கிரந்தம் வடிவில் வரும் எமன்

இது 'தமிழக அரசியல்' இதழில் வெளிவந்த கட்டுரை. அன்பர்கள் வாசிப்புக்கு இங்கு அப்படியே தருகின்றேன். -தமிழ் ஊழியன்


கிரந்தம் வடிவில் வரும் எமன்:
தமிழ்ப் பகைவர் விழித்திருக்க... தமிழர்கள் தூங்கலாமா?



‘என்றும் உள தென்தமிழ்’ எனக் கம்பன் பாடிய தமிழுக்குக் காலம் தோறும் தமிழ்ப் பகைவர்கள் கேடு செய்து வருகின்றனர். இப்பொழுது தமிழுக்கு எதிராக அவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டது கணிணியை. கணிணியில் கிரந்தப் பயன்பாடு வேண்டும் என்ற போர்வையில், தமிழ் ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதனை நம்மில் பலர் உணரவில்லை. இதுபற்றி, தனது ஆய்வுக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இருபது ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துச் சிதைவை எதிர்த்துப் போராடிவரும் ஆட்சித் தமிழறிஞரான இலக்குவனார் திருவள்ளுவன்.

கணிணியச்சிடுவதற்குப் பயன்படுத்தும் அதே எழுத்துரு மற்றவர் கணிணியில் இருந்தால்தான் நாம் அனுப்புவனவற்றை அடுத்தவர் படிக்க முடியும். இந்தக் குறையைப் போக்க, தகவல் மாற்றமைப்பிற்கான இந்தியத் தரக்குறியீட்டு முறையும் (ISCII - Indian Standard Code for Information Interchange) தமிழ்த்தரக் குறியீட்டு முறையும் (TSCII - Tamil Standard Code for Information Interchange)அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அடோப், ஆப்பிள், ஐ.பி.எம்., கூகுள், மைக்ரோசாப்டு முதலிய பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டிணைவான ஒருங்குறி அவையம்.

(Unicode Consortium) அறிமுகப்-படுத்திய ஒருங்கீட்டு முறை மேலாதிக்கம் செலுத்தி-யமையால் நம் நாட்டு முறைகள் பின்தங்கின.

இப்பொழுது, உலக-மொழிகளின் கணிணிப் பயன்பாட்டிற்கு இந்த அமைப்பின் ஒதுக்கீடே அடிப்படை என்னும் நிலை வந்துவிட்டது. இந்த அமைப்பின் மூலம் கிரந்த எழுத்துகளைக் கணிணியில் பயன்படுத்த ஒதுக்கீடு வேண்டும்பொழுதுதான் தமிழுக்கு எதிரான சதி தெரியவந்திருக்கிறது.

கிரந்தம் என்றால் என்ன?

சமசுகிருத எழுத்துகளைத் தமிழ் முதலான மொழிகளில் எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட எழுத்துவகைதான் கிரந்தம். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அயல் மொழி எழுத்துகளை நீக்கி எழுத வேண்டும் என்று வரையறுத்துள்ளார். ஆனால், நாம் கிரந்தத்தைப் பயன்படுத்தியதால் எண்ணற்ற சமசுகிருதச் சொற்களும், பின்னர் அரபு, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களும் தமிழில் கலந்து தமிழைச் சிதைத்தன.

இந்த நிலையில்... மணிப்பிரவாள நடைக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடு, கிரந்தத்திற்கு ஒருங்குறியில் இடம் வேண்டி மத்திய அரசு 2 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தது. அதற்கிணங்க, மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை பல கூட்டங்களுக்குப் பின் செப்டம்பர் 2010இல் இறுதிக் கூட்டம் கூட்டி முடிவெடுத்து, ஒருங்குறி அவையத்திற்கு 18.10.2010 அன்று பரிந்துரைத்துள்ளது. அதனை ஏற்பதற்கான முடிவெடுப்பு 06.11.2010 அன்று நடந்த ஒருங்குறி அவையத்தில் நடைபெறுவதாக இருந்தது.

அவ்வாறு அன்று அந்த முடிவை ஏற்றிருந்தால், பின் எந்த நாடு சொன்னாலும் அதனை அவ்வமைப்பு திரும்பப் பெற்றிருக்காது. நல்ல வேளையாகத் தமிழ்க் காப்பு அமைப்புகள் சார்பில் 2.11.2010 அன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாயிலாக, அப்போதைய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசாவிடம் முறையிட்டதன் தொடர்ச்சியாக இந்த முடிவெடுப்பு 26.02.2011 அன்று நடைபெற உள்ள கூட்டத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சுருக்கமாகக் கூறுவதாயின், மணிப்பிரவாள நடைக்காக, தமிழ் எழுத்துகளில் க1 க2 க3 க4 என்பதுபோல் 26 கிரந்த எழுத்துகளைப் புகுத்த முதலில் திட்டமிட்டனர். பின் எ, ஒ, ழ, ற, ன ஆகிய தமிழ் எழுத்துகளையும் தமிழ் எண்களையும் கிரந்தத்தில் சேர்த்து 89 குறியீடுகளுக்காகக் கருத்துரு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ், விரிவாக்கத் தமிழாக வளர்ச்சி பெறுவதாகக் கதையும் கூறப்பட்டது. மேலும், தமிழ் எழுத்துகளையும் கிரந்தத்தில் சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் அனைத்து மொழிகளையும் கிரந்த எழுத்து கொண்டே எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ‘இந்தியா ஒரே நாடாக விளங்க அனைத்து மொழிகளையும் எழுதக் கூடிய கிரந்த எழுத்துகளைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என்ற முறையை அறிமுகப் படுத்துவதுதானே இதன் உள்நோக்கம்?

இதை வீண் கவலை என்று ஒதுக்கிட முடியாது. செந்தமிழ் வழங்கிய சேரநாட்டில் கிரந்த எழுத்துகளின் செல்வாக்கைப் புகுத்தியதால்தான் தமிழ், மலையாளம் ஆயிற்று. ஆக, மீண்டும் ஒரு மலையாள மொழி தமிழ்நாட்டில் தோன்ற வேண்டும் என்ற அவலத்திற்கு வித்திடத்தானே கிரந்தத்தைப் புகுத்துகின்றனர். ஆனால், இதைத் தடுத்திட நாம் என்ன செய்தோம்? ஒருங்குறி அவையத்தில் தமிழ்நாடும் உறுப்பினராக இருந்தது. ஆனால், உறுப்பினர் கட்டணம் அமெரிக்கப் பணத்தில் 12,000 செலுத்தத் தவறியமையால், உறுப்பினர் தகுதியைத் தமிழ்நாடு இழந்து விட்டது. பல நூறு கோடி ரூபாய் செலவழித்துச் செம்மொழி மாநாட்டை நடத்திய நமக்கு இந்தத் தொகை பெரிதா?

மத்திய அரசின் மனித மையக் கணிணிப் பிரிவு (Human Centered Computer Division) இயக்குநர் சொர்ணலதா 2008&லிருந்து நடத்திய கூட்டங்களில், தமிழ்நாடு சார்பில் யாரும் பங்கேற்காததன் காரணம் என்ன? அப்படிப்பட்ட சூழலிலும் கூட்ட விவரத்தைத் தெரிவித்துக் கருத்து கேட்டுள்ளது மத்திய அரசு. உரிய காலத்தில் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் தமிழ் இணையப் பல்கலைக்கழக (தமிழ் இணையக் கல்விக் கழக) இயக்குநர் மறுமொழி அளித்துள்ளார். அதற்கு முன்னரே, தமிழ் இணைய வளர்ச்சிக்கு என அமைக்கப்பட்ட உத்தமம் (INFITT) சார்பிலும் ஒருங்குறி அவையத்திற்கு மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள கணிணி அறிஞர்களும் தமிழார்வலர்களும் இது குறித்து எச்சரித்தும்... தமிழக அரசு கவனத்திற்கும் பொது மக்களின் கவனத்திற்கும் முன்னரே இதை ‘உத்தமம்’ ஏன் கொண்டுசெல்லவில்லை? முதலமைச்சர் கவனத்-திற்குப் பிறரால் இது குறித்த தகவல்கள் கொண்டு செல்லப்பட்ட பொழுது 4.11.2010 அன்று ஒரு கூட்டம் கூட்டியுள்ளார். ஆனால், ஒத்தி வைக்க வேண்டும் என்ற ஒரு பக்க மடலை, மத்திய அரசிற்கு உடனே அனுப்பாமல், ஒருங்குறி அவையம் அமெரிக்காவில் கூடும் நாளான 6.11.2010 அன்று காலத்தாழ்ச்சியாக அனுப்பியது ஏன்?

ஒருவேளை, முன்பே இது தொடர்பான முடிவெடுப்பு ஒத்தி வைத்திருக்காவிட்டால் கிரந்தத்துடன் தமிழைக் கணிணி எழுத்துருப் பட்டியலில் ஒருங்குறிக்காக இணைக்கும் அவலம் அரங்-கேறியிருக்கும். தமிழாய்ந்த தமிழர்கள் முதல்வர் அருகே இருக்கும் பொழுதே இந்த நிலை!

இப்பொழுது கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதால், பஸ், ஜாமீன், மிக்ஸி, ஜாம், ஷவர், முதலான அயற்சொற்கள் நம்மிடையே புகுந்து விட்டன.

எனவே தமிழ் நிலைப்பதற்கு, நாம் இப்பொழுது உடனடியாக தமிழ்ப் பாடநூல்களில் இருந்து கிரந்த எழுத்துகளை அடியோடு நீக்க வேண்டும். கிரந்தம் அறியாத தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். இலங்கையில் அறிவியல் அகராதிகளில்கூடக் கிரந்த எழுத்துகள் இல்லையே! நம்மால் ஏன் முடியாது?

அடுத்த கூட்டம் அடுத்த ஆண்டுதான் என்று அமைதி காக்காமல், உடனே தமிழறிஞர்களையும் கலந்து பேசிச் சரியான கருத்துருவை அனுப்பி கிரந்தம் தொடர்பான முன்மொழிவைத் திரும்பப் பெற வேண்டும். இதைத்தான் உலகமெங்கும் உள்ள தமிழன்பர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

தமிழ்ப் பகைவர்கள் விழிப்புடன் இருக்கையில் தமிழ், தமிழ் என முழங்கிக் கொண்டிருப்பவர்கள் உறங்குவது ஏன்? தமிழக அரசு ஆவன செய்யுமா? கணிணி உருவில் வரும் இடரிலிருந்து கன்னித் தமிழைக் காப்பாற்றுமா தமிழக அரசு?

1 கருத்து:

agaramamuthan சொன்னது…

தமிழ் எழுத்துக்களோடு கிரந்த எழுத்துக்களைச் சேர்ப்பது தமிழை அழிக்க நினைப்பவர்களின் அடுத்தகட்ட முயற்சியாகும். அதனை தமிழுலகம் ஒன்றுதிரண்டு வன்மையாக எதிர்க்க வேண்டும்.