எழுத்துச் சீர்மை: கணியத்தமிழ் கூறியது

நாம் ஆழ்ந்த ஈடுபாடுள்ள தமிழ் ஆர்வலர்கள் எனினும், தமிழின் பரிமாணங்களை முழுமையாக அறிந்தவர்கள் அல்லர். அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ் வல்லமை பொருந்திய மைய அரசின் கீழ் அமைந்துள்ள ஒரு மாநில மொழியாகக் கருதப்படுவது அதன் பரவலையும், உலக அளவில் அதன் தரத்தையும் மிகவும் குறைத்து மதிப்பிடுவதாகும்.

இந்திய மொழிகளில் தமிழ் மட்டும்தான் இரண்டு நாடுகளில் இலங்கை, சிங்கப்பூர் தேசிய மொழி, ஆட்சி மொழி என அங்கீகாரம் பெற்றுள்ளது.

மலேசியா, மொரிசியஸ், தென் ஆப்ரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஃபிஜி போன்ற பல கீழை நாடுகளிலும், மேலை நாடுகளிலும் அரசு அங்கீகாரம் பெற்ற மொழி 90 - க்கு மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
இவற்றுள் 60 - க்கு மேற்பட்ட நாடுகளில் கணிசமான தொகையில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.தமிழர்களின் மக்கட் தொகை உலகில் தோராயமாக ஏழரைக் கோடி. இவர்களில் ஏறத்தாழ 20 சதவிகிதம் பேர் தமிழக எல்லைகட்கு வெளியே வாழ்கிறார்கள்.
தமிழரின் இந்தப் பரவலை அறிந்து தான் இங்கிலாந்தில் உள்ள BBc நிறுவனம், அது ஒலிபரப்பும் 40 - க்கு மேற்பட்ட மொழிகளில் வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகியவற்றின் ஆட்சி மொழிகளான வங்கம், உருது தவிர்த்த, மீதமுள்ள இந்திய மொழிகள் இருபதில், இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் ஒலிபரப்புகிறது.
UNESCO நிறுவனம் அண்மைக் காலம் வரை 30 - க்கு மேற்பட்ட மொழிகளில் Courier என்ற மாத இதழை நடத்தி வந்தது. இந்திய மொழிகளைப் பொருத்தவரை இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில்தான் அவ்விதழை வெளியிட்டுவந்தது.
சீன மொழியில் நாற்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் ஒலிபரப்புகிறார்கள். அவர்களும் இந்திய மொழிகள் இருபதில், இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் தான் ஒலிபரப்புகிறார்கள்.
தமிழ் மக்கள் ஒரு குவலயக் குடும்பம் (Global Family) . தமிழ் ஒரு குவலயக் குடும்பத்தின் மொழி: தமிழின் இந்தப் பரிமாணம் அதன் எதிர்கால வாழ்வுக்கு இன்றியமையாதது. எனவே இந்தப் பரிமாணம் காக்கப்பட வேண்டும்.
தமிழ் ஒரு குவலயக் குடும்பத்தின் மொழி என்ற பரிமாணம் காக்கப்பட வேண்டுமானால், உலகு தழுவி வாழும் தமிழர்கள் தங்கட்கு இருக்கும் ஒரே அடையாளமான தங்கள் தாய்மொழி தமிழை அறிந்தவர்களாகவும், தமிழ் மரபொடு தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
பெரும்பாலும் ஆங்கில மொழியின் 26 எழுத்துகளோடு தொடர்பு கொண்டுள்ள உலகத் தமிழ் குழந்தைகள், 247 எழுத்துகளைக் கொண்ட தமிழ் வரிவடிவத்தின் எண்ணிக்கையைப் பார்த்து மலைத்து நிற்கின்றனர்.
இந்தப் பிரச்சினை தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் கற்கும் 15 இலட்சம் குழந்தைகளுக்கும் பொருந்தும்.நாம் இங்கு முன்வைக்கும் சீர்திருத்தத்தை ஏற்றால், தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துக்களையும் சிரமமின்றி எழுதுவதற்கு 39 எழுத்துகளை மட்டும் கற்றால் போதுமானது.
இது பெரியார் அவர்கள் 1933 - இல் ஆரம்பித்து வைத்த எழுத்துச் சீரமைப்பின் அடுத்த கட்டம். இச்சீரமைப்பு இன்றியமையாதது: அறிவுத் துறைகளைக் கற்பதற்கும் மொழி தேவை. அடையாளத்திற்கும் மொழி தேவை.
விரைவு இன்றைய உலகின் வெற்றி வாசல்: தமிழ் மொழியைக் கற்பதில் விரைவு காணும் இச் சீரமைப்பு, தவிர்க்க இயலாதது. நடைமுறைப்படுத்தப்பட ஒரு நல்ல தருணத்திற்காகக் காத்திருக்கிறது. அதாவது நல்ல தலைவனுக்காகக் காத்திருக்கிறது. இரண்டையும் நாம்தான் உருவாக்க வேண்டும்.

வரிவடிவ மாற்றம்

கற்றுக் கொள்வதற்கு எளிதாக வரிவடிவங்களை மாற்றிக் கொள்வது அவசியம் என்ற கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள். இதன் பொருட்டு உகர, ஊகார, வரிசை உயிர்மெய்க் குறியீடுகளைப் புதிதாக அறிமுகப்படுத்துகிறார். மேலும், இகர, ஈகார வரிசைக் குறியீடுகளைத் தனி வடிவங்களாகப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்.
இதனால் குழந்தைகளுக்கும், தமிழ் கற்க விரும்பும் பிற மொழியினருக்கும் தமிழைக் கற்பது எளிதாகும் என்கிறார்.

வரிவடிவம் என்பது பதியும் ஊடகங்களும், பதியும் முறைகளும், பதியப் பயன்படும் கருவிகளும் மாறுபடும் போதெல்லாம் மாறுபடக்கூடிய - மாறுபடவேண்டிய ஒரு மொழிக்கூறு என்பதால் தமிழில் ஏற்படும் வரிவடிவ மாற்றங்களைத் தாராளமாக வரவேற்கலாம் - வரவேற்க வேண்டும்.

வரிவடிவ மாற்றத்தால் எழுத்துகளின் எண்ணிக்கையிலோ தன்மையிலோ எந்த மாறுதலும் ஏற்படாது; இதனால் வரிவடிவ மாற்றம் தமிழ் மொழியின் தன்மையை எந்த வகையிலும் பாதிக்காது; காலந்தோறும் ஏற்படும் வரிவடிவ மாற்றம் தமிழ் மொழி வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளதேயன்றி ஒருபோதும் வளர்ச்சிக்குக் குந்தகம் செய்யவில்லை; இதனால் வா.செ.கு அவர்களின் வரிவடிவச் சீர்திருத்தத்தையும் வரவேற்போமாக!
வா.செ.கு அவர்களின் வரிவடிவ மாற்றம் எதிர்காலச் சந்ததியினருக்குச் சிறந்ததொரு வழிகாட்டியாக வாழ்த்துகிறேன்!

வரியுருமாவுடன் வா.செ.கு எழுத்துரு

டாக்டர் வா.செ.கு சீரமைத்த வரிவடிவங்களில் அமைந்த எழுத்துருக்கள் பலவற்றை வரியுருமாவுடன் இணைத்து வழங்குகிறோம். இந்த சீரமைப்பால் பெரியார் முன்மொழிந்த தமிழ் எழுத்து சீரமைப்பு முழுமை அடைவதோடு தமிழை எழுதுவதும் கற்பதும் எளிதாகும்.
ஆதலால் வா.செ.கு எழுத்துகளைப் பலரும் பயன்படுத்தி இந்த வா.செ.கு சீரமைப்பைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவர் என்ற உறுதியுடையோம்!

கருத்துகள் இல்லை: