எழுத்துச் சீர்மை பிரச்சனையில் ஒரு சில செய்திகளை முன்வைக்க விரும்புகிறேன். தமிழில் எழுத்துகள் (Graphemes) ஒலியனுக்கும் (Phonemes) அசைக்கும் (Syllables) உண்டு. எனவே ஒலியன் பற்றியும் அசை பற்றியும் தெரிந்துகொள்வது நல்லது.
தமிழில் கடல், தங்கம், பகல் ஆகிய மூன்று சொற்களில் முதல் சொல்லில் உள்ள க ஒலிப்பில்லா தடையொலி. இரண்டாவது சொல்லில் உள்ள க (மெல்லினத்திற்குப் பின்னர் வருகிறது) ஒலிப்புள்ள ஒலி. மூன்றாவது சொல்லில் உள்ள க இரண்டு உயிர்களுக்கு நடுவில் வருகிற உரசல்தன்மை கொண்ட ஒரு ஒலி. மூன்றின் வருகையும் வருகிற சூழல்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒன்று வருமிடத்தில் மற்றொன்று தமிழில் வராது.
எனவே அவற்றை ஒரே ஒலியனின் மாற்றொலி (allophones) என்று கூறுவார்கள். தமிழில் ஒலியனுக்குத்தான் வரிவடிவம் - எழுத்து - உண்டு. இது மிக அருமையான அறிவியல் முறையாகும். க என்ற எழுத்தைச் சொல்லில் அது வருகின்ற இடத்தை அடிப்படையாகக் கொண்டு, மேற்குறிப்பிட்ட மூன்று உச்சரிப்பில் சரியானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.
எனவே மூன்று ஒலிகளுக்கும் தனித்தனி வரிவடிவம் தேவையில்லை. மாறாக வடமொழிகளில் மூன்றுமே தனித்தனி ஒலியன்கள். எனவே அங்கே அவற்றிற்குத் தனித்தனி எழுத்துகள் உண்டு. அடுத்து அசை பற்றியது. மெய் ஒலிகள் தடையொலிகள் (sounds produced by obstruction of air) . எனவே அவற்றைத் தனித்து ஒலிக்க இயலாது.
உயிரொலிகள் தடையற்ற ஒலிகள். எனவே தனித்து அவற்றை ஒலிக்கமுடியும். நாம் பேசும்போது, உயிர் தனித்து வரலாம். மெய்யானது உயிரோடு இணைந்துதான் வரும். உயிர் தனித்து வந்தாலும், மெய்யோடு இணைந்து வந்தாலும் அவை தனித்தனி அசை எனப்படும். இந்த அடிப்படையில் ஒவ்வொரு உயிர்மெய்யும் ஒவ்வொரு அசையாகும்.
எனவே தமிழில் 30 ஒலியன்களுக்குத் தனித்தனி எழுத்துகள் (scripts for phonemes) . அதுபோன்று ஒவ்வொரு அசைக்கும் தனித்தனி வரிவடிவங்கள் (Syllabic scripts) . எனவே தமிழ் எழுத்துமுறை ஒலியன் மற்றும் அசை எழுத்து முறையாகும்.
அசை எழுத்தில் மெய்யும் உயிரும் இணைந்து வரும்போது, உயிர் ஒலியனுக்கு உரிய வரிவடிவம் (Graphems) அப்படியே வராமல், அதற்குரிய துணைவடிவம் (allographs) வரும். இந்தத் துணைவடிவங்களில்தான் சில பிரச்சனைகள். ஒரு உயிருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துணைவடிவங்கள் உள்ளன. இதனால் அச்சுத் தொழிலில் சில பிரச்சனைகள் இருந்தன.
தமிழர் அல்லாதவர்கள் கற்கும்போதும் சில பிரச்சனைகள் உண்டு. ஆனால் தாய்மொழியாகத் தமிழைக் கற்பவர்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆகாரம், ஐகாரம் ஆகியவற்றிற்கானத் துணைவடிவங்களும் அச்சுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டுதான் மாற்றப்பட்டது. தமிழர்களால் கற்றுக்கொள்ள முடியவில்லை என்பதற்காக மாற்றப்படவில்லை.
ஆனால் தற்போது அச்சிலும் கணினி வளர்ந்துவிட்டபிறகு, பிரச்சனையே இல்லை. எத்தனை வரிவடிவங்களையும், எவ்வளவு சிக்கலான வடிவங்களையும் கணினியில் கொண்டுவர முடியும். தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பவர்களும் சற்று கவனத்தோடு கற்றுக்கொண்டால் எளிது.
ஆங்கிலத்தில் ஒரே எழுத்துக்குப் பல்வேறு ஒலிகள் உள்ளன. நாம் அவற்றைக் கற்றுக்கொள்ளவில்லையா? city என்பதில் C ஆனது ஒருவகையாகவும், cut என்பதில் ஒரு வகையாகவும் உச்சரிக்கப்படவில்லையா? நமது சிரமங்களுக்காக ஆங்கிலத்தில் மாற்றுகிறார்களா? இல்லையே.
ஒவ்வொரு மொழிக்கும் சில தனித்தன்மைகள் உண்டு. எனவே தமிழில் உயிர் ஒலியன்களுக்குத் துணைவடிவங்களில் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட வரிவடிவம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
எழுத்தாக்கம்:-
ந. தெய்வ சுந்தரம்,
தமிழ் மொழித்துறைப் பேராசிரியர்,
மொழியியல் ஆய்வுப்பிரிவு இயக்குநர்,
சென்னைப் பல்கலைக்கழகம்.
மின்னஞ்சல்:-mailto:-mndsundaram@hotmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக