சீனத்தைக் காட்டி தமிழைச் சீர்திருத்தும் சதிநாச வேலை


இ, ஈ, உ, ஊகார வரிசையில் உள்ள 72 எழுத்துகளைச் சீர்திருத்த வேண்டும் என்று அறிவாளிகள் கும்பலொன்று அறிவிலித்தனமாக இயங்கிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆய்வுக்குரிய தருக்கங்களையோ அல்லது அறிவுக்குப் பொருந்திய ஏரணங்களையோ அல்லது பகுத்தறிவுடன் கூடிய வாதங்களையோ முன்வைக்க மாட்டாமல், உப்புச் சப்பில்லாத காரணங்களை முன்வைத்து எழுத்துச் சீர்திருத்தத்தைப் பரப்புரை செய்கிறார்கள். அவை:-

1.இந்தச் சீர்த்திருத்தத்தால் தந்தை பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்துச் சீர்மை நிறைவு பெறும்.

2.சீன மொழி மிகப்பெரிய சீர்திருத்ததிற்கு உள்ளாகினதால் இன்று வளர்ச்சி அடைந்திருக்கிறது.

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதையாக மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லி - அறைத்த மாவையே அறைப்பது போல - துவைத்த துணியையே துவைப்பது போல இந்த இரண்டு காரணங்களை மட்டுமே வாயில் நுரைதள்ள சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ‘எழுத்துச் சிதைப்பாளர்கள்’.

ஆனால், அந்தச் சிதைப்பாளர்களின் வாதங்களை அடித்து நொறுக்கும் வகையில் அண்மையில் ஐயா நாக.இளங்கோவன் அவர்கள் ஆழமான ஆய்வினை வெளியிட்டுள்ளார். கடந்த மே16இல் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் நடத்திய ‘எழுத்து மாற்ற எதிர்ப்பு மாநாட்டில்’ இந்த ஆய்வு வெளியிடப்பட்டது.

இப்போது, அது காணொளி வடிவத்தில் வந்திருக்கிறது; தமிழ் எழுத்து மாற்றத்திற்கு சீன மொழியை மேற்கோள் காட்டிப் பேசும் ‘எழுத்துச் சிதைப்பாளர்களின்’ வாதங்களை தூள்தூளாக்கிப் போடுகிறது.

அதுமட்டுமல்லாமல், தந்தை பெரியாரைக் காட்டிக் காட்டி கருத்து பர(ச)ப்பும் ‘எழுத்துச் சிதைப்பாளர்களின்’ முகமூடியை ‘டர்ர்ர்ர்ர்ர்ரென’ கிழித்துப் போடுகிறது. பகுத்தறிவு பேசிய பெரியாரின் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் சதிகாரர்களின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

அனைவரும் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய காணொளி இது. அறிவுடைமைப் பண்பும் நடுநிலைப் போக்கும் உடையவர்கள் அமைதியாகக் கண்டு - கேட்டு - சிந்தித்து - சீர்தூக்கிப்பார்க்க வேண்டிய அரிய காணொளி இது.

பகுதி 1



">பகுதி 2



">பகுதி 3





எழுத்துச் சீர்மைக்கு எதிராக 14 குறட்பாக்கள்

எந்த ஓர் ஆய்வும் செய்யாமல் - கருத்துரிமை வழிநின்று எந்தவொரு விவாதமும் செய்யாமல் - உலகத் தமிழ் அறிஞர்களை அழைத்து கலந்து பேசாமல் - மொழி அறிஞர்களின் மாற்றுக் கருத்துகளுக்குச் கொஞ்சமும் செவிசாய்க்காமல் - அறிவுடைமையான முறையில் ஆராய்ச்சி எதுவும் செய்யாமல் - ஆண்மைத் திறத்தோடு நேருக்கு நேர்நின்று கருத்துமோதல் பண்ணாமல் - வெளிப்படையாக வந்து கருத்தாடல் புரியாமல்...

இன்று எழுத்துச் சீர்திருத்தம் செய்ய சில தரப்பினர் தீவிரமாகச் செயல்படுகின்றனர்; தந்திரமாக செயல்படுகின்றனர்; யாருக்கும் தெரியாமல் புறக்கதவு வழியாக வந்துபோய் வேலை செய்கிறார்கள்; அரசியல் பலம் - அதிகார பலம் - ஆள் - அம்பு - சேனை - படை என அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு சதி வேலை செய்கிறார்கள்; தமிழை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல நாச வேலை செய்கிறார்கள்.

வரலாறு காணாத அளவுக்குத் தமிழ்மொழியில் மாபெரும் பேரழிவை ஏற்படுத்தவிருக்கும் இந்த எழுத்து சீத்திருத்தத்தை இன்று உலகம் முழுவதும் இருக்கின்ற பலர் எதிர்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

அந்த எதிர்ப்பலையின் ஒரு பகுதியாகக் கடந்த மே16-இல் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஏற்பாட்டில் 'தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு மாநாடு' எழுச்சியோடு நடந்தது.

அன்றைய மாநாட்டில் எழுத்து மாற்றத்தைக் கண்டித்து தமிழறிஞர் க.தமிழமல்லன் பாடிய குறட்பாக்கள் கீழே தரப்பட்டுள்ளன. இது வாசித்துப் பார்ப்பதற்கு மட்டுமன்று; நன்கு யோசித்துப் பார்ப்பதற்கும்தான்.



*நல்லெழுத்தை மாற்றுவதோ?***


1. தமிழடிமை நீக்கார் தமிழ்த்திருத்தம் செய்வர்
உமிழ்கின்ற எச்சிலுக்(கு)ஒப்பு.

2. எழுத்துத் திருத்தம் இனிமேலும் செய்தால்
கழுத்து முறிந்துவிடும் காண்.

3. குறிக்கோள்கள் இல்லாமல் நம்எழுத்தை மாற்றும்
அறிவில்லார் செய்கொடுமை ஆய்.

4. அடியோடு மாற்றி அருந்தமிழை வீழ்த்தும்
தடியாரைத் தாங்கிடுதல் தப்பு.

5. அழிப்பார் சுழிப்பார் அடிப்பார் கெடுப்பார்
பழிப்பார் தமிழின் பகை.

6. எழுத்துத் திருத்தத்தை எந்நாளும் ஏலோம்
முழுத்தமிழ் கொல்வாரை மொத்து

7. கன்னடத்தில் சொல்லிவிட்டால் கால்முறிப்பார் நல்எழுத்தை
என்னிடம் திருத்துகிறாய் இங்கு.?

8. இதுவரை போதும் எழுத்துத் திருத்தம்
புதுத்திருத்தம் செய்யாமை பேசு.

9. மலையாளம் கோளாறு மண்டாரின் சிக்கல்
இலைஎழுத்து மாற்றங்கள் அங்கு.

10. தொல்காப் பியமோ துணிந்தநன் னூலாரோ
சில்லெழுத்தும் மாற்றாமை சீர்.

11. கல்விமொழி யாக்கக் கடனாற்ற எண்ணார்கள்
நல்லெழுத்தை மாற்று வதோ?

12. பயிற்றுமொழி யாக்கு பசியைத் தணிக்கும்
வயிற்றுமொழி ஆக்கிடவே வாழு.

13. கற்ற தமிழ்மக்கள் கல்லாராய் மாற்றிவிடும்
உற்றதீச் சூழ்ச்சி ஒடுக்கு.

14. உயிர்துடிக்கும் அன்னைக் குடன்தேவை சொல்எதுவோ?
உயிர்மருந்தே பட்டன்(று) உணர்.

  • எழுத்தாக்கம்:-
    முனைவர் க.தமிழமல்லன், புதுச்சேரி.
  • மூலம்:- thamizh-epi@googlegroups.com

எழுத்துச் சீர்திருத்தம் பற்றி சிங்கை கோவலங்கண்ணன்

(சிங்கை கோவலங்கண்ணன், மதுரை.இரா.இளங்குமரனார் )


செந்தமிழ் தழைக்குமா?அன்புள்ள தமிழ் மக்களே! குழந்தையார் முன்வைக்கும் தமிழ் வரிவடிவ மாற்றத்தால் தமிழ் தழைக்குமா? வாழுமா?ஆங்கிலம் கற்றதால் பேரறிவு பெற்றுவிட்டோம் என்று நினைத்துக் கொண்டு, தமிழை முழுதும் ஆய்ந்த பழுத்த தமிழ் புலவர் பெருமக்களை கிணற்றுத் தவளைகள் என்று பழிக்கும் சில ‘ஆங்கில அறவாளிகள்’ உலகின் செம்மையான வரிவடிவத்தையும் ஒலி வடிவத்தையும் கொண்டுள்ள நம் செந்தமிழை குலைக்க எழுத்துச் சீர்மை வேண்டுமென்று குழறுபடி மிக்கக் கொள்கையை முன்மொழிகிறார்கள்.

இவர்கள் தாங்கள் புலமை பெற்றுள்ள துறையில் தமிழுக்காக ஆக்கப்பணியில் ஈடுபடலாம் அன்றோ? இவர்களின் இம்முயற்சி வெற்றிப் பெற்றால், தமிழாகிய அமிழ்தம் சீரிழந்து சிறப்பிழந்து அழிவதோடு, நம் மொழியோடு நம் பண்பாடு, கலைச் செல்வங்கள் எல்லாம் மறைந்தொழியுமன்றோ? தமிழ் சீர்மைக் கெடுக்க நினைக்கும் கிறுக்கர்கள் வழி செல்லாது தமிழறிஞர் வழி நின்று தமிழைக் காப்போம்! வளர்ப்போம்!

எழுத்துச் சீர்மை குறித்த என் கருத்தோட்டம் வருமாறு:-

இன்று தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாது தேவைப்படுவது தமிழை ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் முழுமையாக ஆளுமைப் படுத்துவதேயன்றி, எழுத்துச் சீர்மையன்று. சீர்மை வேண்டுவோர் முன்பெல்லாம் தட்டச்சையும் கணிப்பொறியையும் காட்டி அவற்றை தமிழில் இயக்குவது அரிது என்றும் இடர்பாடு மிக்கது என்றும் கூறிவந்தனர். இன்றோ கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் தமிழை இனிதே பயன்படுத்துகிறோம். கணிப்பொறி அறிவியல் விண்ணைத் தொட்டுவிட்டது. கணிப்பொறியில் தமிழையும் பிற மொழிகளையும் ஒலி ஒளி வடிவில் எளிதில் செலுத்தி பயன்படுத்தும் வழி பிறந்துள்ளது. (விசைப் பலகையின்றி, எழுதுகோல் கொண்டு சிலேட்டில் அல்லது தாளில் இயல்பாக எழுதுவது போல் கணிப்பொறி திரையில் இப்போதுள்ள நம் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதி கணிப்பொறியில் பதிவு செய்ய முடியும்).

இப்போது இக்கூற்றை விட்டுவிட்டு தமிழை தங்களால் தான் காப்பாற்ற முடியும் என்று நினைக்கும் ‘அறிஞர்கள்’, இன்றைய தமிழ் வரிவடிவம், நம் குழந்தைகள் தமிழைக் கற்பதற்கு தடையாகவும் தொல்லையாகவும் இருப்பதாக, மற்றொரு பொய்யான கரணியத்தை முன் வைத்து எழுத்து சீர்மை வேண்டும் என்கின்றனர். தமிழல்லாத கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகளின் வரிவடிவம், ஒலிவடிவம் தமிழை விட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாக இருக்கின்றன. அம்மொழியாளர்கள் தத்தம் தாய் மொழியை விட்டுவிட்டார்களா? ஆங்கில வரிவடிவத்தை பயன்படுத்த முற்பட்டுள்ளனரா?இவர்கள் கூறும் இக்கரணியம் பொருந்தாது என்பதனை தமிழ் பெற்றோராகிய நாம் நன்கு அறிவோம். நானும் அறிவேன்.

என் பிள்ளைகளுக்கு தாய் மொழி சீனம். தந்தை மொழி தமிழ். அவர்கள் எவ்வித சிக்கலும் இல்லாமல் தமிழைப் படித்தார்கள். என் தலைமகளுக்கு தமிழ் அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுத்த போதே மற்ற இரு பிள்ளைகளும் தானாகவே கற்றுக் கொண்டார்கள். மேல்நிலை 12 ஆம் வகுப்பு வரை தமிழைப் படித்து நல்ல தேர்ச்சியும் பெற்றார்கள். இங்கே நாம் மற்றொன்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ் அரிச்சுவடியை ஒரு சில நாள்களில் கற்று, எழுத்துக் கூட்டி, தமிழ் நாளிதழையோ நூலையோ படிக்க இயலும்.

சீன மொழியைத் தாய் மொழியாக கொண்ட ஒருவர் சீன நாளிதழையோ நூலையோ படிப்பதற்கு குறைந்தது இரண்டாயிரம் வரிவடிவங்களை மனஞ் செய்திருக்க வேண்டும். இது போல் ஆங்கில அரிச்சுவடியை கற்ற பின் எழுத்துக் கூட்டி ஆங்கில நாளிதழையோ நூலையோ படித்தல் இயலாது என்பது நாடறிந்த உண்மை.இது இப்படியிருக்க தமிழை கற்றல் கற்பித்தல் கடினம், கடினம் என்று பிதற்றுவது முறையாகுமோ?எழுத்து சுருக்கமோ வரி வடிவ மாற்றமோ நம் மொழியை வாழ வைக்காது. மாறாக சீர்குலையச் செய்து விடும்.

முன்மொழியப்படும் எழுத்துத் திருத்தத்தைக் கடைப்பிடித்தால் வரும் சிக்கல்கள்:-

1) இந்த மடலை திருத்திய வரிவடிவத்தைக் கொண்டு அச்சிட்டால் இம்மடல் ஒன்றரை மடங்குக்கு மேல் கூடுதலான பக்கங்களாக விரிவடையும். இதனால் பணச்செலவு கூடுமன்றோ?

2) இப்போதுள்ள வரிவடிவங்களான ரு,து,பு,கூ,தூ, பூ,ரூ போன்றவற்றை நீக்கி, புதிய வரிவடிவத்தை எழுத, அச்சடிக்க கால நேரம் கூடுமன்றோ?

மொழி வாழ வளர வேண்டுமென்றால் அது பேச்சு மொழியாகவும் மக்கள் வழக்கு மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழை வாழ வைக்க தமிழ் ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் முதலில் நிலை நாட்ட வேண்டும்.தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையா முதன்மைப் பணிகள் பல உள. அவற்றில் ஒன்று தமிழ் சொல்வளத்தை பெருக்குதல். பிற திராவிட மொழிகளிலுள்ள தென்மொழிச் சொற்களை மீட்டு பயன்படுத்துதல். புதிய சொல்லாக்கத்தை ஊக்குவித்தல். இவற்றால்தான் தமிழ் நல்ல வளர்ச்சி பெருமேயயாழிய, தமிழ் வடிவ மாற்றத்தால் அன்று. அதன் பின் எழுத்து சீர்மை வேண்டின் தமிழறிஞர்கள் மொழி நூல் வல்லார்கள், கணிப்பொறி வல்லார்கள் ஒன்று கூடி முடிவு செய்யலாம்.

குறிப்பு: இன்று கணிப்பொறியில் தமிழ் புழக்கத்திற்கு, எழுத்து மாற்றம் விரும்பும் அறிஞர்களை விட அயல்நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பெரும் தொண்டாற்றியுள்ளனர். இவர்கள் வழிநின்று தாய் மொழியாம் தமிழை வளர்ப்போம்.

எழுத்தாக்கம்:-
வெ.கரு. கோபாலகிருட்டிணன் (வெ.கரு. கோவலங்கண்ணன்),
(19.03.2010) தலைவர், வணிக கல்விச் சாலை, சிங்கப்பூர்.

தமிழக அரசு தமிழைச் சீர்குலைக்கப் போகிறதா?

தமிழக அரசியல் (27-5-2010) இதழில் வெளிவந்த செய்தி இது.






எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அறிவிப்பு?




விரிவான செய்தி..

எழுத்து மாற்றம் எதிர்ப்பு மாநாடு: மே16, புதுச்சேரி



தமிழ் எழுத்துக்களை மாற்றம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாற்றம் செய்யப்பட்டால் தமிழ் மொழிக்கு மிகப் பெரிய கேடு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

எனவே, இந்த மாற்றத்தை கண்டித்து புதுச்சேரியில் எதிர்ப்பு மாநாடு நடைபெற உள்ளது.


நாள்: 16-05-2010 ஞாயிறு காலை 9.45 முதல் 6.00 மணிவரை

இடம்: வணிக அவை (பாரதி பூங்கா அருகில்) நிகழ்ச்சி அரங்கு, புதுச்சேரி-1,

காலை அமர்வு: காலை 10.00 முதல் 1.00 மணிவரை

உணவு இடைவேளை: பகல் 1.01 முதல் 2.00 வரை

பிற்பகல் அமர்வு: 2.01 மணிமுதல் முதல் மாலை 6.00 மணிவரை

நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியல்:-

புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,
திரு.இராம.கி, பொறியாளர், சென்னை, பொதுக்குழு உறுப்பினர்,
உலகத்தகவல் தொழில் நுட்ப மையம்,
பேராசிரியர்.செல்வக்குமார், மின்னனு மற்றும் கணிப்பொறி பொறியியல் துறை, வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா, (ஒலி/ஒளிப்பதிவு உரை)
திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
திரு.மணி.மு.மணிவண்ணன், பொறியாளர், சென்னை,
முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி
பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி.
திரு.சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை)
தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை
திரு,நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி
புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி,
திரு,சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி
திரு.தமிழ நம்பி, விழுப்புரம்
பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி
திரு.விருபா. குமரேசன் சென்னை
திரு.எழில் இளங்கோ விழுப்புரம்,


அனைவரையும் வருக என வரவேற்கும்:-
இரா.சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர், கோ.சுகுமாரன், பேராசிரியர் நா.இளங்கோ, க.அருணபாரதி, மகரந்தன், வெங்கடேஷ் - திரட்டிம.இளங்கோ வீரமோகன், ஓவியர் இராசராசன் செயப்பிரகாஷ், கு.இராம்மூர்த்தி, மு.முத்துக்கண்ணு ,செந்தமிழன்பிரேம்குமார். ச.அனந்தகுமார், இரா.முருகப்பன், ஊற்று கலாபன்குணவதி மைந்தன்,சீனுவாசன் கடலூர், மோகனசுந்தரம் புதுவை.காம்

தொடர்புடைய இணைப்புகள்:-
1. மீண்டும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்:- தமிழக அரசு அறிவிப்பு
2. தமிழை மீட்பதும் காப்பதும்தான் முதல் வேலை; சீர்மை என்ற பெயரில் சிதைப்பதல்ல: மலேசிய நாளிதழ் செய்தி
3. எழுத்துச் சீர்மை; தேவையற்ற வேலை: புலவர் இரா.இளங்குமரனார்
4.கணினியைக் காட்டி எழுத்துச் சீர்திருத்தம் பேசுவது ஒரு மோசடி வேலை - பொற்கோ
5. எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை
6. தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1/2)

தமிழ்மணம்:-1. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - தமிழ்மணத்தின் நிலைப்பாடு

நாக.இளங்கோவன் அவர்களின்:-
1. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1
2. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 2
3. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-3
4. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-4
5. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-5
6. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-6
7. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-7
8. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-8
9. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-
10.எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-10/12
11. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-11/12
12. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-12/12

திரு. செல்வா - தமிழ்வெளி:- எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு
தொடர்புக்கு:-
இரா.சுகுமாரன் (ஒருங்கிணைப்பாளர்)
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
தொடர்பு எண்: +91 94431 05825

தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (2)



தமிழ் எழுத்துகளில் இருக்கும் இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சில தரப்பினர் முயன்று வருவது குறித்து கடந்த இடுகையில் எழுதி இருந்தேன். இந்த எழுத்து மாற்றத்தைச் செய்வதற்கு முன்மொழியப்படும் எழுத்து அமைப்பு பற்றியும் விளக்கி எழுதியிருந்தேன். மேலும், இந்த மாற்றத்தினால் தமிழ்மொழிக்குத் துளியளவு நன்மையும் கிடையாது என்பதையும் எழுதிருந்தேன். (அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும்)

இந்தத் தொடரில், தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் முன்னைக்கப்பட்டுள்ள இன்னுஞ்சில முன்மொழிவைப் (Suggestion) பற்றி அறிந்துகொள்ள உங்களை அழைக்கிறேன்.


இன்று தமிழ் எழுத்துச் சீர்த்திருத்த மேதைகளின் கண்களை அதிகம் உறுத்துவது உகர, ஊகார எழுத்துகள்தாம். அதனால், இவ்விரு வரிசை எழுத்துகளை மாற்றி அமைக்கவே முயற்(சூழ்ச்)சிகள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எப்படி மாற்றி அமைக்கலாம் எனச் சீர்த்திருத்த மேதை ஒருவர் சொல்லியிருக்கும் எழுத்து வடிவங்கள் கீழே உள்ளன.

மாதிரி 1:-

இன்னொரு ஆய்வாளர், தமிழ் மற்ற மொழிகளுக்கு இணையாகச் செயல்பட வேண்டுமானால் கீழே உள்ளபடி தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்கலாம் என முன்மொழிகிறார்.

மாதிரி 2:

இப்படியாக, ஆளாளுக்குத் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்க முனைந்தால், தமிழ் வரிவடிவத்தின் நிலைமை என்னவாகும் என்று எண்ணிப்பாருங்கள்?

நீண்ட காலத்தில் தமிழ்மொழிக்கு ஏற்படப்போகும் விளைவுகளை ஆராய்ந்து பாருங்கள்?

இந்தச் சூழலில், தமிழ்மொழியில் புதிய எழுத்து மாற்றத்தை அறிமுகப்படுத்த விரும்பும் சிலர், மிகவும் நாசுக்காக சில வரலாறுக் காரணங்களை மேற்கோள் காட்டுகின்றனர். அவை:-

1)தமிழ் எழுத்துகள் பல நூற்றாண்டுகளாக மாற்றத்திற்கு உள்ளாகி வந்துள்ளன.

2)வீரமாமுனிவர் எகரத்திலும் ஒகரத்திலும் (எ, ஏ, ஒ, ஓ) மாற்றத்தைச் செய்திருக்கிறார்.

3)தந்தை பெரியார் காலத்தில் செய்யப்பட்ட எழுத்து மாற்றம் இன்று நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது. (லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ, ணை, னொ, னோ)

மேலே சொல்லப்பட்டுள்ள எழுத்துச் சீர்திருத்தங்கள் தமிழ்மொழியில் ஒரு செப்பமான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இனியும் எந்தவித சீரமைப்போ மாற்றமோ தேவையில்லாத அளவுக்கு இன்று தமிழ்மொழி வடிவம் பெற்றுவிட்டது எனலாம். தற்போது இருக்கும் தமிழ் வரிவடிவங்கள் தகவல்தொழில்நுட்ப உலகத்திலும் எந்தவித சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தப்படுகின்றன.

ஆக, இனியும் தமிழைச் சீர்த்திருத்த வேண்டிய தேவையும் அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், சிலர் எழுத்து மாற்றத்தை வலிந்து செய்ய விரும்புகிறார்கள் என்றால், அதில் ஏதோ சில மறைமுக நிகழ்ப்பு (Hidden Agenda) அல்லது கமுக்கத் திட்டம் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

அப்படி ஏதும் இருக்குமானால், அது கண்டிப்பாக கீழே கூறப்பட்டவையாகவோ அல்லது அவற்றுக்குத் தொடர்புடையதாகவோதான் இருக்க முடியும். அவை:-

1)நீண்ட காலத்தில் தமிழின் இருப்பை மழுங்கடித்தல்.

2)தமிழ்மொழியின் தனி அடையாளத்தைச் சிதைத்தல்.

3)தமிழ் நெடுங்கணக்கின் செவ்வியல் அமைப்பைச் சின்னபின்னப்படுத்துதல்.

4)தமிழ் வரிவடிவத்துக்கே உரிய தனி எழுத்தமைப்பை அழித்தொழித்தல்

5)தமிழ் எழுத்துகள் தனி எழுத்துகள் அல்ல. மாறாக வடமொழி எழுத்துகளிலிருந்து திருந்தவை என்ற ஒரு தோற்றத்தை எதிர்காலத்தில் பரப்புதல்.

6)பழைய தமிழ் கருவூலங்களை படிக்க முடியாமல் செய்தல்.

7)தமிழின் தொன்மையில் ஐயத்திற்குரிய பிறழ்ச்சிகள் எதிர்காலத்தில் உண்டாவதற்கு வழியமைத்துக் கொடுத்தல்.

8)தமிழ் இலக்கண, இலக்கிய, அறிவு, பண்பாட்டு, வரலாற்றுச் செல்வங்கள் எதிர்காலத் தலைமுறைக்குச் சென்று சேருவதைத் தடுத்தாட்கொள்ளுதல்.

9)தகவல்தொழில்நுட்பம், கணினி, இணையம் சார்ந்த துறையில் தமிழ்மொழி அடைந்துவரும் வேகமான முன்னேற்றங்களை முறித்துப்போடுதல்.

10)நாளைய மின்னணுவியல் ஊழியில் தமிழ்மொழிக்கு எந்தவொரு இடமும் கிடைத்துவிடக்கூடாது என்பதை உறுதிபடுத்துதல்.

இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால், இவற்றைப்பற்றி எல்லாம் சிறிதுகூட கவலையே படாத எழுத்துச் சீர்திருத்த மேதைகள் சிலர் தமிழ் எழுத்துகளை மாற்றியே ஆகவேண்டும் என்று பல வழிகளில் முயன்று வருவதாக அறியப்படுகிறது.

அதற்கு ஏற்றாற்போல, கணினி உலகம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல் பார்வை, தமிழ் கற்றல், தமிழ் வளர்ச்சி, எழுத்துச் சீர்மை என்று பல பூதாகரமான சொல்லாடல்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் என்ற பெயரில் நுனிப்புல் மேய்வுகளை வழங்கி தமிழ் மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் நல்லறிஞர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் குரல் கொடுக்க வேண்டும் – கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழ் எழுத்து மாற்றம் தேவையற்றது என்பதைத் தக்க சான்றுகளோடு நிறுவ வேண்டும்.

தமிழ் வரிவடிவத்தை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் எந்தவொரு நிகழ்ப்பையும் (Agenda) முறியடித்துப்போட வேண்டும்.