தமிழ் எழுத்துகளில் இருக்கும் இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சில தரப்பினர் முயன்று வருவது குறித்து கடந்த இடுகையில் எழுதி இருந்தேன். இந்த எழுத்து மாற்றத்தைச் செய்வதற்கு முன்மொழியப்படும் எழுத்து அமைப்பு பற்றியும் விளக்கி எழுதியிருந்தேன். மேலும், இந்த மாற்றத்தினால் தமிழ்மொழிக்குத் துளியளவு நன்மையும் கிடையாது என்பதையும் எழுதிருந்தேன். (அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும்)
இந்தத் தொடரில், தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் முன்னைக்கப்பட்டுள்ள இன்னுஞ்சில முன்மொழிவைப் (Suggestion) பற்றி அறிந்துகொள்ள உங்களை அழைக்கிறேன்.
இன்று தமிழ் எழுத்துச் சீர்த்திருத்த மேதைகளின் கண்களை அதிகம் உறுத்துவது உகர, ஊகார எழுத்துகள்தாம். அதனால், இவ்விரு வரிசை எழுத்துகளை மாற்றி அமைக்கவே முயற்(சூழ்ச்)சிகள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை எப்படி மாற்றி அமைக்கலாம் எனச் சீர்த்திருத்த மேதை ஒருவர் சொல்லியிருக்கும் எழுத்து வடிவங்கள் கீழே உள்ளன.
மாதிரி 1:-
இன்னொரு ஆய்வாளர், தமிழ் மற்ற மொழிகளுக்கு இணையாகச் செயல்பட வேண்டுமானால் கீழே உள்ளபடி தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்கலாம் என முன்மொழிகிறார்.
மாதிரி 2:
இப்படியாக, ஆளாளுக்குத் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்க முனைந்தால், தமிழ் வரிவடிவத்தின் நிலைமை என்னவாகும் என்று எண்ணிப்பாருங்கள்?
நீண்ட காலத்தில் தமிழ்மொழிக்கு ஏற்படப்போகும் விளைவுகளை ஆராய்ந்து பாருங்கள்?
இந்தச் சூழலில், தமிழ்மொழியில் புதிய எழுத்து மாற்றத்தை அறிமுகப்படுத்த விரும்பும் சிலர், மிகவும் நாசுக்காக சில வரலாறுக் காரணங்களை மேற்கோள் காட்டுகின்றனர். அவை:-
1)தமிழ் எழுத்துகள் பல நூற்றாண்டுகளாக மாற்றத்திற்கு உள்ளாகி வந்துள்ளன.
2)வீரமாமுனிவர் எகரத்திலும் ஒகரத்திலும் (எ, ஏ, ஒ, ஓ) மாற்றத்தைச் செய்திருக்கிறார்.
3)தந்தை பெரியார் காலத்தில் செய்யப்பட்ட எழுத்து மாற்றம் இன்று நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது. (லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ, ணை, னொ, னோ)
மேலே சொல்லப்பட்டுள்ள எழுத்துச் சீர்திருத்தங்கள் தமிழ்மொழியில் ஒரு செப்பமான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இனியும் எந்தவித சீரமைப்போ மாற்றமோ தேவையில்லாத அளவுக்கு இன்று தமிழ்மொழி வடிவம் பெற்றுவிட்டது எனலாம். தற்போது இருக்கும் தமிழ் வரிவடிவங்கள் தகவல்தொழில்நுட்ப உலகத்திலும் எந்தவித சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தப்படுகின்றன.
ஆக, இனியும் தமிழைச் சீர்த்திருத்த வேண்டிய தேவையும் அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், சிலர் எழுத்து மாற்றத்தை வலிந்து செய்ய விரும்புகிறார்கள் என்றால், அதில் ஏதோ சில மறைமுக நிகழ்ப்பு (Hidden Agenda) அல்லது கமுக்கத் திட்டம் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.
அப்படி ஏதும் இருக்குமானால், அது கண்டிப்பாக கீழே கூறப்பட்டவையாகவோ அல்லது அவற்றுக்குத் தொடர்புடையதாகவோதான் இருக்க முடியும். அவை:-
1)நீண்ட காலத்தில் தமிழின் இருப்பை மழுங்கடித்தல்.
2)தமிழ்மொழியின் தனி அடையாளத்தைச் சிதைத்தல்.
3)தமிழ் நெடுங்கணக்கின் செவ்வியல் அமைப்பைச் சின்னபின்னப்படுத்துதல்.
4)தமிழ் வரிவடிவத்துக்கே உரிய தனி எழுத்தமைப்பை அழித்தொழித்தல்
5)தமிழ் எழுத்துகள் தனி எழுத்துகள் அல்ல. மாறாக வடமொழி எழுத்துகளிலிருந்து திருந்தவை என்ற ஒரு தோற்றத்தை எதிர்காலத்தில் பரப்புதல்.
6)பழைய தமிழ் கருவூலங்களை படிக்க முடியாமல் செய்தல்.
7)தமிழின் தொன்மையில் ஐயத்திற்குரிய பிறழ்ச்சிகள் எதிர்காலத்தில் உண்டாவதற்கு வழியமைத்துக் கொடுத்தல்.
8)தமிழ் இலக்கண, இலக்கிய, அறிவு, பண்பாட்டு, வரலாற்றுச் செல்வங்கள் எதிர்காலத் தலைமுறைக்குச் சென்று சேருவதைத் தடுத்தாட்கொள்ளுதல்.
9)தகவல்தொழில்நுட்பம், கணினி, இணையம் சார்ந்த துறையில் தமிழ்மொழி அடைந்துவரும் வேகமான முன்னேற்றங்களை முறித்துப்போடுதல்.
10)நாளைய மின்னணுவியல் ஊழியில் தமிழ்மொழிக்கு எந்தவொரு இடமும் கிடைத்துவிடக்கூடாது என்பதை உறுதிபடுத்துதல்.
இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால், இவற்றைப்பற்றி எல்லாம் சிறிதுகூட கவலையே படாத எழுத்துச் சீர்திருத்த மேதைகள் சிலர் தமிழ் எழுத்துகளை மாற்றியே ஆகவேண்டும் என்று பல வழிகளில் முயன்று வருவதாக அறியப்படுகிறது.
அதற்கு ஏற்றாற்போல, கணினி உலகம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல் பார்வை, தமிழ் கற்றல், தமிழ் வளர்ச்சி, எழுத்துச் சீர்மை என்று பல பூதாகரமான சொல்லாடல்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் என்ற பெயரில் நுனிப்புல் மேய்வுகளை வழங்கி தமிழ் மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் நல்லறிஞர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் குரல் கொடுக்க வேண்டும் – கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும்.
தமிழ் எழுத்து மாற்றம் தேவையற்றது என்பதைத் தக்க சான்றுகளோடு நிறுவ வேண்டும்.
தமிழ் வரிவடிவத்தை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் எந்தவொரு நிகழ்ப்பையும் (Agenda) முறியடித்துப்போட வேண்டும்.
- எழுத்தாக்கம்:-
- சுப.நற்குணன், மலேசியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக