தகவல் - அரசியல் யுகத்தில் தமிழ் (3/3)

எழுத்துச் சீர்மையை முன்மொழிபவர்கள் அதற்குப் பின்னால் இருக்கும் மறுபக்கங்களை ஆராய்வதோ அல்லது பொதுவுக்குக் காட்டுவதோ இல்லை. மொழிநலன் பேணும் நடுநிலையாளர்கள் அவற்றை ஆராய்வதும் விவாதிப்பதும் தானே அறிவுடைமை. இந்தத் தொடர் எழுத்துச் சீர்மையின் மறுபக்கங்கள் சிலவற்றைப் பட்டியல் போட்டுக் காட்டுகின்றது. நாமும் ஆராய்வோம் வாரீர். - தமிழ் ஊழியன்
<<<<<<<<>>>>>>>>
 • 1.தட்டச்சு பிரபலமாக இருந்த காலத்தில் அரசு அலுவலகங்களில் ஓங்கி ஒலித்த விமர்சனம் இது. ஆங்கிலத்தோடு ஒப்பிடுகையில் தமிழில் தட்டச்சு செய்ய அதிக நேரமானது உண்மைதான். எனினும் நமது அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளைப் பார்த்தால், ‘விரைவு’ என்பது வேலை நேரத்தின்போது அலுவலர்களின் ஓய்வு நேரத்தை அதிகரிக்க உதவியிருக்கலாமே தவிர, சொல்லிக் கொள்ளும் படியாக வேறென்ன பயன் விளைந்திருக்க முடியும்?
 • 2.தமிழில் மொத்தம் 247 எழுத்துகளைக் கற்க வேண்டியுள்ளது என்ற மலைப்பில் நியாயமில்லை. ஏனெனில், தற்போதுள்ள எழுத்து வடிவங்களின்படியே நாம் கற்பது மொத்தம் 72 குறிகள் மட்டுமே: உயிர் 11 (‘ஊ’ என்ற எழுத்தில் ‘உ’ மேல் உள்ள ‘ள’ ‘ஒள’ இலும் வருகிறது), ஒற்றுநீங்கிய மெய் 17 (‘ள’ என்ற எழுத்து ‘ஒள’ இல் வந்துவிடுவதால்),
 • ஒற்று 1, ஆயுதம் - 1, உயிர்மெய்யில் உகர ஊகார வரிசை நீங்கலாக உயிர்க்குறிகள் _ 6, உகர ஊகார உயிரமெய் 36. ஆக, நாம் இதுவரை கற்றவை 247 ஒலிகள் (247 எழுத்துகள் அல்ல), 72 குறிகள், ஒலிகளிலும் கூட, புழக்கத்தில் இல்லாமல் அட்டவணை யோடு நின்றுள்ள உயிர்மெய் ஒலிகள் பல (எடுத்துக்காட்டாக, ஙகர மற்றும் ஞகர வரிசைகளில்).
 • 3.அறிவியல், பொறியியல், மருத்துவம் இன்ன பிற துறைகளிலெல்லாம் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொள்கிற ‘ஐ.டி. தலைமுறை’ ஏன் தமிழை மட்டும் போகிற போக்கில் கற்றுக்கொள்ள நினைக்கவேண்டும்-? இது ஒருபுறம் இருக்க, தமிழாக்கம் மற்றும் தமிழ்க் கலைச்சொல்லாக்கம் குறித்த ‘மரபு’ இலக்கண விதிகளை நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
 • 4.ஆங்கிலம் கற்றுக் கொள்வது அப்படியன்றும் எளிதானதல்ல. பேரெழுத்து, சிற்றெழுத்து என்ற இருவகை வடிவங்கள். இதிலும், அச்சு வடிவம், கையெழுத்து வடிவம் என்று மேலும் இருவேறு வடிவங்கள். ஆக 52 குறிகளை எழுதவும் 104 குறிகளை அடையாளம் காணவும் கற்றாக வேண்டும் (26 அல்ல). இது தவிர, ஆங்கிலத்தில் எழுதும் எழுத்துக்கும் ஒலிக்கும் பல சமயங்களில் தொடர்பே இருப்பதில்லை.
 • ஒரே எழுத்து சூழலுக்கேற்பப் பல ஒலிகளை எழுப்பும் போதாததற்கு, இம் மொழியில் விதிகளைவிட விதிவிலக்குகளே அதிகம். இவற்றையெல்லாம் கடும் பயிற்சியால்தான் கற்றுக்கொள்ள முடியும். அத்தோடு, பிற மொழிகளில் உள்ள ஒலிகள் பல (இன்னும்) ஆங்கிலத்தில் இல்லை. உலக மொழிகளின் அனைத்து ஒலிகளையும் உள்வாங்கிய மொழி எதுவும் இன்னும் உருவாகவில்லை.
 • 5.நுனிநாக்கு ஆங்கிலம் வேலை வாய்ப்புக்கு உத்திரவாதமல்ல, திறமைக்கும் ஆங்கில அறிவுக்கும் நேரடித் தொடர்பு ஏதுமில்லை. அதே போல, சரளமான ஆங்கிலப் பேச்சுக்கும் ஆங்கில மொழிப் புலமைக்கும் தொடர்பு இருக்க வேண்டிய அவசியமுமில்லை. மிஞ்சிப் போனால், ஆங்கிலப் பேச்சுத்திறனால் ‘கால்_சென்டர்’ நிறுவனங்களில், ‘போன் பாய்’ வேலை கிடைக்கக்கூடும் கவுரவமான சம்பளத்தில்.
 • 6.சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கற்றது தமிழ்’ ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் ‘ஐ.டி.’ துறையில் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்ற பொறாமை உணர்ச்சியைக் கொட்டித் தீர்த்ததைத் தவிர, இந்தப் படம் தமிழ் கற்றவர்களின் பிரச்சினையை ஊறுகாய் மாதிரிகூடத் தொட்டுக் கொள்ளவில்லை.
 • 7.உலகத் தமிழர்களில் ஏறத்தாழ 20 விழுக்காட்டினர் தமிழகத்திற்கு வெளியே உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா போன்ற ஓரிரு நாடுகள் தவிரப் பிறவற்றில் உள்ள தமிழ் வழி வந்தோரைப் பொறுத்தமட்டில், தமிழுக்கும் அவர்கள் வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனினும் அவர்கள் தமிழைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுவது, தங்கள் பூர்வீகப் பண்பாட்டோடு கொண்டுள்ள தொடர்பு அறுந்துவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தால்தான். தமிழ் மீது கொண்ட உண்மையான அக்கறையால் அவர்களில் சிலர் முன்வைக்கும் சீர்திருத்தங்கள் நிச்சயம் நம் கவனத்துக்குரியவை. ஈ.வெ.ரா.வுக்கே எழுத்துச் சீரமைப்பில் ஆர்வம் வரக்காரணம் சிங்கப்பூர்த் தமிழரின் சீரமைப்பு முயற்சியே.
 • 8.‘அறிவு _ இடைவெளி’ என்ற தொடரை நாம் எச்சரிக்கையுடன் அணுகவேண்டும். தகவல் தொழில் நுட்பத்தால் பல்வேறு தகவல்களைச் சடுதியில் திரட்டிக்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. இந்தத் ‘தகவல் பெருக்கம்’ வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற உதவுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் இதை ‘அறிவு’ என்று கொள்வது அபத்தமாக முடியும். ‘அறிவு _ இடைவெளி’ என்ற தொடர் பரவலாகப் பயன்பாட்டில் இருந்தாலும், ‘தகவல்_இடைவெளி’ என்பதே சரியானதாயிருக்கும்.
 • 9.இதுவரையிலான மொழிச் சீர்திருத்தப் பரிந்துரைகள் பெரும்பாலும் தட்டச்சு, ‘லெட்டர் பிரஸ்’ ஆகியவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டவை. ஆனால் அவை இப்போது காலாவதியாகிவிட்ட தொழில் நுட்பங்கள். உருவாகிவரும் ‘டிஜிடல்’ யுகத்தில் மொழியின் வரிவடிவத்திற்கான தேவை அருகிவர, ஒலி வடிவமே முன்னுரிமை பெற்று வருகிறது. நாவல்கள், கவிதைகள் போன்ற படைப்பிலக்கியங்கள் வாசிக்கப்பட்ட குறுந்தகடு வடிவமேற்கத் தொடங்கியுள்ளன.
 • பேசினாலே வரிவடிவத்திற்கு மாற்றிவிடும் மென்பொருள்கள் ஏற்கெனவே பல மொழிகளில் புழக்கத்தில் உள்ளன. தமிழிலும் அது விரைவில் பரவலாகக் கூடும். எனவே, தமிழ் எழுத்துகளை விரைவாக எழுத முடியவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இனி இடமிருக்காது_அதைக் கணினி பார்த்துக்கொள்ளும். எதிர்காலத்தில், வரிவடிவக் காட்சியை அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு மட்டும் எழுத்தறிவு இருந்தால் போதுமானதாக இருக்கும் அத்தகையதொரு சூழ்நிலையில் எழுத்துச் சீர்திருத்தத்துக்கே தேவையிருக்காது.
 • 10.தற்போதைய தகவல் தொழில்நுட்பட்திற்கு ஏற்ப மொழியைச் செப்பனிடுவது பற்றிப் பேச நேர்ந்துள்ளதுகூட நம் அரசுகளின் மெத்தனத்தின் விளைவுதான் எனக் கணினி வல்லுநர்கள் பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். பன்னாட்டு அமைப்பான ‘யுனிகோடு கன்ஸார்ட்டியம்’ என்ற அமைப்பில் தக்க அறிவியல்பூர்வமான காரணங்களை முன்வைத்து, எல்லாத் தமிழ் எழுத்து களையும் குறியடை செய்வதற்குத் தேவையான குறிவெளியைப் பெறத் தவறியதே, தற்போது தமிழ் எழுத்துரு பயன்பாடு தொடர்பான மென்பொருளாக் கத்தில் சிக்கல்களை எதிர் கொள்ளக் காரணம்.
 • 11.உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் உறுதியான இடம் பிடித்திருக்கும் ஜப்பான் நாட்டு மொழியில் தமிழைவிடப் பல மடங்கு அதிகமான எழுத்துகள் உள்ளன. எனினும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் மொழி ஒன்றும் பெரிய முட்டுக்கட்டையாக அமைந்து விடவில்லை. இன்று உலகின் ஏழு பணக்கார நாடுகளில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய மூன்று நாடுகள் தவிர ஏனைய நான்கிலும் (பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்) ஆங்கில ஆதிக்கமில்லை என்பதைக் கவனிக்க.
 • 12.வளர்ந்து வரும் அறிவியல் / சமூக அறிவியல் துறைகளில் நாளுக்கொரு கண்டுபிடிப்பு நிகழ்ந்து வருகிறது. கண்டுபிடிப்புகள் உடனுக்குடன் காப்புரிமை பெற்று, நுகர்வுக்கேற்ற வடிவம் தாங்கிச் சந்தைக்கும் வந்துவிடுகின்றன. இங்குத் தமிழருடைய பங்களிப்பு என்ன? ஆண்டுதோறும் வெளியிடப்படும் நொபல் பரிசு பெறுவோர் பட்டியலில் இடம் பிடிக்கும் தமிழர் எத்தனை பேர்? இதுவரை இயலவில்லை என்றால், அதற்கு ஏதுவான அரசியல்_பொருளாதாரச் சூழல் இங்கில்லை என்பதுதானே அர்த்தமாக முடியும்? இதற்குப் பொறுப்பேற்கப் போவது யார்?
 • 13.‘தமிழில் புராண இதிகாசங்களைத் தவிர வேறு என்ன இருக்கிறது?’ என்று நையாண்டி செய்வார் ஈ.வெ.ரா. தமிழில் போதிய (அறிவியல் / சமூக அறிவியல்) நூல்கள் இல்லாத காரணத்தால்தான் அனைத்து நிலையிலும் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த முடியாமல் நொண்டிக் கொண்டிருக்கிறோம். மேனிலைப் பள்ளிப் படிப்புவரை தமிழ்வழி பயின்றுவிட்டுக் கல்லூரிக்குச் செல்கையில் ஆங்கிலவழியிலேயே மிகப்பெரும்பாலும் கற்கவேண்டியுள்ளது என்பதால், பள்ளியிலேயே ஆங்கிலவழி பயின்றவர்களுக்கு அது பெரும் வசதியாகிவிடுகிறது. எனவே, பொருட் செலவையும் பொருட்படுத்தாது தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்வியில் சேர்த்து விடும் பெற்றோருடைய மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
 • 14.தமிழ்வழிக் கற்றோருக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம்கூட வேண்டாம். முன்னுரிமையாவது தரப்படுகிறதா என்றால், அதுவும் இல்லை, அவ்வளவு ஏன், ஆட்சியின் தலைமையிடமான தலைமைச் செயலகத்தில் குறைந்த பட்சம் தமிழ் பேசத் தெரியாதவர்களுக்கு இடமில்லை என்று சட்டமியற்ற முடியுமா? இப்படியொரு கேள்வியைக் கேட்ட உடனே தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு பீறிட்டுக் கிளம்பிவிடும். 1978லேயே அரசு ஊழியர்கள் தமிழில் ஒப்பமிட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்ட போதிலும், அதை மீறுபவர்களை எதுவும் செய்ய இயலா நிலையிலேயே இன்றுவரை அரசு உள்ளது.
 • 15.எனினும், தொழில்நுட்ப ஆர்வமும் சமூக அக்கறையும் ஒன்றுக்கொன்று முரணான எதிர்மறைகளாக இருக்க வேண்டியதில்லை. பெரும்பாலும் அவை ஒத்த விளைவுகளுக்கே இட்டுச் செல்கின்றன. (முற்றும்)

எழுத்தாக்கம்:-
முனைவர் ச. ராஜநாயகம், லயோலா கல்லூரி

கருத்துகள் இல்லை: