தமிழில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமா? அப்படி அவசியமானால், எத்தகைய மாற்றங்கள்? என்ற கேள்விகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு உதவியாகச் சில தெளிவுகளை நாம் இங்கே தொகுத்துக் கொள்ளலாம்.
முதலாவது :
11)தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கோ ஆங்கில மொழிக்கோ நாம் எதிரிகள் அல்ல. எனினும் இவை இரண்டுமே அவற்றின் உண்மையான பயன்பாட்டுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்படுகின்றன என்பது நம் கருத்து. சில சமயங்களில், தேர்தல் காலங்களில் ஒரு கட்சிக்குச் சார்பாக ‘அலை’ வீசுவதைப் போலவே இந்தத் ‘தகவல் தொழில்நுட்ப _ ஆங்கில’ அலையும். அது அடங்கி ஓயுமா நீடித்துப் பாயுமா எனத் தெரியாமல், தற்சமயம் வீசும் அலையால் அடித்துச் செல்லப்பட்டு மொழியையும் அதற்கு அடகுவைப்பதைவிட, அந்த அலையின் நிலைதிறனை ஆய்வுக்குட் படுத்தி, அது செல்லும் திசையைத் தீர்க்கதரிசன மாய்க் கணித்து, தொலை நோக்குப் பார்வையுடன் மாற்றங்களைச் செய்வதையே நாம் வலியுறுத்துகிறோம். காற்றுள்ளபோதேதூற்றிக் கொள்ளலாம்தான். ஆனால், ஆடிப் பட்டம் தேடி விதைப்பது அதனினும் சாலச் சிறந்தது.
இரண்டாவது :
12)தகவல் தொழில்நுட்பத்திற்கு ஏற்பத் தமிழ் மொழியைச் செப்பனிட்டுவிட்டால் மட்டும் தற்போதுள்ள ஆங்கில ஆதிக்கமோ ஆங்கில மோகமோ குறையப் போவதில்லை. ஏனெனில், இது மொழியையும் கடந்த அனைத்துலகப் பொருளாதார அரசியல். உலகச் சந்தையைக் கட்டுப்படுத்தும் நாட்டின் மொழி உலக அரங்கில் கொடிகட்டிப் பறப்பதில் வியப்பில்லை. எனவே, இதைத் தமிழ் மொழிக்கான சவால் என்பதைவிட, தமிழினத்திற்கான சவாலாகவே காணவேண்டும். உலகச் சந்தையில் தமிழர்கள் சாதித்தால் உலக அரங்கில் தமிழ் மொழியும் சாதிக்கும்.
மூன்றாவது:
13)‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே....’ எனத் தொடங்கி மேடையிலே வீராவேசம் கொப்பளிக்க முழங்குவது தமிழரின் ஒரு முகம் என்றால், பிற இனத்தாரோடு தன்னை ஒப்பிட்டு, சுய கழிவிரக்கம் கொண்டு தாழ்வு மனப்பான்மையில் உழல்வது மற்றொரு முகமாக உள்ளது. இதன் விளைவுதான் ஆங்கிலத்திற்கு அபரிமிதமான முக்கியத்துவம் தந்து, எங்கே பந்தயத்தில் நாம் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் மொழியைக்கூட விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்கும் போக்கு.
14)இந்தக் கிடுக்கிப் பிடியிலிருந்து விடுபட வேண்டுமானால் நாம் கேட்க வேண்டிய தலையாய கேள்வி, “தமிழில் என்ன சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம்?’’ என்பதல்ல, “உலக அறிவுக் கருவூலத்தில் எவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளோம்?’’ என்பதே.
நான்காவது :
15)தமிழருக்குச் சொந்தமான நிலத்தில் தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் தமிழே ‘ஆட்சி’ மொழியாக நிலவவேண்டும் என்று கோரிக்கை வைத்தாலே ‘மொழி வெறியர்’ என்ற பட்டம் சூட்டப் பெறும் அவலம் வேறெந்தத் தேசிய இனத்திலும் காண முடியாதது. ஒரு மொழி எப்போது ‘ஆளும்’ என்றால், அம்மொழிவழிக் கற்றோருக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்போது எனலாம்.
16)இதற்கென உறுதியான அரசியல் தீர்மானம் எடுத்து, அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் திராணி ஒரு அரசுக்கு இல்லையென்றால், அந்த மொழி ‘ஆளுகிறது’ என்பதில் அர்த்தமில்லை. வாழாத, வாழவைக்காத மொழி ஆளுவது எப்படி? சோத்துக்கு உத்திரவாதம் தராத எந்த மொழியும் செத்துப் போகும்; செத்துத்தான் போக வேண்டும்.
ஐந்தாவது:
17)மாற்றத்தை விழையும் எந்தவொரு தேடலுக்கும் அடிநாதமாக விளங்குவது, ‘யாரை முன்வைத்து மாற்றம்?’ என்ற கேள்வி. ‘எத்தகைய மாற்றங்களால் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்குத் தமிழால் ஈடுகொடுக்க முடியும்?’ என்ற ஆர்வத்தைவிட, “தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத தமிழரின் எண்ணிக்கையைக் குறைக்க இதனால் முடியுமா? என்ற அக்கறையே நம்மை வழிநடத்தும் உந்துசக்தியாகத் திகழ வேண்டும். (3 ஆம் பாகத்தில் தொடரும்..)
- பாகம் 1 / பாகம் 2 / பாகம் 3
எழுத்தாக்கம்:-
முனைவர் ச. ராஜநாயகம், லயோலா கல்லூரி
மூலம்: http://www.keetru.com/vizhi/jan08/rajanayagam.php
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக