எழுத்துச் சீர்திருத்தம் பற்றி சிங்கை கோவலங்கண்ணன்

(சிங்கை கோவலங்கண்ணன், மதுரை.இரா.இளங்குமரனார் )


செந்தமிழ் தழைக்குமா?அன்புள்ள தமிழ் மக்களே! குழந்தையார் முன்வைக்கும் தமிழ் வரிவடிவ மாற்றத்தால் தமிழ் தழைக்குமா? வாழுமா?ஆங்கிலம் கற்றதால் பேரறிவு பெற்றுவிட்டோம் என்று நினைத்துக் கொண்டு, தமிழை முழுதும் ஆய்ந்த பழுத்த தமிழ் புலவர் பெருமக்களை கிணற்றுத் தவளைகள் என்று பழிக்கும் சில ‘ஆங்கில அறவாளிகள்’ உலகின் செம்மையான வரிவடிவத்தையும் ஒலி வடிவத்தையும் கொண்டுள்ள நம் செந்தமிழை குலைக்க எழுத்துச் சீர்மை வேண்டுமென்று குழறுபடி மிக்கக் கொள்கையை முன்மொழிகிறார்கள்.

இவர்கள் தாங்கள் புலமை பெற்றுள்ள துறையில் தமிழுக்காக ஆக்கப்பணியில் ஈடுபடலாம் அன்றோ? இவர்களின் இம்முயற்சி வெற்றிப் பெற்றால், தமிழாகிய அமிழ்தம் சீரிழந்து சிறப்பிழந்து அழிவதோடு, நம் மொழியோடு நம் பண்பாடு, கலைச் செல்வங்கள் எல்லாம் மறைந்தொழியுமன்றோ? தமிழ் சீர்மைக் கெடுக்க நினைக்கும் கிறுக்கர்கள் வழி செல்லாது தமிழறிஞர் வழி நின்று தமிழைக் காப்போம்! வளர்ப்போம்!

எழுத்துச் சீர்மை குறித்த என் கருத்தோட்டம் வருமாறு:-

இன்று தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாது தேவைப்படுவது தமிழை ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் முழுமையாக ஆளுமைப் படுத்துவதேயன்றி, எழுத்துச் சீர்மையன்று. சீர்மை வேண்டுவோர் முன்பெல்லாம் தட்டச்சையும் கணிப்பொறியையும் காட்டி அவற்றை தமிழில் இயக்குவது அரிது என்றும் இடர்பாடு மிக்கது என்றும் கூறிவந்தனர். இன்றோ கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் தமிழை இனிதே பயன்படுத்துகிறோம். கணிப்பொறி அறிவியல் விண்ணைத் தொட்டுவிட்டது. கணிப்பொறியில் தமிழையும் பிற மொழிகளையும் ஒலி ஒளி வடிவில் எளிதில் செலுத்தி பயன்படுத்தும் வழி பிறந்துள்ளது. (விசைப் பலகையின்றி, எழுதுகோல் கொண்டு சிலேட்டில் அல்லது தாளில் இயல்பாக எழுதுவது போல் கணிப்பொறி திரையில் இப்போதுள்ள நம் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதி கணிப்பொறியில் பதிவு செய்ய முடியும்).

இப்போது இக்கூற்றை விட்டுவிட்டு தமிழை தங்களால் தான் காப்பாற்ற முடியும் என்று நினைக்கும் ‘அறிஞர்கள்’, இன்றைய தமிழ் வரிவடிவம், நம் குழந்தைகள் தமிழைக் கற்பதற்கு தடையாகவும் தொல்லையாகவும் இருப்பதாக, மற்றொரு பொய்யான கரணியத்தை முன் வைத்து எழுத்து சீர்மை வேண்டும் என்கின்றனர். தமிழல்லாத கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகளின் வரிவடிவம், ஒலிவடிவம் தமிழை விட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாக இருக்கின்றன. அம்மொழியாளர்கள் தத்தம் தாய் மொழியை விட்டுவிட்டார்களா? ஆங்கில வரிவடிவத்தை பயன்படுத்த முற்பட்டுள்ளனரா?இவர்கள் கூறும் இக்கரணியம் பொருந்தாது என்பதனை தமிழ் பெற்றோராகிய நாம் நன்கு அறிவோம். நானும் அறிவேன்.

என் பிள்ளைகளுக்கு தாய் மொழி சீனம். தந்தை மொழி தமிழ். அவர்கள் எவ்வித சிக்கலும் இல்லாமல் தமிழைப் படித்தார்கள். என் தலைமகளுக்கு தமிழ் அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுத்த போதே மற்ற இரு பிள்ளைகளும் தானாகவே கற்றுக் கொண்டார்கள். மேல்நிலை 12 ஆம் வகுப்பு வரை தமிழைப் படித்து நல்ல தேர்ச்சியும் பெற்றார்கள். இங்கே நாம் மற்றொன்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ் அரிச்சுவடியை ஒரு சில நாள்களில் கற்று, எழுத்துக் கூட்டி, தமிழ் நாளிதழையோ நூலையோ படிக்க இயலும்.

சீன மொழியைத் தாய் மொழியாக கொண்ட ஒருவர் சீன நாளிதழையோ நூலையோ படிப்பதற்கு குறைந்தது இரண்டாயிரம் வரிவடிவங்களை மனஞ் செய்திருக்க வேண்டும். இது போல் ஆங்கில அரிச்சுவடியை கற்ற பின் எழுத்துக் கூட்டி ஆங்கில நாளிதழையோ நூலையோ படித்தல் இயலாது என்பது நாடறிந்த உண்மை.இது இப்படியிருக்க தமிழை கற்றல் கற்பித்தல் கடினம், கடினம் என்று பிதற்றுவது முறையாகுமோ?எழுத்து சுருக்கமோ வரி வடிவ மாற்றமோ நம் மொழியை வாழ வைக்காது. மாறாக சீர்குலையச் செய்து விடும்.

முன்மொழியப்படும் எழுத்துத் திருத்தத்தைக் கடைப்பிடித்தால் வரும் சிக்கல்கள்:-

1) இந்த மடலை திருத்திய வரிவடிவத்தைக் கொண்டு அச்சிட்டால் இம்மடல் ஒன்றரை மடங்குக்கு மேல் கூடுதலான பக்கங்களாக விரிவடையும். இதனால் பணச்செலவு கூடுமன்றோ?

2) இப்போதுள்ள வரிவடிவங்களான ரு,து,பு,கூ,தூ, பூ,ரூ போன்றவற்றை நீக்கி, புதிய வரிவடிவத்தை எழுத, அச்சடிக்க கால நேரம் கூடுமன்றோ?

மொழி வாழ வளர வேண்டுமென்றால் அது பேச்சு மொழியாகவும் மக்கள் வழக்கு மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழை வாழ வைக்க தமிழ் ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் முதலில் நிலை நாட்ட வேண்டும்.தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையா முதன்மைப் பணிகள் பல உள. அவற்றில் ஒன்று தமிழ் சொல்வளத்தை பெருக்குதல். பிற திராவிட மொழிகளிலுள்ள தென்மொழிச் சொற்களை மீட்டு பயன்படுத்துதல். புதிய சொல்லாக்கத்தை ஊக்குவித்தல். இவற்றால்தான் தமிழ் நல்ல வளர்ச்சி பெருமேயயாழிய, தமிழ் வடிவ மாற்றத்தால் அன்று. அதன் பின் எழுத்து சீர்மை வேண்டின் தமிழறிஞர்கள் மொழி நூல் வல்லார்கள், கணிப்பொறி வல்லார்கள் ஒன்று கூடி முடிவு செய்யலாம்.

குறிப்பு: இன்று கணிப்பொறியில் தமிழ் புழக்கத்திற்கு, எழுத்து மாற்றம் விரும்பும் அறிஞர்களை விட அயல்நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பெரும் தொண்டாற்றியுள்ளனர். இவர்கள் வழிநின்று தாய் மொழியாம் தமிழை வளர்ப்போம்.

எழுத்தாக்கம்:-
வெ.கரு. கோபாலகிருட்டிணன் (வெ.கரு. கோவலங்கண்ணன்),
(19.03.2010) தலைவர், வணிக கல்விச் சாலை, சிங்கப்பூர்.

1 கருத்து:

Araichchi சொன்னது…

தமிழ் எழுத்துக் குறிப்பது பிறப்பிடங்களை மட்டுமே அன்றி ஒலியன்களை அல்ல. மற்றய இந்திய மொழிகளில் எழுத்துக் குறிப்பது எழுந்தமானமாக அறிந்த ஒலியன்களை. இந்த விஞ்ஞான அடிப்படைகளை புரிந்திருப்பதோடு ஓரளவேனும் விஞ்ஞான அறிவும் உள்ளோர்தான் தமிழ் (மொழி) அறிஞர்களாவர்? மற்றவர்கள் இலக்கிய அறிஞர்கள்.

எதனைச் சீர்திருத்த முனைகின்றார்கள், அதில் ஏன் பிழை இல்லை என்று காரணத்துடன் வாதிடுவதுதான் முறை என்பதை அறிய வேண்டுகின்றேன்?