காட்டப்படுகின்றன.]



வெறும் சதுரம் என்பது மெய்யெழுத்தையும், சில போது அகரமேறிய உயிர்மெய்யையும் குறித்திருக்கிறது. [இங்கே சதுரம் என்பதை மெய்க்குப் பகரமாக நான் ஓர் அடையாளம் போற் பயன்படுத்துகிறேன்.] அதாவது வெறும் சதுரத்தைப் போட்டு அதை மெய்யெழுத்திற்கும், அகரமேறிய உயிர்மெய்க்கும் வேறுபாடு தெரியாது குறித்திருக்கிறார்கள். இதே போல ஒரு தீற்று சதுரத்தின் பக்கத்திலிருந்து கிளம்பி கிழக்கே நீண்டிருந்தால் அது அகரமேறிய உயிர்மெய்யையோ, ஆகாரம் ஏறிய உயிர்மெய்யையோ குறித்திருக்கிறது. இங்கும் இருவேறுபட்ட அடையாளங்கள் ஒரே குறியீட்டிற்கு நெடுநாட்கள் இருந்திருக்கின்றன. அதாவது க், க, கா என்ற எழுத்துக்களுக்கான பொறிப்புக்களில் (இதைப்போல மற்ற 18 முப்படை எழுத்துக்களுக்கான பொறிப்புக்களில்) ஏதேனும் இரண்டு பொறிப்புக்கள் ஒன்று போலவே காட்சியளித்திருக்கின்றன. [அல்லது ஒரே பொறிப்பிற்கு இரண்டு எழுத்தடையாளங்கள் இருந்திருக்கின்றன.] மூன்று எழுத்துக்களுக்கும் மூன்று குழப்பமில்லாத பொறிப்புக்கள் எழுத்துக்களின் தொடக்கத்தில் இல்லை.

ஆனாலும், தொடக்கத்தில் தமிழ் மொழியை மட்டுமே கையாண்ட காலத்தில் இந்தச் சிக்கல் பெரிதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட (தொல்காப்பியத்தின் காலமான) கி.மு.700 களில் இருந்து கி.பி.100 கள் வரைக்குங்கூடச் சமகாலத்தில் இத்தடுமாற்றம் உணரப்படாமலே இருந்தது. ஏனென்றால் தமிழ் மொழியில் இருந்த மெய்ம்மயக்கங்கள் தமிழ் பேசுவோர்க்குத் தெரிந்து இருந்ததால், எழுத்துக் குறைபாடு புலப்படவில்லை.

தமிழ்ப் பயன்பாட்டில் சில விதப்பான வழக்குகள் உண்டு. க என்ற உயிர்மெய் வந்தால், அதற்கு முன் ங் என்ற பெய்யெழுத்துத் தான் வரமுடியும், ஞ், ந் போன்ற மெய்கள் வரமுடியாது, அதே போல க - விற்கு முன் ங என்ற உயிர்மெய்யாகவும் இருக்கமுடியாது. இது போன்ற எழுத்தொழுங்குகள் தமிழ் பேசியோருக்கு நன்றாகவே தெரிந்திருந்தன. அடுத்தடுத்து “கக” என்று வர முடியாது, முன்னால் வருவது க் என்றும் பின்னால் வருவது க என்றும் தான் அமையமுடியும். இது போல வெவ்வேறு எழுத்தமைதிகள், எந்த எழுத்துச் சொல்லின் முதலில் வரும், எந்த எழுத்துச் சொல்லின் கடைசியில் வரும், எது மெய்யெழுத்தாகும், எது உயிர்மெய் அகரமாகும் என்பவை சொல்லின் அமைப்பை வைத்துப் பெரும்பாலும் சொல்லக் கூடியதாய் இருந்தன. மொத்தத்தில் தமிழி என்னும் எழுத்து, தமிழ்மொழியை மட்டுமே எழுதப் பயன்பட்ட காலத்தில் இந்த எழுத்துக்குறையை உணரவிடாது மொழி அணி செய்து போக்கியிருக்கிறது. The Tamiz language effectively camouflaged the inherent defect in the Tamizi script. There was no realization of the problem.

கி.மு.600க்கு அப்புறம், கொஞ்சங் கொஞ்சமாகத் தமிழகத்திற்கும் மகதத்திற்கும் இடையே பொருளியல், அரசியல், மெய்யியல் எனப் பல்வேறு துறைகளில் உறவாடல்கள் கூடிப் போயின. வடக்கிருந்து வேதநெறியும், செயினமும், புத்தமும், தெற்கிருந்து உலகாய்தம், சாங்கியம், ஆசீவகம் போன்றவையும் ஒன்றோடொன்று உறவாடத் தொடங்கின. மொழிகளும் ஒன்றிற்குள் ஒன்று ஊடுறுவத் தொடங்கின. அதுகாறும் எழுதத் தயங்கிய வடபுலத்தார், தென்புலத்திலிருந்து ஏற்பட்ட தாக்கத்தில் தமிழி எழுத்தைத் தங்களுக்கேற்பப் பயன்படுத்தத் தொடங்கினர். எழுதாக் கிளவிகள் சிறிது சிறிதாய் எழுதுங் கிளவிகளாய் மாறத் தொடங்கின. தமிழ் கி.மு.700 இல் இருந்தே எழுதுங் கிளவியாய் இருந்தது. பாகதம் கி.மு.400/300 இல் தான் எழுதுங் கிளவியாயிற்று. பாலி அதற்குப் பின்னர் தான் எழுத்து நிலைக்கு வந்தது. சங்கதம் கி.பி.150 இல் தான் எழுதுங் கிளவியாயிற்று. இற்றைப் புரிதலின் படி இந்தியத் துணைக்கண்டத்தில் முதலில் எழுதத் தொடங்கிய மொழி தமிழே. இந்தக் கணிப்பில் சிந்துசமவெளி மொழியைக் கணக்கிற் சேர்க்கவில்லை. அது இந்தக் காலத்தும் படித்து அறியப்படாததாகவே இருக்கிறது.]

தமிழி என்ற எழுத்தைப் பாகதம் என்ற மொழிக்கும், பாகதம் கலந்த தமிழ் மொழிக்கும் பயன்படுத்தத் தொடங்கியபோது தான், முன்னாற் சொன்ன க், க, கா என்ற எழுத்துக்களின் பொறிப்புத் தோற்றக் குறை பெரிதாகக் காட்சியளித்தது. தமிழ் போலல்லாது பாகதத்தின் சொற்களுள் எவ்வெழுத்தும் முதலிற் தொடங்கலாம், எவ்வெழுத்திலும் சொற்கள் முடியலாம், தமிழ்போல் மெய்ம்மயக்கங்கள் கிடையா. ஒரு மெய்யெழுத்திற்கு அப்புறம் அதற்கு இனமான வல்லின உயிர்மெய்தான் பலபோதுகளில் வரும் என்ற ஒழுங்கு கிடையாது. ம் என்ற மெய்க்கு அப்புறம் க என்ற உயிர்மெய் வரலாம். தமிழில் வரமுடியாது. இவை போலச் சொல்லமைப்பினுள் வரும் எழுத்துக் கூட்டமைப்புக்கள் பாகதத்திற்கும் தமிழுக்கும் வேறுபட்டன.

எனவே மெய், அகரமேறிய உயிர்மெய், ஆகாரமேறிய உயிர்மெய் ஆகிய மூன்றிடையே தெளிந்தவேறுபாடு காட்டுவது பொறிப்பில் தேவையாயிற்று. இதற்கு எழுந்த தீர்வுகள் மூன்றாகும்.

ஒன்று, பட்டிப்புரோலு தீர்வு. இத்தீர்வில் (எந்தத் தீற்றும் சேராத) வெறுஞ்சதுரமே மெய்யெனக் கொள்ளப்பட்டது. சதுரத்திலிருந்து கிளம்பிக் கிழக்கே ஒரு தீற்றுக் கொண்ட சதுரம் அகரமேறிய உயிர்மெய்யானது. அடுத்து ஆகாரத்தைக் குறிக்க முதல் தீற்றை ஒடித்துக் கீழ்நோக்கிய கோணமாக்கி நீட்டிய படி [உடன் இருக்கும் படம் -2 இல் கண்டபடி] பட்டிப்புரோலுக் கல்வெட்டில் எழுதியிருக்கிறார்கள். [கிழக்கே நீண்ட இரண்டு தீற்றுக்கள் கொண்ட சதுரத்தை ஆகாரமாக்கியிருக்கலாம். ஏனோ, அப்படிச் செய்யவில்லை.] பட்டிப் புரோலு முயற்சி மட்டும் பழந்தமிழகத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்திருந்தால், புள்ளி என்ற கருத்தீடே நம் மெய்யெழுத்துகளுக்கு ஏற்பட்டிருக்காது.


இரண்டாவது தீர்வு வடநாட்டில் ஏற்பட்டது. இதன்படி ஒன்றின் கீழ் இன்னொரு சதுரம் இருந்தால் மேற்சதுரம் மெய்யாகவும் கீழது உயிர்மெய்யாகவும் படிக்கப்படும். [காண்க. படம் 2.] இரு ககரங்களைக் குறிக்க இரண்டு சதுரங்கள் ஒன்றின்கீழ் இன்னொன்றாய் இருக்கிறதென்று கொள்ளுவோம். இந்த இருசதுரக் கட்டைக்கு மேலே கிழக்குத் திசையில் ஒரு தீற்றுப் போடாவிட்டால் இதை ”க்க” என்றும், ஒரு தீற்றுப் போட்டால் ’க்கா” என்றும் படிக்க வேண்டும். தமிழில் உள்ளது போல் மெய்ம்மயக்கங்கள் பாகதத்தில் கிடையாது என்பதால் மேலே எந்த மெய்யோடும் கீழே எந்த உயிர்மெய்யும் சேரலாம். ”க்க” மட்டுமல்லாது “ச்க, ட்க, த்க, ப்க, ம்க.......” என்று பல்வேறு ஒலிக்கூட்டுக்கள் பாகதத்தில் வரலாம். தமிழில் ஒருசில கூட்டுக்கள் தாம் வரலாம்.

வடக்கே ஏற்பட்ட இரண்டாம் தீர்வும் ஒரு சரியான தீர்வு தான். 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இந்தத் தீர்வை ஒழுங்கான முறையிற் புரிந்துகொள்ளாது 1980 களில் ISCII உருவாக்கிய CDAC அறிஞர்களும், பின்னால் அதிலிருந்து Unicode உருவாக்கிய ஒருங்குறிச் சேர்த்திய (unicode consortium) அறிஞர்களும் தவறான முறையில் abugida என்கிற ஆகாசக் கோட்டையைக் கட்டிவிட்டார்கள். தொல்லியல், கல்வெட்டியல், எழுத்தியல் பற்றிய செய்திகளைத் தெரியாது எழுப்பிய தேற்றம் abugida வாகும். எப்படி புவி நடுவம் என்கிற தேற்றம் தவறோ (அது ஓரளவுக்கு ஒழுங்காகக் கணக்கிடும் என்றாலும்), அது போல அகரம் ஏறிய உயிர்மெய் தான் வடபுலத்து மொழிகளுக்கு அடிப்படை என்பது தவறான தேற்றம். எப்படி சூரிய நடுவத் தேற்றம் முற்றிலும் சரியோ, அது போல மெய்கள் தான் வடபுலத்து மொழிகளுக்கும் அடிப்படை என்பது முற்றிலும் சரி. இரண்டாவது தீர்வை ஒழுங்காகப் புரிந்து கொள்ளாத ஒருங்குறிச் சேர்த்தியம் மீண்டும் மீண்டும் முட்டுச் சந்திற்றான் போய் நிற்கும்.

மூன்றாவது தீர்வு தென்புலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட தீர்வு. இதன்படி, இன்னொரு குறியீடாக மாத்திரை குறைக்கும் புள்ளி என்றவொன்று உருவாக்கப் பட்டது. சதுரத்தின் மேல் புள்ளியிட்டால் அரை மாத்திரை குறைக்கப் பட்டு மெய் என்று ஆனது. புள்ளியிடாத வெறுஞ்சதுரம் அகரமேறிய உயிர்மெய் ஆனது. கிழக்குப் பக்கம் எழும்பிய, ஒரு தீற்றுக் கொண்ட சதுரம், ஆகாரமேறிய உயிர்மெய்யைக் குறித்தது. மூன்றாவது தீர்வு முற்றுமுழுதாகத் தொல்காப்பியத்திற் சொல்லப் பட்ட தீர்வு. இதுதான் தமிழ்த் தீர்வு. [காண்க. படம் 2.]


இந்த மூன்று தீர்வுகளும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் எழுந்த தீர்வுகளாய் இருக்க வேண்டும். ஒன்று முந்தியது, இன்னொன்று பின்பட்டது என்று சொன்னால் மூன்று தீர்வுகள் எழுந்திருக்கா. தீர்வு கண்டுபிடிக்கப் பட்ட சிக்கலுக்கு மீண்டுந் தீர்வு காண எந்தப் பகுத்தறியும் மாந்தனும் செய்ய முற்பட மாட்டான் என்பதால், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மூன்று தீர்வுகள் சமகாலத்தில் எழுந்திருக்கவேண்டும் என்றே முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

அடிப்படை அடவில் ஒரு சதுரத்தின் நாலுபக்கங்களிலும் ஒன்றோ, இரண்டோ தீற்றுகளைக் சேர்க்கமுடியும் என்றால் மொத்தம் எட்டு அடவுகள் அமையும், இதோடு வெறும் சதுரத்தையும் சேர்க்கும் போது 9 அடவுகள் கிடைக்கும். புள்ளி ஒட்டிய சதுரம் மெய் என்றும், எதுவுமே இல்லாத சதுரம் அகரமேறிய உயிர்மெய் எனவும், ஒரு தீற்றுக் கிழக்கில் கொண்ட சதுரம் ஆகாரத்தைக் குறித்தது என்றும் சொன்னேன். கிழக்கே இரண்டு தீற்றுக்கள் கொண்ட சதுரம் முன்னே சொன்னது போல் எதற்குமே பயன்படாது போயிருக்கிறது. ஆகார உயிர்மெய்க்காக, சதுரத்தின் கிழக்கில் இருந்து வெளிப்பட்ட தீற்று வட்டெழுத்தானபோது அது காலானது. வடபுலத்து எழுத்துக்களில் இன்றும் அது அடிப்படை எழுத்தில் இருந்து பிரியாது ஒட்டிக் கொண்டு இருக்கிறது. தமிழி எழுத்து வட்டெழுத்தாகிப் பின் வீச்செழுத்தாகிப் பின் அச்செழுத்துக்காக அறவட்டாகப் பிரிக்கப்பட்டுக் காலானது.

இனி, மற்ற உயிர்மெய்களுக்குப் போவோம்.


ஒரு தீற்று சதுரத்தின் மேலிருந்து கிளம்பி வடக்கே நீண்டிருக்குமானால் அது இகர உயிர்மெய் எனப்பட்டது. இரு தீற்றுக்கள் சதுரத்தின் மேலிருந்து கிளம்பி வடக்கே நீண்டிருக்குமானால் அது ஈகார உயிர்மெய் எனப்பட்டது. சதுரத்தின் மேலிருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்ட தீற்றுக்கள் வட்டெழுத்தும், வீச்செழுத்தும் எழுந்த வகையாற் திசைமாறிக் கொக்கியாகவும், சுழிக்கொக்கியாகவும் மாறின. ஆனாலும் இன்றுவரை (2700 ஆண்டுகளுக்கு அப்புறமும்) அவை வடக்கு நோக்கிப் புறப்பட்டுப் பின் திரும்பியே இவை உருமாறுகின்றன.


ஒரு தீற்று சதுரத்தின் கீழிருந்து கிளம்பி தெற்கே நீண்டிருக்குமானால் அது உகர உயிர்மெய் எனப்பட்டது. இரு தீற்றுக்கள் சதுரத்தின் கீழிருந்து கிளம்பி தெற்கே நீண்டிருக்குமானால் அது ஊகார உயிர்மெய் எனப்பட்டது. சதுரத்தின் கீழிருந்து தெற்கு நோக்கிப் புறப்பட்ட தீற்றுக்கள் வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்த வகையாற் திசைமாறி இன்று சுற்று (கு - வில் வருவது), விழுது (ஙு - வில் வருவது), இருக்கை (நு - வில் வருவது), கூட்டு (கூ-வில் வருவது), சுழிச்சுற்று (பூ -வில் வருவது), இருக்கைக்கால் (நூ -வில் வருவது), கொண்டை (மூ -வில் வருவது) ஆகிய குறிகளாக மாறியிருக்கின்றன. ஆனாலும் இந்த 7 குறிகளும் கீழிருந்து தான் புறப்படுகின்றன. தெற்கில் பிறந்த தீற்றுக்கள் என்னும் குறிப்பு 2700 ஆண்டுகள் ஆனபிறகும் மங்காது இருக்கிறது. [இன்றைக்கு எழுத்துச் சிதைப்பாளர்கள் காட்டும் குறியீடோ, எழுத்தின் பக்கத்தில் கிளம்பி கிழக்கேயோ, அன்றேல் திசை திரும்பித் தெற்கே வந்தாற் போலோ, அமைகின்றன. பழைய உகரங்களின் அடிப்படைத் தீற்றுக்களை, அடிப்படை அடவை இந்த மாற்றத்தால் இவர்கள் காற்றில் பறக்கவிடுகிறார்கள். இற்றைய உகர, ஊகார உயிர்மெய்கள் பார்ப்பதற்குத் தான் ஏழு உகர/ஊகாரக் குறியீடுகளாய்த் தெரியும். அடிப்படையில் பழைய அடவுக்கொள்கை இன்னும் அவற்றுள் காப்பாற்றப் படுகிறது.]


ஒரு தீற்று சதுரத்தின் பக்கத்திலிருந்து கிளம்பி மேற்கே நீண்டிருக்குமானால் அவை எகர/ஏகார உயிர்மெய்களாகும். இவற்றை வேறுபடுத்த சதுரத்தின் மேற்பக்கத்திற் புள்ளிக் குறியீடு பயன்படும். மேற்பக்கத்திற் புள்ளியும் மேற்குப் பக்கத்திற் தீற்றும் இருந்தால் அது எகரம். மேலே புள்ளியில்லாது, மேற்குப் பக்கத்தில் மட்டும் தீற்று இருந்தால் அது ஏகாரம். மேற்கு நோக்கிப் புறப்பட்ட ஒற்றைத் தீற்று வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்த வகையாற் திசை மாறி இன்று கொம்பாக மாறியிருக்கிறது. அது கொம்பாக மாறியது முற்றிலும் இயற்கையே. மேற்கே தீற்று இருந்ததை இன்றுவரை அது நமக்கு எடுத்துரைக்கிறது.

பொதுவாகத் தீற்றுக்கள் நாலுபக்கமும் எழுந்தன. வெறுமே கிழக்குப் பக்கம் மட்டும் அவை எழவில்லை. இந்த அடிப்படை உண்மையை அறியாத சில அரைகுறைச் சீரழிப்பாளர்கள் ”கொம்புகளின் குதர்க்கம்” என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். ”ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்றாளாம்” என்று பழமொழி சொல்வார்கள். பழந்தமிழ் உயிர்மெய்களின் அடவை ஒழுங்காகப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் ”கொம்புகளின் குதர்க்கம்” என்று வீண் குதர்க்கம் பேசுகிறார்கள். குதர்க்கம் கொம்புகளிடம் கிடையாது. இந்தச் சிதைப்பாளர்களிடம் தான் இருக்கிறது. ஒற்றைக் கொம்புகளுக்கும் வீரமாமுனிவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சிதைப்பாளர்களில் ஒருசிலர் ஏன் வீரமா முனிவரைப் போட்டு இப்படிக் குதறிக் கொண்டிருக்கிறார்கள் என்று விளங்குவதேயில்லை. வீரமாமுனிவரின் பங்களிப்பைக் கீழே பார்ப்போம்.


இரு தீற்றுக்கள் சதுரத்தின் பக்கத்திலிருந்து கிலம்பி மேற்கே நீண்டிருக்குமானால் அது ஐகார உயிர்மெய்யாகும். இன்றுங்கூட ஐகாரக் கொம்பு இரட்டைக் கொம்பாகவே மலையாளத்தில் எழுதப்படும். வீச்செழுத்தில் இருந்து தமிழ் அச்செழுத்து உருவாக்கியவர்கள் இரட்டைக் கொம்பைப் பிரித்து எழுதாமல் அப்படியே சேர்த்து எழுதியபடியே வைத்துக் கொண்டார்கள். இதெல்லாம் ஒரு 350 ஆண்டுப் பழக்கம்.


இப்பொழுது சதுரத்தின் நாலு பக்கங்களிலும் இரண்டு தீற்றுக்கள் வரை போட்டுப் பார்த்தாயிற்று. [அதிலும் கிழக்கே இரண்டு தீற்றுக்கள் கொண்ட அடவு கடைசி வரைப் பயன்படாமலே போனது. மொத்தம் எட்டு அடவுகளில் ஏழு அடவுகளே தமிழிப் பொறிப்புகளுக்குப் பயன்பட்டன. இனி ஒரு தீற்று ஒரு திசையிலும் இன்னொரு தீற்று இன்னொரு திசையிலுமாக ஆகக் கூடிய அடவுகள் 6 ஆகும்.

கிழக்கு/மேற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
கிழக்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
கிழக்கு/வடக்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
வடக்கு/மேற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
வடக்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
மேற்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்ருக்கள் உள்ள அடவு

இந்த ஆறு அடவுகளில் முதல் அடவையே ஒகர/ஓகார உயிர்மெய்களைக் குறிப்பதற்குப் பழந்தமிழர் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒகரம், ஓகாரத்தை வேறுபடுத்தச் சதுரத்தின் மேற்பக்கத்திற் புள்ளிக் குறியீடு பயன்படும். மேற்பக்கத்திற் புள்ளியும் மேற்கு/கிழக்குப் பக்கங்களில் ஒவ்வொரு தீற்றும் இருந்தால் அது ஒகரம். மேலே புள்ளியில்லாது, மேற்கு/கிழக்குப் பக்கங்களில் ஒவ்வொரு தீற்றும் இருந்தால் அது ஓகாரம். பின்னால் வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்த வகையாற் மேற்குப் பக்கத்துத் தீற்று திசை மாறி இன்று கொம்பாகவும், கிழக்குப் பக்கத்துத் தீற்று திசை மாறிக் காலாகவும் உருப்பெற்றிருக்கின்றன. இந்த உருமாற்றங்களிலும் ஓர் ஒழுங்கு இருக்கிறது. கொம்பு வந்தாலே அது மேற்கேயிட்ட தீற்றின் மறுவுரு என்பதும், வெறுங்கால் வந்தாலே அது கிழக்கேயிட்ட தீற்றின் மறுவுரு என்பதும், விளங்கும். மேலே எடுத்துரைத்த ஆறு இருபக்க தீற்றுக்கள் உள்ள அடவுகளில் மீந்திருக்கும் ஐந்தும் பயன்படாமலே போயிருக்கின்றன. வேறு ஏதேனும் புதுக் குறியீடுகள் எதிர்காலத்தில் ஏற்படுமானால் அந்த அடவுகளை எண்ணிப் பார்க்கலாம்.

ஔகாரத்திற்கு என்று எந்தக் குறியீடும் தொடக்க காலத்தில் இல்லை. தொடக்க காலத் தமிழியில் 11 தீற்றுக் குறிமுறைகளே இருந்திருக்கின்றன.

தமிழி எழுத்துக்களின் அடவு அடிப்படை 2 தீற்றுக்களும், ஒரு புள்ளியும் தான். புள்ளியும் கூட மெய்யெழுத்தைக் குறிப்பதற்கும், எகர/ஏகாரங்களிலும், ஒகர/ஓகாரங்களிலும் குறில்/நெடில் வேறுபாடு காட்டவும் மட்டுமே பயன்பட்டிருக்கிறது. [ஒருவேளை தொடக்க காலத்தில் இந்தக் குறில் நெடில் வேறுபாடு தமிழில் இல்லை போலும். இதைப் பற்றிய விளக்கம் நம் எகர/ஏகார, ஒகர/ஓகாரச் சொற்களின் ஒரு பொருள்/வேறொலிப்புச் சிக்கலுக்குள் கொண்டுபோகும். எனவே அதைத் தவிர்க்கிறேன்.]

மொத்தத்தில் தொடக்க காலத்து அடவு என்றவகையில், இதில் செய்துபார்த்துத் திருத்திக் கொள்ளும் பாங்கு இருக்கிறது. இன்றுவரை அந்தப் பாங்கு மாறவில்லை. வீரமாமுனிவர் எகர/ ஏகாரங்களிலும், ஒகர/ஓகாரங்களிலும் வரும் புள்ளியைத் தவிர்த்து மேற்கே வரும் கொம்பை ஒற்றைச் சுழியாகவும் இரட்டைச் சுழியாகவும் மாற்றியமைத்தார். அது கொம்புகளில் இருந்து கிளைத்த ஒரு மாற்றம் என்ற அளவில் அடிப்படை அடவைக் குலைக்கவில்லை. இப்பொழுதும் மேற்கே இருந்து கிளைத்த தீற்றை அவை இன்னமும் நினைவூட்டுகின்றன.

இதுநாள் வரை இருக்கும் தமிழி அடவிற்கு மீறிச் சொல்லப்படுகிற எந்த முயற்சியும் 2700 ஆண்டுகள் (தொடக்க நிலை, வட்டெழுத்து நிலை, வீச்செழுத்து நிலை, அச்செழுத்து நிலை என எல்லாவற்றிலும்) தொடர்ந்து வந்த போக்கைக் குலைக்கும் ஒன்றாகும்.

வரிவடிவம்:- சப்பானியன் காப்புணர்வும் தமிழன் சிதைப்புணர்வும்

தன்னுடைய தாய்மொழியின் எழுத்து வடிவத்தைக் காப்பதற்குச் சப்பான்காரன் பெரும்பாடு படுவதற்கும் அஞ்சுவதே இல்லை. எவ்வளவு சிக்கல் - சிரமம் எதிர்கொண்டு வந்தாலும், தொழில்நுடபம் வேகமாக வளர்ந்தாலும், படிப்பதற்கும் எழுதுவதற்கும் இடர்பபடுகள் ஏற்பட்டாலும் தங்கள் மொழியின் வரிவடிவத்தை நிலைப்படுத்துவதில் சப்பானியர் உறுதியாக இருக்கின்றனர்.

தொழில்நுட்பத்திற்காகவோ வேறு எந்த காரணத்திற்காகவோ சப்பானியர் தங்கள் எழுத்தில் தலைகீழ் மாற்றங்களைச் செய்துகொள்ளவில்லை. மொழியின் தனித்த அடையாளம் சிதைந்து; சீரழிந்துபோகும் அளவுக்கு எழுத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக, தங்களுடைய வரிவடித்தின் தனி அடையாளத்தையும் தனிச்சிறப்பையும் பாதுகாப்பதில் அவர்கள் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் - எந்த அளவுக்கு மெனக்கெடுகிறார்கள் என்பதற்கு இந்தச் செய்தி நல்ல சான்று.
//இரங்கானா அல்லது கதங்கானா முறையில் அல்லது ரோமானிய (ஆங்கில) எழுத்துகளில் சப்பானிய எழுத்துகளை அடித்தால், படவெழுத்துகள் வரும் முறையில் கணிப்பலகையை (Keyboard) அமைத்துள்ளனர். 'கஞ்சி' எழுத்துகளின் உச்சரிப்பினைத் தட்டச்சு செய்தால், கஞ்சி அச்சில் வரும் முறையில் விசைப்பலகையை அமைத்துக்கொண்டார்களே தவிர, விசைப்பலகையின் விசைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப எழுத்து வடிவங்களைச் சிதைத்துக் கொள்ளவில்லை. அன்றாடம் ஏறத்தாழ 2000 கஞ்சி வடிவங்களைப் பயன்படுத்தும் தேவை உள்ளது. இதனால், மிகவும் மெதுவாகவே கணியச்சிட முடிகிறது.
  • இதனைத் தவிர்க்க ஒருவர் கண்டுபிடித்த முறையே பன்முரசு முறைக் கணிப்பலகை. சப்பானியர்கள் தங்கள் எழுத்தைச் சிதைக்கவில்லை. மாறாகத் தேவைக்கேற்ப கணினி விசைப்பலகையை அமைத்துக்கொண்டு தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றனர். //
சப்பானியரின் இந்த உயர்ந்த மொழிமானம்; எழுத்து வடிவக் காப்புணர்வோடு, இன்று தமிழ் எழுத்துகளைச் சிதைக்கப் புறப்பட்டிருக்கும் தமிழர்கள் சிலரின் மொழி உணர்வு; வரிவடிவக் காப்பு உணர்வையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; ஓர்ந்து பாருங்கள்.
  • இ, ஈ, உ, ஊகார தமிழ் எழுத்து வரிவடிவத்தைச் சிதைத்து புதிய வகையிலான எழுத்து வடிவத்தை அறிமுகப்படுத்த துடியாகத் துடித்துக்கொண்டிருக்கும் சிலருக்கு இதனைச் சிந்திக்க நேரமில்லாமல் போகலாம். அல்லது இதனைக் கண்டும் காணாததுபோல கண்மூடி - வாய்ப்பொத்தி மௌனியாக இருந்துவிடுவார்கள்.
ஆனால், உண்மைத் தமிழ் பற்றாளர்களும் நடுநிலையாளர்களும் உலகம் முழுவதும் பரந்து இருக்கின்றனர். அத்தகையவர் அன்புகூர்ந்து இதனைச் சிந்திக்க வேண்டும்; எழுத்துச் சீரழிப்பைத் தடுப்பதற்கு தகுந்த செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். காரணம்,
இப்போது இல்லாவிட்டால்; இனி
என்றுமே தமிழைக் காப்பாற்ற முடியாது.

சீனத்தைக் காட்டி தமிழைச் சீர்திருத்தும் சதிநாச வேலை


இ, ஈ, உ, ஊகார வரிசையில் உள்ள 72 எழுத்துகளைச் சீர்திருத்த வேண்டும் என்று அறிவாளிகள் கும்பலொன்று அறிவிலித்தனமாக இயங்கிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆய்வுக்குரிய தருக்கங்களையோ அல்லது அறிவுக்குப் பொருந்திய ஏரணங்களையோ அல்லது பகுத்தறிவுடன் கூடிய வாதங்களையோ முன்வைக்க மாட்டாமல், உப்புச் சப்பில்லாத காரணங்களை முன்வைத்து எழுத்துச் சீர்திருத்தத்தைப் பரப்புரை செய்கிறார்கள். அவை:-

1.இந்தச் சீர்த்திருத்தத்தால் தந்தை பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்துச் சீர்மை நிறைவு பெறும்.

2.சீன மொழி மிகப்பெரிய சீர்திருத்ததிற்கு உள்ளாகினதால் இன்று வளர்ச்சி அடைந்திருக்கிறது.

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதையாக மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லி - அறைத்த மாவையே அறைப்பது போல - துவைத்த துணியையே துவைப்பது போல இந்த இரண்டு காரணங்களை மட்டுமே வாயில் நுரைதள்ள சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ‘எழுத்துச் சிதைப்பாளர்கள்’.

ஆனால், அந்தச் சிதைப்பாளர்களின் வாதங்களை அடித்து நொறுக்கும் வகையில் அண்மையில் ஐயா நாக.இளங்கோவன் அவர்கள் ஆழமான ஆய்வினை வெளியிட்டுள்ளார். கடந்த மே16இல் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் நடத்திய ‘எழுத்து மாற்ற எதிர்ப்பு மாநாட்டில்’ இந்த ஆய்வு வெளியிடப்பட்டது.

இப்போது, அது காணொளி வடிவத்தில் வந்திருக்கிறது; தமிழ் எழுத்து மாற்றத்திற்கு சீன மொழியை மேற்கோள் காட்டிப் பேசும் ‘எழுத்துச் சிதைப்பாளர்களின்’ வாதங்களை தூள்தூளாக்கிப் போடுகிறது.

அதுமட்டுமல்லாமல், தந்தை பெரியாரைக் காட்டிக் காட்டி கருத்து பர(ச)ப்பும் ‘எழுத்துச் சிதைப்பாளர்களின்’ முகமூடியை ‘டர்ர்ர்ர்ர்ர்ரென’ கிழித்துப் போடுகிறது. பகுத்தறிவு பேசிய பெரியாரின் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் சதிகாரர்களின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

அனைவரும் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய காணொளி இது. அறிவுடைமைப் பண்பும் நடுநிலைப் போக்கும் உடையவர்கள் அமைதியாகக் கண்டு - கேட்டு - சிந்தித்து - சீர்தூக்கிப்பார்க்க வேண்டிய அரிய காணொளி இது.

பகுதி 1



">பகுதி 2



">பகுதி 3