எழுத்துச் சீர்மையால் மொழித்திறன் கூடும்?

எழுத்துச்சீர்மை பற்றிய பேரா. வா.செ.கு அவர்களின் உரையைக் கண்டேன்.

தமிழ் உயிர்மெய்யெழுத்துகளில் ஆ, ஐ, எ, ஏ, ஒ, ஓ, ஔ வரிசைகளை எழுத அந்தந்த மெய்யெழுத்துகளையும் அவற்றுக்கு முன்பும் பின்பும் சில குறியீடுகளையும் பயன்படுத்துகிறோம். இது போல், இ, ஈ, உ, ஊ வரிசைகளை எழுதுவதற்காகப் புதிய குறியீடுகளை அறிமுகப்படுத்துகிறார்.

இந்தச் சீர்திருத்தத்தை முன்வைப்பதற்கு முக்கிய காரணமாக தமிழகத்துக்கு வெளியே 15 இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றும் இச்சீர்திருத்தம் அவர்கள் இலகுவாகத் தமிழ் கற்க உதவும் என்றும் சொல்கிறார். இந்த அடிப்படையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இத்தொகையைக் காட்டிலும் பெரிய மக்கள் தொகையை அயலகத்தில் கொண்டுள்ள மொழிகள் எத்தனையோ உள்ளன. (எடுத்துக்காட்டுக்கு, சீனம்.) இந்த மொழிகள் எவையும் இதற்காக தங்கள் எழுத்து முறையை மாற்றுவதில்லை.

அயலக மக்கள் மொழியைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அவர்களுக்குத் தாயக மக்களுக்கு உள்ள கல்வி, சமூகச் சூழல் வாய்க்காததே முக்கிய காரணம். இப்படி ஒரு எழுத்துச் சீர்திருத்தம் செய்தால், அவர்கள் மொழித்திறன் கூடும் என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படை ஆய்வும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்க, இந்த மாற்றம் அவர்களுக்காக தாயகத் தமிழர்களையும் சேர்த்துக் குழப்பும்.

பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம் என்று இதனைக் குறிப்பிடுவதும் ஏற்புடையதாக இல்லை.

அச்சு வில்லைகள் தொடர்பான (நிறுவக் கூடிய) நடைமுறைப் பிரச்சினையின் காரணமாக பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் வந்ததாக கேள்வி.

அதுவும் அவர் புதிதாக குறியீடுகள் ஏதும் புகுத்தவில்லை. ஆகார, ஐகார வரிசைகளில் ஏற்கனவே மற்ற உயிர்மெய்யெழுத்துகள் பயன்படுத்திய குறியீடுகளையே றா, னா, ணா, லை, ளை, னை, ணை ஆகியவற்றுக்குப் பொருத்தினார். எழுதும் முறை புதிதானாலும் மக்கள் ஏற்கனவே அக்குறியீடுகளுக்குப் பழகி இருந்தது ஒரு முக்கிய விசயம். தற்போதைய பரிந்துரையில் முழுக்க புதுக் குறியீடுகள் வருவது குழப்பும்.


*இந்த மாற்றம் ஒரு சில ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதா? அல்லது, சீராக அக்காலத்தைய எல்லா கல்வெட்டுகள், செப்பேடுகளிலும் காணப்பட்டதா?

*தகவல் தொடர்பு பெரிதாக இல்லாத அக்காலத்தில் சீரான எழுத்து மாற்றங்கள் இருந்தது எப்படி?

*இந்த எழுத்து மாற்றங்கள் எவ்வாறு நேர்ந்திருக்க கூடும்? இப்போது போல் யாரும் முடிவெடுத்து மாற்றி இருப்பார்களா? அதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரம் யாரிடம் இருந்தது?

*இல்லை, எழுதப்பட்ட பொருள், அதற்குப் பயன்படுத்திய கருவிகளின் தன்மை காரணமாக, அதாவது நடைமுறை நுட்பக் காரணங்களால், இம்மாற்றங்கள் தானாக நிகழ்ந்தவையா (யாரும் முடிவெடுத்துச் செயற்படுத்தாமல்)?

தமிழ் மொழி குறித்த இவ்வாதாரங்கள் இல்லாவிட்டாலும் இதே போல் மாற்றங்கள் நிகழ்ந்த பிற மொழிகளின் தன்மைகளையாவது அறிய வேண்டும். இதன் மூலம், நாம் தற்காலத் தமிழில் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்கள் குறித்து ஒரு அறிவடிப்படை நிலைப்பாட்டை எடுக்க இயலும்.


எழுத்தாக்கம்:
ரவிசங்கர்
மின்னஞ்சல்: ravidreams@gmail.com
மூலம்: http://blog.ravidreams.net/

கருத்துகள் இல்லை: