கிரந்தத்தில் தமிழ்: ஒருங்குறி முடிவு ஒத்திவைப்பு



யூனிகோட் எனப்படும் உலக மொழிகளை கணினி மற்றும் இணைய பயன்பாட்டுக்கு ஏற்ப பொது ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரும் ஒருங்குறி சேர்த்தியம், கிரந்த எழுத்துக்களுக் குள் ஏழு தமிழ் எழுத்துக்களை இணைக்கும் தனது முடிவை ஒத்திவைத்துள்ளது.


இது தொடர்பாக அமெரிக்காவில் இருக்கும் ஒருங்குறி சேர்த்தியத்தின் தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி எட்டாம் தேதி நடந்த உயர்மட்ட நுட்பக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து இந்திய நடுவணரசும் தமிழக அரசும் ஆராய்ந்துவருவதால் இது குறித்து தற்போதைக்கு எந்த முடிவையும் எடுக்கப்போவதில்லை என்று ஒருங்குறி சேத்தியம் முடிவெடுத்திருக்கிறது. இது குறித்து தமிழக அரசுடன் கலந்துபேசி, இந்திய நடுவணரசு தனது இறுதி முடிவை தெரிவிக்கும்படியும் ஒருங்குறி சேர்த்தியம் கோரியுள்ளது.

உத்தமம் எனப்படும் உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் சார்பில் கிரந்த எழுத்துமுறையில் தமிழ் எழுத்துக்களை சேர்க்கலாமா கூடாதா என்று ஆராய்ந்த பணிக்குழுவின் தலைவர் மணி மு மணிவண்ணன் அவர்கள், இந்த ஒருங்குறி சேர்த்தியத்தின் உயர்மட்ட நுட்பக்குழுவில் நேரில் கலந்துகொண்டார்.

இந்த கூட்டம் குறித்து அவர் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.









தென்னிந்தியாவில் பல நூற்றாண்டுகள் பயன்பாட்டில் இருந்த கிரந்த எழுத்துமுறையை ஒருங்குறிக்குள் கொண்டுவந்து மற்றமொழிகளைப்போல அதற்கும் தனி இடங்களை ஒதுக்க வேண்டும் என்கிற பரிந்துரை ஒருங்குறி சேர்த்தியத்திடம் வைக்கப்பட்டது.

அப்படி செய்யும்போது கிரந்த எழுத்துக்களுடன், கிரந்த எழுத்துமுறை சாராத தமிழ் எழுத்துக்கள் ஏழையும் அதில் சேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அந்த ஏழு எழுத்துக்களை சேர்த்தால் தான் தமிழ் உள்ளிட்ட மற்ற திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த பெயர்கள் மற்றும் சொற்களை சரியாக எழுதமுடியும், வாசிக்க முடியும் என்கிற காரணங்கள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் பழங்கால ஆவணங்களை அவற்றில் உள்ளபடியே கணினி தொழில்நுட்பத்தில் ஆவணப்படுத்தவேண்டுமானால் இந்த எழுத்துக்கள் சேர்க்கப்படவேண்டும் என்றும் வாதாடப்பட்டது.

ஆனால், தமிழ் நாட்டிலும், உலக அளவிலான தமிழ் மொழி அறிஞர்கள் மத்தியிலும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கிரந்த எழுத்துமுறையை சாராத ஏழு தமிழ் எழுத்துக்களை அதில் சேர்ப்பது தமிழ் கணினி மற்றும் இணைய பயன்பாட்டில் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும் என்றும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தனித்து இயங்கிவந்திருக்கும் தமிழ் எழுத்துமுறை, எதிர்காலத்தில் கலப்பு எழுத்துமுறையாக மாறுவதற்கு இது வழிகோலும் என்றும் இவர்கள் வாதிட்டனர்.

தமிழ் மொழி அறிஞர்களின் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு இதுகுறித்து ஆராய உயர்மட்டக்குழுவை நியமித்தது. இந்த குழுவின் பரிந்துரை கிடைக்கும் வரை இதுகுறித்து இறுதி முடிவு எதனையும் ஒருங்குறி சேர்த்தியம் எடுக்கக்கூடாது என்று இந்திய நடுவணரசிடம் கோரியது. தமிழக அரசின் இந்த கோரிக்கையை ஏற்ற இந்திய நடுவணரசு, ஒருங்குறி சேர்த்தியத்திடம் தனது முடிவை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டது.

ஒருங்குறி சேர்த்தியத்தின் உயர்நுட்பக்குழுவும் அதன்படி தனது முடிவை ஒத்திவைத்தது.

கருத்துகள் இல்லை: