யுனிகோடு தமிழில் சமஸ்கிருதம் ஆக்கிரமிப்பு?


கணினியில் தமிழ் எழுத்துக்களை உள்ளிடுவதற்கான யூனிகோட் ஒருங்குறி முறையில் 26 சமஸ்கிருத எழுத்துருக்களைச் சேர்க்க திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், யுனிகோட் எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகெங்கும் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறை என்றும், அதில் தமிழ் ஒருங்குறி முறைக்குள் சமஸ்கிருத எழுத்துக்களை திணிக்க "ஆரிய சக்திகள்" முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் குறிப்பிட்ட இடங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையத்தளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதனால் தனியாக எந்த ஒரு புதிய தரவிறக்கமும் இன்றி சீனம் முதல் அரேபியம் வரை எந்தவொரு மொழி எழுத்தையும் யாரும் படிக்கலாம்; பயன்படுத்தலாம்.

தமிழில் எழுதுவதற்கும் அந்த ஒருங்குறி முறை இப்போது பயன்படுத்தப்படுவதால் உலகளாவிய அளவில் அனைவரும் இணையத்தின் மூலம் தமிழிலேயே தகவல்களைப் பறிமாறிக்கொள்ள முடிகிறது, யூனிகோடில் தமிழ் எழுத்துக்களுக்கு 128 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆயினும் அந்தக் குறுகிய அளவிற்குள்ளும் அனைத்துத் தமிழ் எழுத்துகளையும் ஒருவாறாக உள்ளே கொண்டு வந்துள்ளனர்.

அதை அதிகப்படுத்தினால் அனைத்துத் தமிழ் எழுத்துகளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கி எளிமையான பயன்பாட்டை உருவாக்க முடியும் என தமிழ் கணினி வல்லுநர்கள் யுனிகோடு சேர்த்தியம் அமைப்பிடம் முறையிட்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த சூலையில் சிறீ ரமண சர்மா என்பவர் தமிழ் எழுத்துகளுக்கான இடத்தை அதிகப்படுத்தி அதில் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று யுனிகோடு சேர்த்தியம் அமைப்பிடம் கோரியிருப்பதாகவும் அப்படிச்செய்தால் தமிழின் தனித்தன்மை கெட்டுவிடுமென்றும், தமிழை சமஸ்கிருதமாக்கும் முயற்சியே இது என்றும், இத்தகைய சதிகள் வெற்றிபெற அனுமதிக்கக்கூடாது என்றும் வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கணித்தமிழ் நிபுணரின் கருத்து


தொழில் நுட்ப அடிப்படையிலும், மொழித்தேவையின் அடிப்படையிலும் இந்த கூடுதல் எழுத்துருக்கள் தமிழ் ஒருங்குறிக்குள் தேவையில்லை என்கிறார் கணினித்தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட உத்தமம் என்கிற உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவரான மணி மு மணிவண்ணன்.

இந்தச் சர்ச்சை குறித்து பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில், தமிழின் மொழியியல் தேவையை ஏற்கெனவே இருக்கும் அடிப்படை எழுத்துருக்களே ஈடுசெய்யவல்லது என்று கூறும் மணிவண்ணன், கூடுதலாக 26 கிரந்த எழுத்துருக்களை தமிழ் ஒருங்குறிக்குள் கொண்டுவருவது தேவையற்றது என்கிறார்.

அதேசமயம், இந்த விடயத்தை யூனிகோட் நிறுவனம், உணர்வு ரீதியாக அணுகாது என்றும், வெறும் தொழில்நுட்ப பிரச்சினையாக மட்டுமே இந்த விடயத்தை அது பார்க்கும் என்றும் அவர் கூறினார்.

யுனிகோடு தமிழில் சமற்கிருத எழுத்துகளை வலிந்து திணிக்கும் சதிநாச வேலையைத் தடுத்து நிறுத்துங்கள்!

2 கருத்துகள்:

veeraphandian சொன்னது…

Tamils should not sleep in this matter.If we do not bother about this ,it will destroy our language like a virus.Educated Tamils should be alert to kill the attempt of our enemy.

அகரம் அமுதன் சொன்னது…

தமிழுக்காக ஒதுக்கப்பட்ட யுனிகோடில் சமற்கிருதத்தைப் புகுத்துவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். தமிழ்ச் சாண்றோர்கள் ஒன்றுகூடி எதிர்ப்பதே நன்று.