தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1/2)

தற்போது நடப்பில் இருக்கும் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைப்பதற்குச் சிலர் புறக்கதவு வழியாகத் தீவிரமாக முயன்று வருவதாகச் செய்திகள் அடிபடுகின்றன.

“இவ்வாண்டு சூன் 23-27 வரை தமிழகம், கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் இது குறித்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. கலைஞர் கருணாநிதி புதிய எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அறிவிப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் ஓசையின்றி நடக்கின்றன.” என்றெல்லாம் தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்துகொண்டிருக்கின்றன.

செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் சிலர் தங்களின் ஆளுமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி தமிழ் எழுத்துகளில் புதிய மாற்றங்களைச் செய்ய முனைவதாகவும் கேள்விப்படுகிறோம்.

இவர்களின் இந்தத் தனிப்பட்ட நிகழ்ப்பு (Personal Agenda) பல ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இருந்தாலும், நற்றமிழ் அறிஞர் பெருமக்கள் சிலருடைய கண்டிப்பான எதிர்ப்புகளினால் தமிழ் எழுத்தை மாற்றும் முயற்சி மண்ணைக் கௌவிக்கொண்டு இருக்கிறது.

ஆனால், இப்போது தமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் இவர்கள் இடபெற்றுவிட்ட நிலையில்..; தமிழக முதல்வருக்கு மிகவும் அணுக்கமானவர்கள் ஆகிவிட்ட நிலையில்.. வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல, மெல்ல மெல்ல தமிழ் எழுத்துச் சீர்த்திருத்த நிகழ்ப்பை மீண்டும் தூசுதட்டி கையில் எடுத்துள்ளனர்.

இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட நல்லறிஞர்கள் இந்தப் புல்லறிவுத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கத் துணிந்துவிட்டனர். இந்தச் சிக்கல் இன்னும் பெரிதாக வெடிக்காவிட்டாலும் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கிறது.

இது இம்மாட்டில் நிற்க, இந்தப் புதிய எழுத்து மாற்றம் என்பது என்ன? எதை மாற்றப் போகிறார்கள்? ஏன் மாற்றப் பார்க்கிறார்கள்? தமிழ் எழுத்து மாற்றம் தமிழைச் சீர்படுத்துமா? அல்லது சீரழிக்குமா? என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இன்று தமிழில் நாம் பயன்படுத்திவரும் 247 எழுத்துகளில், ஏற்கனவே பல காலக்கட்டங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வீரமாமுனிவர் காலத்திலும் பின்னர் அண்மை நூற்றாண்டில், பெரியார் காலத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது வரலாறு.


ஆனால் இப்போது, சிலர் புதிதாகச் செய்ய விரும்பும் மாற்றங்கள் தமிழ் எழுத்து அமைப்பில் பூதாகரமான சிதைவை ஏற்படுத்துகின்றன என்று நற்றமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர். அதனைப் படிப்படியாகக் காண்போமா?

இப்போது சீர்த்திருத்தம் என்ற பெயரில் மாற்றப்பட வேண்டிய எழுத்துகளாக இகர - ஈகார, உகர – ஊகார எழுத்துகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

காரணம், இவை நான்கும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறதாம். குறிப்பாக, உகர ஊகார எழுத்துகளை எழுதுவதற்கு நிறைய குறியீடுகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமாம்.

கவனிக்க:-

1)கு, டு, மு, ரு, ழு, ளு –இந்த 6 உகரங்களில் கீழ்நோக்கிச் சுழிக்க வேண்டும்.

2)ங, சு, பு, யு, வு –இந்த 5 எழுத்துகளில் கீழ்நோக்கி ஒரு கால் இட வேண்டும்.

3)ஞு, ணு, து, நு, லு, று, னு –இந்த 7 உகரங்களில் கீழே அரை சுற்றுவந்து மேல்நோக்கி கோடு ஏற்ற வேண்டும்.

இப்படியாக உகர எழுத்துகள் ஒரு சீர்மையில் இல்லாமல், பல்வகைப்பட்டு இருக்கின்றனவாம். ஊகாரமும் இப்படியேதானாம். ஆகவேதான், இவற்றைச் சீரமைத்து ஒரே அமைப்பில் எழுத வேண்டுமாம். அதற்காகக் கீழே உள்ளது போன்ற குறியீடுகளை பயன்படுத்த வேண்டுமாம்.

மேலே படத்தில் காட்டப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தினால், அதிகமான எழுத்து வடிவங்களை நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகுமாம். குழந்தைகள் வெகு எளிதாகத் தமிழ் எழுத்துகளைப் படித்துக்கொள்வார்களாம். தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படும் குறியீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாமாம்.

எப்படி என்கிறீர்களா? இதோ இப்படித்தானாம்.

(மாற்றி அமைக்கப்பட்ட இகர, ஈகார உகர, ஊகாரங்கள்)

இந்தப் புதிய மாற்றத்தினால், தமிழ்மொழிக்குப் பெரிதாக ஏதும் பயனுண்டா என்று கேட்டால் இல்லை! இல்லை! இல்லை! என்பதே பதில். ஆனால், இதனால் மேலே சொன்னது போன்ற சில நன்மைகள் உண்டு என்று சிலர் வாதிடுகின்றனர். அவர்களுடைய வாதங்கள் ஏற்புடையதாகத் இல்லை என்பது மட்டுமல்ல அறிவுடைமையானதும் அல்ல.

அவர்களின் வாதங்களுக்கு நாம் சில எதிர்வாதங்களை வைக்க முடியும்.

1)அதிகமான எழுத்து வடிவங்களை நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

=>இத்தனை காலமும் அடிப்படை எழுத்துகளாக தமிழில் 30 மட்டுமே இருந்தாலும், நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளையும், அவற்றுக்குரிய வடிவங்களையும் பல்லாயிரம் கோடி தமிழ் மக்கள் எந்தவொரு சிறு சிக்கலும் இன்றி படித்தும் எழுதியும் நினைவில் வைத்தும் வந்திருக்கிறோமே எப்படி?

=>பிற்பட்ட காலத்து மக்களே இவற்றைப் படிக்கவும் எழுதவும் நினைவில் வைத்துக்கொள்ளவும் முடிந்திருக்கிறது என்றால், அறிவும் ஆற்றலும் நுட்பமும் நிரம்ப இருக்கும் தற்கால மக்களாலும் எதிர்கால மக்களாலும் முடியாதா என்ன?


2)குழந்தைகள் வெகு எளிதாகத் தமிழ் எழுத்துகளைப் படித்துக்கொள்வார்கள்.

=>எளிதாகப் படித்துக்கொள்ளுதல் என்பது கற்பித்தலையும் கற்றலையும் சார்ந்ததே அன்றி எழுத்துகளைச் சார்ந்திருப்பது அல்ல. அப்படிப் பார்த்தால், தமிழைவிட அதிகமான எழுத்துகளை வைத்திருக்கும் சீனர்களும், கொரியர்களும், சப்பானியர்களும் கல்வியில் தமிழர்களை விடவும் பின்தங்கி இருக்க வேண்டும் அல்லவா?

=>சீனர்களும் கொரியர்களும் சப்பனியர்களும், தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழைச் சீர்படுத்த துடியாய் துடிப்பவர்களைவிட பல மடங்கு துடிதுடித்து அவர்கள் மொழியைத் திருத்தியிருக்க வேண்டுமல்லவா?

3)தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படும் குறியீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாம்.

=>இற்றைக் காலத் தொழிநுட்பத்தின் குழந்தையாகிய கணினியிலும் கைப்பேசியிலும் தமிழ்க் எழுத்துகளை எழுதுவதில் பாரிய சிக்கல் ஏதுமில்லை என்ற சூழலில் எழுத்துக் குறியீடுகளைக் குறைக்க வேண்டியதன் தேவையும் அவசியமும் என்ன?

=>குறியீடுகளைக் குறைப்பதனால் தமிழ்மொழியில் ஏற்படப் போகும் ஆக்கங்கள் – வளர்ச்சிகள் என்னென்ன?

=>குறியீடுகளைக் குறைக்கிறோம் என்று சொல்லி, தமிழ் எழுத்துகளின் தனித்த அடையாளத்தைச் சிதைப்பது முறைதானா?

=>எழுத்துகளை மாற்றி அமைத்துவிட்டால் அதனை மக்கள் உடனே புரிந்துகொண்டு சரளமாகப் படித்துவிடவோ அல்லது எழுதிவிடவோ முடியுமா?

=>எழுத்துகளை மாற்றி அமைத்துவிட்ட பிறகு, பழைய எழுத்து முறையில் எழுதப்பட்ட அறிவுக் களஞ்சியங்களைப் படிப்பது எப்படி?

=>கணினி, கைப்பேசி தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய எழுத்து வடிவங்களைச் செய்வது யார்? எப்படி? எப்போது?

இப்படியாக பல கேள்விகளுக்கு எழுத்துச் சீர்திருத்த மேதைகள் இன்னும் பதில்கள் சொல்லியப்பாடில்லை. ஆனால், பாத்திரமே இல்லாமல் பாலைக் காய்ச்சத் துடிக்கிறார்கள்.

இப்போதைக்கு இந்த மட்டில் நிறுத்தலாம் என எண்ணுகிறேன். தமிழ் எழுத்து மாற்றம் குறித்து என்னுடைய புரிதலை இங்கு நினைக்கிறேன். இதில், மேலும் தெளிவு வேண்டின் விளக்குவதற்கு அணியமாக(தயார்) உள்ளேன். இதில், மாற்றுக் கருத்துகள் உடையவர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இதுபற்றி எழுத இன்னும் செய்திகள் கிடக்கின்றன. அவை நமக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. ஆய்வு என்ற பெயரில் அப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.

அதைப்பற்றி, அடுத்த இடுகையில் இன்னும் தொடர்வேன்.

கருத்துகள் இல்லை: