எழுத்துச் சீர்மைக்கு எதிராக 14 குறட்பாக்கள்

எந்த ஓர் ஆய்வும் செய்யாமல் - கருத்துரிமை வழிநின்று எந்தவொரு விவாதமும் செய்யாமல் - உலகத் தமிழ் அறிஞர்களை அழைத்து கலந்து பேசாமல் - மொழி அறிஞர்களின் மாற்றுக் கருத்துகளுக்குச் கொஞ்சமும் செவிசாய்க்காமல் - அறிவுடைமையான முறையில் ஆராய்ச்சி எதுவும் செய்யாமல் - ஆண்மைத் திறத்தோடு நேருக்கு நேர்நின்று கருத்துமோதல் பண்ணாமல் - வெளிப்படையாக வந்து கருத்தாடல் புரியாமல்...

இன்று எழுத்துச் சீர்திருத்தம் செய்ய சில தரப்பினர் தீவிரமாகச் செயல்படுகின்றனர்; தந்திரமாக செயல்படுகின்றனர்; யாருக்கும் தெரியாமல் புறக்கதவு வழியாக வந்துபோய் வேலை செய்கிறார்கள்; அரசியல் பலம் - அதிகார பலம் - ஆள் - அம்பு - சேனை - படை என அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு சதி வேலை செய்கிறார்கள்; தமிழை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல நாச வேலை செய்கிறார்கள்.

வரலாறு காணாத அளவுக்குத் தமிழ்மொழியில் மாபெரும் பேரழிவை ஏற்படுத்தவிருக்கும் இந்த எழுத்து சீத்திருத்தத்தை இன்று உலகம் முழுவதும் இருக்கின்ற பலர் எதிர்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

அந்த எதிர்ப்பலையின் ஒரு பகுதியாகக் கடந்த மே16-இல் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஏற்பாட்டில் 'தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு மாநாடு' எழுச்சியோடு நடந்தது.

அன்றைய மாநாட்டில் எழுத்து மாற்றத்தைக் கண்டித்து தமிழறிஞர் க.தமிழமல்லன் பாடிய குறட்பாக்கள் கீழே தரப்பட்டுள்ளன. இது வாசித்துப் பார்ப்பதற்கு மட்டுமன்று; நன்கு யோசித்துப் பார்ப்பதற்கும்தான்.*நல்லெழுத்தை மாற்றுவதோ?***


1. தமிழடிமை நீக்கார் தமிழ்த்திருத்தம் செய்வர்
உமிழ்கின்ற எச்சிலுக்(கு)ஒப்பு.

2. எழுத்துத் திருத்தம் இனிமேலும் செய்தால்
கழுத்து முறிந்துவிடும் காண்.

3. குறிக்கோள்கள் இல்லாமல் நம்எழுத்தை மாற்றும்
அறிவில்லார் செய்கொடுமை ஆய்.

4. அடியோடு மாற்றி அருந்தமிழை வீழ்த்தும்
தடியாரைத் தாங்கிடுதல் தப்பு.

5. அழிப்பார் சுழிப்பார் அடிப்பார் கெடுப்பார்
பழிப்பார் தமிழின் பகை.

6. எழுத்துத் திருத்தத்தை எந்நாளும் ஏலோம்
முழுத்தமிழ் கொல்வாரை மொத்து

7. கன்னடத்தில் சொல்லிவிட்டால் கால்முறிப்பார் நல்எழுத்தை
என்னிடம் திருத்துகிறாய் இங்கு.?

8. இதுவரை போதும் எழுத்துத் திருத்தம்
புதுத்திருத்தம் செய்யாமை பேசு.

9. மலையாளம் கோளாறு மண்டாரின் சிக்கல்
இலைஎழுத்து மாற்றங்கள் அங்கு.

10. தொல்காப் பியமோ துணிந்தநன் னூலாரோ
சில்லெழுத்தும் மாற்றாமை சீர்.

11. கல்விமொழி யாக்கக் கடனாற்ற எண்ணார்கள்
நல்லெழுத்தை மாற்று வதோ?

12. பயிற்றுமொழி யாக்கு பசியைத் தணிக்கும்
வயிற்றுமொழி ஆக்கிடவே வாழு.

13. கற்ற தமிழ்மக்கள் கல்லாராய் மாற்றிவிடும்
உற்றதீச் சூழ்ச்சி ஒடுக்கு.

14. உயிர்துடிக்கும் அன்னைக் குடன்தேவை சொல்எதுவோ?
உயிர்மருந்தே பட்டன்(று) உணர்.

  • எழுத்தாக்கம்:-
    முனைவர் க.தமிழமல்லன், புதுச்சேரி.
  • மூலம்:- thamizh-epi@googlegroups.com

கருத்துகள் இல்லை: