எழுத்துச் சீரழிவுப் போக்கு தொடங்கிடுச்சுங்கோ..


தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு இணையத்தில் பரவத் தொடங்கிவிட்டது. மேலே உள்ள படத்தை ஊன்றிப் பார்க்கவும்

சீர்திருத்த அழிவி செந்தமிழின் வரிவடிவத்தைச் சிதைத்துச் சின்னபின்னப்படுத்தும் வேலையைத் தொடங்கிவிட்டது.

அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் கீழே உள்ள செய்தியைப் பார்க்கவும். இது மின்னஞ்சல் வழியாக வந்தச் செய்தி. அது அப்படியே இங்கு தரப்படுகிறது.


********* மின்மடல் செய்தி *********


இன்றைக்கு (19.6.2010) ஜீமெயில் ஆட்சென்சில் செந்தமிழ் சம்பந்த படுத்தி விளம்பரம் காட்டுச்சு.

இத்துடன் இணைக்கப் பட்டுள்ள ஒளிபடம்.

அந்த விளம்பரம் இருக்கும் சுட்டி...


.. இது தான் எழுத்து சீர்த்திருத்தமா என்று எனக்கு மயக்கமே வந்திடுச்சு.... :( :(

ஆண்டவா டமீல் பீப்பிள்களிடம் இருந்து தமிழைக் காப்பாற்றப்பா...

(எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும். சரியான தமிழ் உள்ளீட்டு கருவி இல்லை.)

அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
மின்னஞ்சல்: tamilpayani@gmail.com

தமிழி உயிர்மெய்களின் அடவு (design):- அரிய தகவல்

தமிழியில் உள்ள இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களை மாற்றி அவற்றை கிரந்தக் குறியீட்டோடு நிறுவுவதற்குத் தமிழெழுத்துச் சிதைப்பாளர்கள் இப்பொழுது பெரிதும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அதுவும் செம்மொழி மாநாடு இன்னும் 15 நாட்களில் வரப்போகிறதா? வயிற்றில் நெருப்புக் கட்டியதுபோல் இவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை ”இருக்கும் நாட்களுக்குள் குழப்பஞ்செய்து தமிழக அரசாணையைப் பெற்றுவிட மாட்டோமா?” என்று குட்டிக்கரணம் போடுகிறார்கள். கூடவே இன்னுஞ்சிலர் “கொம்புகளின் குதர்க்கம்” என்று உளறுகிறார்கள். மொத்தத்தில் ”அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்று மேலோட்டமாய்க் கூறி, அரசியலாரோடு கூடிக் குலவி, உண்மைத் திராவிட ஆர்வலரையும் ”பெரியார் பெயர் சொல்லி” ஏமாற்றி, எல்லோருக்கும் எல்லாமாய் கவடம் பேசிக் கருமமே கண்ணாய்ச் சிதைப்புவேலை செய்கிறார்கள்.

இந்தச் சிதைப்பாளர் தமிழுக்கு மட்டும் உலை வைக்கவில்லை. கூடவே தமிங்கிலம் என்னும் குறைப்பிள்ளையை பிறப்பித்தெடுக்க எழுத்துநடை போடுகிறார்கள். இந்தத் தமிங்கிலத்திற்கு 31அடிப்படை எழுத்துக்கள் பற்றாது; 51 இருந்தாற்றான் எழுதமுடியுமாம். எனவே கிரந்த எழுத்துக்களை நுழைப்பதிலும் சிதைப்பாளர்கள் மிகுவிருப்புக் கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் தமிழெழுத்துக்களைச் சிதைத்து, இன்னொரு பக்கம் தமிங்கிலத்திற்குத் தேவையான எழுத்துக்களை நுழைக்க வழி பார்த்திருக்கிறார்கள்.

உண்மையில் தமிழை எழுத இற்றைத் தமிழியிலிருக்கும் எழுத்துக்களே போதும். தேவையானால் ஏற்கனவே இருக்கும் 5 கிரந்த எழுத்துக்களைக் கொண்டு பிறமொழி ஒலிகளைக் கொண்டுவந்துவிட இயலும். தமிழெழுத்துப் பாதுகாப்பாளர்களைப் ”பண்டிதர்கள்” என்று பெயர்சொல்லிக் கேலிசெய்து, தமிழ்ப்புலவர்களை வேண்டாப்பிறவிகள் என்னுமாப்போல ஒதுக்கி வைத்து, ஒரு பண்பாட்டு ஒழிப்பே நடந்துகொண்டிருக்கிறது. வேடிக்கை பார்க்கும் பலரும், சிதைப்பாளர்கள் செய்வது ”தங்கள் அடிமடியில் கைவைக்கும் செய்கை, கொஞ்சநஞ்சம் இருப்பதையும் உருவிக் கொண்டு நம்மை அம்மணமாக்கி இச்சிதைப்பாளர்கள் ஓடப் பார்க்கிறார்கள்” என்பதை அறியாமல் ”இன்னொருவருக்கு வந்தது போல்” வாளா இருக்கிறார்கள்.

நடுவில் நிற்கும் பலருக்கும் ”தமிழ் உயிர்மெய்யெழுத்துக்கள் எப்படி எழுந்தன? அவற்றின் அடவு (design) எது?” என்ற பின்புலம் தெரியாமல் இச்சிதைப்பாளரின் முயற்சிகளுக்கு அரைகுறையாகத் தலையாட்டும் போக்கும் தென்படுகிறது. அறியாதவராய்ப் பொதுமக்கள் இருப்பதே ஏமாற்றின் அடிமானமாய் இருக்கிறது.

இந்தக் கட்டுரையின் குறிக்கோள் 2700 ஆண்டுகளாய் இங்கு மாறாது இருக்கும் தமிழி உயிர்மெய்களின் அடவை விளக்கிச் சொல்லுவதாகும்.

பழங் கல்வெட்டுக்கள், நடுகற்கள், ஓட்டுச் சில்லுகள் ஆகியவற்றை ஆராய்ந்த தொல்லியலாளர், ”இந்தியத் துணைக்கண்டத்தில் சிந்து சமவெளி காலத்திற்கு அப்புறம் எழுந்த எழுத்துக்களில் ஆகப் பழையவை தமிழ்நாட்டிலும், இலங்கை அநுராதபுரத்திலும் தான் கிடைத்திருக்கின்றன” என்று கொஞ்சங் கொஞ்சமாய் இப்பொழுது ஏற்றுக் கொள்ளுகிறார்கள். தமிழ் நாட்டில் (கரூருக்கு அருகில் கொடுமணத்திலும், தேனி மாவட்டத்திலும்) கிடைத்த தமிழிப் பொறிப்புகள் தாம் இதுவரை இந்தியாவிற் கண்ட பொறிப்புக்களில் ஆகப் பழையனவாகும். கி,மு,4/5 ஆம் நூற்றாண்டு என்றே இவற்றின் காலம் சொல்லப்படுகின்றது. இலங்கையில் கிடைத்த பொறிப்பும் தமிழிக்கு இணையாகவே தெரிகிறது.

ஒரு 70, 80 ஆண்டுகளுக்கு முன்னால் இதுபோன்ற பொறிப்புக்களை ”அசோகன் பெருமி” என்றழைத்தார்கள். இப்பொழுது அசோகன் காலத்திற்கும் முன்னால் கி.மு 4/5 ஆம் நூற்றாண்டுப் பொறிப்புக்களும் கிடைப்பதால் ”அசோகன் பெருமி என்று சொல்வது பொருளற்றது” என்ற முடிவிற்குத் தொல்லியலார் வந்துவிட்டனர். உண்மையாகப் பார்த்தால், இலங்கையிற் கிடத்த பொறிப்பு பாகத மொழியிற் கிடைத்த பெருமிப் பொறிப்பு என்றும், தமிழகத்திற் கிடைத்தது தமிழ்மொழியிற் கிடைத்த தமிழிப் பொறிப்பு என்பதுமே சரியாக இருக்கும்.

தமிழர் பலருங் கூடத் ”தமிழி” என்று பெருமிதத்தோடு இம்முற்கால எழுத்தைச் சொல்ல ஏன் தயங்குகிறார்கள் என்று புரிவதில்லை. அதை ”அசோகன் வழிப்பட்ட பெருமி”, ”தமிழ்ப் பெருமி” என்று “ஊராருக்கு வந்த செய்தியாய்” ஒட்டுதலின்றிச் சொல்வது வியப்பாக இருக்கிறது. இத்தனைக்கும் ”தமிழியில் இருந்து தான் பெருமி கிளைத்திருக்க வேண்டும், பெருமியில் இருந்து தமிழி கிளைத்திருக்க முடியாது” என்று வாதிப்பதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. [அந்தக் காரணங்களை எடுத்துரைக்க இந்தக் கட்டுரை களனில்லை. எனவே அவற்றைத் தவிர்க்கிறேன்.] தமிழி எழுத்துப் பொறிப்பு பரவலாக (அரசகட்டளைப் பொறிப்பாக அன்றி அன்றாடப் பொதுமக்களும், வினைஞரும், வணிகரும் பயன்படுத்தக் கூடிய அளவுக்குப் பரவலாக) இருந்திருக்கிறது அதாவது, தமிழரிடையே படிப்பறிவு பரவலாய் கி.மு.5/4 ஆம் நூற்றாண்டில் இருந்திருக்கக் கூடும் என்ற சிந்தனையை உணர்த்துகிறது.

இனி உயிர்மெய் அடவுகளைப் பார்ப்போம்.

  • முதலில் உயிருக்கும் மெய்க்குமே எழுத்துக்கள் அமைந்தன போலும். உயிர்மெய்களுக்கு அடையாளமாய், அடிப்படை மெய்யெழுத்தை ஒரு சதுரமாகக் கருதிக் கொண்டு அதில் இரண்டு தீற்றுக்களை (strokes) வெவ்வேறு திசைகளில் அமைத்திருக்கிறார்கள். [இனி வரப்போகும் விளக்கங்களைப் படம் 1 ஐக் கொண்டு அறிய வேண்டுகிறேன். வெறும் சதுரம் கொண்டு இரு வரிசையும், ககரத்தைக் கொண்டு இரு வரிசையுமாய் பழம் பொறிப்புக்கள் அடையாளங் காட்டப்படுகின்றன.]



வெறும் சதுரம் என்பது மெய்யெழுத்தையும், சில போது அகரமேறிய உயிர்மெய்யையும் குறித்திருக்கிறது. [இங்கே சதுரம் என்பதை மெய்க்குப் பகரமாக நான் ஓர் அடையாளம் போற் பயன்படுத்துகிறேன்.] அதாவது வெறும் சதுரத்தைப் போட்டு அதை மெய்யெழுத்திற்கும், அகரமேறிய உயிர்மெய்க்கும் வேறுபாடு தெரியாது குறித்திருக்கிறார்கள். இதே போல ஒரு தீற்று சதுரத்தின் பக்கத்திலிருந்து கிளம்பி கிழக்கே நீண்டிருந்தால் அது அகரமேறிய உயிர்மெய்யையோ, ஆகாரம் ஏறிய உயிர்மெய்யையோ குறித்திருக்கிறது. இங்கும் இருவேறுபட்ட அடையாளங்கள் ஒரே குறியீட்டிற்கு நெடுநாட்கள் இருந்திருக்கின்றன. அதாவது க், க, கா என்ற எழுத்துக்களுக்கான பொறிப்புக்களில் (இதைப்போல மற்ற 18 முப்படை எழுத்துக்களுக்கான பொறிப்புக்களில்) ஏதேனும் இரண்டு பொறிப்புக்கள் ஒன்று போலவே காட்சியளித்திருக்கின்றன. [அல்லது ஒரே பொறிப்பிற்கு இரண்டு எழுத்தடையாளங்கள் இருந்திருக்கின்றன.] மூன்று எழுத்துக்களுக்கும் மூன்று குழப்பமில்லாத பொறிப்புக்கள் எழுத்துக்களின் தொடக்கத்தில் இல்லை.

ஆனாலும், தொடக்கத்தில் தமிழ் மொழியை மட்டுமே கையாண்ட காலத்தில் இந்தச் சிக்கல் பெரிதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட (தொல்காப்பியத்தின் காலமான) கி.மு.700 களில் இருந்து கி.பி.100 கள் வரைக்குங்கூடச் சமகாலத்தில் இத்தடுமாற்றம் உணரப்படாமலே இருந்தது. ஏனென்றால் தமிழ் மொழியில் இருந்த மெய்ம்மயக்கங்கள் தமிழ் பேசுவோர்க்குத் தெரிந்து இருந்ததால், எழுத்துக் குறைபாடு புலப்படவில்லை.

தமிழ்ப் பயன்பாட்டில் சில விதப்பான வழக்குகள் உண்டு. க என்ற உயிர்மெய் வந்தால், அதற்கு முன் ங் என்ற பெய்யெழுத்துத் தான் வரமுடியும், ஞ், ந் போன்ற மெய்கள் வரமுடியாது, அதே போல க - விற்கு முன் ங என்ற உயிர்மெய்யாகவும் இருக்கமுடியாது. இது போன்ற எழுத்தொழுங்குகள் தமிழ் பேசியோருக்கு நன்றாகவே தெரிந்திருந்தன. அடுத்தடுத்து “கக” என்று வர முடியாது, முன்னால் வருவது க் என்றும் பின்னால் வருவது க என்றும் தான் அமையமுடியும். இது போல வெவ்வேறு எழுத்தமைதிகள், எந்த எழுத்துச் சொல்லின் முதலில் வரும், எந்த எழுத்துச் சொல்லின் கடைசியில் வரும், எது மெய்யெழுத்தாகும், எது உயிர்மெய் அகரமாகும் என்பவை சொல்லின் அமைப்பை வைத்துப் பெரும்பாலும் சொல்லக் கூடியதாய் இருந்தன. மொத்தத்தில் தமிழி என்னும் எழுத்து, தமிழ்மொழியை மட்டுமே எழுதப் பயன்பட்ட காலத்தில் இந்த எழுத்துக்குறையை உணரவிடாது மொழி அணி செய்து போக்கியிருக்கிறது. The Tamiz language effectively camouflaged the inherent defect in the Tamizi script. There was no realization of the problem.

கி.மு.600க்கு அப்புறம், கொஞ்சங் கொஞ்சமாகத் தமிழகத்திற்கும் மகதத்திற்கும் இடையே பொருளியல், அரசியல், மெய்யியல் எனப் பல்வேறு துறைகளில் உறவாடல்கள் கூடிப் போயின. வடக்கிருந்து வேதநெறியும், செயினமும், புத்தமும், தெற்கிருந்து உலகாய்தம், சாங்கியம், ஆசீவகம் போன்றவையும் ஒன்றோடொன்று உறவாடத் தொடங்கின. மொழிகளும் ஒன்றிற்குள் ஒன்று ஊடுறுவத் தொடங்கின. அதுகாறும் எழுதத் தயங்கிய வடபுலத்தார், தென்புலத்திலிருந்து ஏற்பட்ட தாக்கத்தில் தமிழி எழுத்தைத் தங்களுக்கேற்பப் பயன்படுத்தத் தொடங்கினர். எழுதாக் கிளவிகள் சிறிது சிறிதாய் எழுதுங் கிளவிகளாய் மாறத் தொடங்கின. தமிழ் கி.மு.700 இல் இருந்தே எழுதுங் கிளவியாய் இருந்தது. பாகதம் கி.மு.400/300 இல் தான் எழுதுங் கிளவியாயிற்று. பாலி அதற்குப் பின்னர் தான் எழுத்து நிலைக்கு வந்தது. சங்கதம் கி.பி.150 இல் தான் எழுதுங் கிளவியாயிற்று. இற்றைப் புரிதலின் படி இந்தியத் துணைக்கண்டத்தில் முதலில் எழுதத் தொடங்கிய மொழி தமிழே. இந்தக் கணிப்பில் சிந்துசமவெளி மொழியைக் கணக்கிற் சேர்க்கவில்லை. அது இந்தக் காலத்தும் படித்து அறியப்படாததாகவே இருக்கிறது.]

தமிழி என்ற எழுத்தைப் பாகதம் என்ற மொழிக்கும், பாகதம் கலந்த தமிழ் மொழிக்கும் பயன்படுத்தத் தொடங்கியபோது தான், முன்னாற் சொன்ன க், க, கா என்ற எழுத்துக்களின் பொறிப்புத் தோற்றக் குறை பெரிதாகக் காட்சியளித்தது. தமிழ் போலல்லாது பாகதத்தின் சொற்களுள் எவ்வெழுத்தும் முதலிற் தொடங்கலாம், எவ்வெழுத்திலும் சொற்கள் முடியலாம், தமிழ்போல் மெய்ம்மயக்கங்கள் கிடையா. ஒரு மெய்யெழுத்திற்கு அப்புறம் அதற்கு இனமான வல்லின உயிர்மெய்தான் பலபோதுகளில் வரும் என்ற ஒழுங்கு கிடையாது. ம் என்ற மெய்க்கு அப்புறம் க என்ற உயிர்மெய் வரலாம். தமிழில் வரமுடியாது. இவை போலச் சொல்லமைப்பினுள் வரும் எழுத்துக் கூட்டமைப்புக்கள் பாகதத்திற்கும் தமிழுக்கும் வேறுபட்டன.

எனவே மெய், அகரமேறிய உயிர்மெய், ஆகாரமேறிய உயிர்மெய் ஆகிய மூன்றிடையே தெளிந்தவேறுபாடு காட்டுவது பொறிப்பில் தேவையாயிற்று. இதற்கு எழுந்த தீர்வுகள் மூன்றாகும்.

ஒன்று, பட்டிப்புரோலு தீர்வு. இத்தீர்வில் (எந்தத் தீற்றும் சேராத) வெறுஞ்சதுரமே மெய்யெனக் கொள்ளப்பட்டது. சதுரத்திலிருந்து கிளம்பிக் கிழக்கே ஒரு தீற்றுக் கொண்ட சதுரம் அகரமேறிய உயிர்மெய்யானது. அடுத்து ஆகாரத்தைக் குறிக்க முதல் தீற்றை ஒடித்துக் கீழ்நோக்கிய கோணமாக்கி நீட்டிய படி [உடன் இருக்கும் படம் -2 இல் கண்டபடி] பட்டிப்புரோலுக் கல்வெட்டில் எழுதியிருக்கிறார்கள். [கிழக்கே நீண்ட இரண்டு தீற்றுக்கள் கொண்ட சதுரத்தை ஆகாரமாக்கியிருக்கலாம். ஏனோ, அப்படிச் செய்யவில்லை.] பட்டிப் புரோலு முயற்சி மட்டும் பழந்தமிழகத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்திருந்தால், புள்ளி என்ற கருத்தீடே நம் மெய்யெழுத்துகளுக்கு ஏற்பட்டிருக்காது.


இரண்டாவது தீர்வு வடநாட்டில் ஏற்பட்டது. இதன்படி ஒன்றின் கீழ் இன்னொரு சதுரம் இருந்தால் மேற்சதுரம் மெய்யாகவும் கீழது உயிர்மெய்யாகவும் படிக்கப்படும். [காண்க. படம் 2.] இரு ககரங்களைக் குறிக்க இரண்டு சதுரங்கள் ஒன்றின்கீழ் இன்னொன்றாய் இருக்கிறதென்று கொள்ளுவோம். இந்த இருசதுரக் கட்டைக்கு மேலே கிழக்குத் திசையில் ஒரு தீற்றுப் போடாவிட்டால் இதை ”க்க” என்றும், ஒரு தீற்றுப் போட்டால் ’க்கா” என்றும் படிக்க வேண்டும். தமிழில் உள்ளது போல் மெய்ம்மயக்கங்கள் பாகதத்தில் கிடையாது என்பதால் மேலே எந்த மெய்யோடும் கீழே எந்த உயிர்மெய்யும் சேரலாம். ”க்க” மட்டுமல்லாது “ச்க, ட்க, த்க, ப்க, ம்க.......” என்று பல்வேறு ஒலிக்கூட்டுக்கள் பாகதத்தில் வரலாம். தமிழில் ஒருசில கூட்டுக்கள் தாம் வரலாம்.

வடக்கே ஏற்பட்ட இரண்டாம் தீர்வும் ஒரு சரியான தீர்வு தான். 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இந்தத் தீர்வை ஒழுங்கான முறையிற் புரிந்துகொள்ளாது 1980 களில் ISCII உருவாக்கிய CDAC அறிஞர்களும், பின்னால் அதிலிருந்து Unicode உருவாக்கிய ஒருங்குறிச் சேர்த்திய (unicode consortium) அறிஞர்களும் தவறான முறையில் abugida என்கிற ஆகாசக் கோட்டையைக் கட்டிவிட்டார்கள். தொல்லியல், கல்வெட்டியல், எழுத்தியல் பற்றிய செய்திகளைத் தெரியாது எழுப்பிய தேற்றம் abugida வாகும். எப்படி புவி நடுவம் என்கிற தேற்றம் தவறோ (அது ஓரளவுக்கு ஒழுங்காகக் கணக்கிடும் என்றாலும்), அது போல அகரம் ஏறிய உயிர்மெய் தான் வடபுலத்து மொழிகளுக்கு அடிப்படை என்பது தவறான தேற்றம். எப்படி சூரிய நடுவத் தேற்றம் முற்றிலும் சரியோ, அது போல மெய்கள் தான் வடபுலத்து மொழிகளுக்கும் அடிப்படை என்பது முற்றிலும் சரி. இரண்டாவது தீர்வை ஒழுங்காகப் புரிந்து கொள்ளாத ஒருங்குறிச் சேர்த்தியம் மீண்டும் மீண்டும் முட்டுச் சந்திற்றான் போய் நிற்கும்.

மூன்றாவது தீர்வு தென்புலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட தீர்வு. இதன்படி, இன்னொரு குறியீடாக மாத்திரை குறைக்கும் புள்ளி என்றவொன்று உருவாக்கப் பட்டது. சதுரத்தின் மேல் புள்ளியிட்டால் அரை மாத்திரை குறைக்கப் பட்டு மெய் என்று ஆனது. புள்ளியிடாத வெறுஞ்சதுரம் அகரமேறிய உயிர்மெய் ஆனது. கிழக்குப் பக்கம் எழும்பிய, ஒரு தீற்றுக் கொண்ட சதுரம், ஆகாரமேறிய உயிர்மெய்யைக் குறித்தது. மூன்றாவது தீர்வு முற்றுமுழுதாகத் தொல்காப்பியத்திற் சொல்லப் பட்ட தீர்வு. இதுதான் தமிழ்த் தீர்வு. [காண்க. படம் 2.]


இந்த மூன்று தீர்வுகளும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் எழுந்த தீர்வுகளாய் இருக்க வேண்டும். ஒன்று முந்தியது, இன்னொன்று பின்பட்டது என்று சொன்னால் மூன்று தீர்வுகள் எழுந்திருக்கா. தீர்வு கண்டுபிடிக்கப் பட்ட சிக்கலுக்கு மீண்டுந் தீர்வு காண எந்தப் பகுத்தறியும் மாந்தனும் செய்ய முற்பட மாட்டான் என்பதால், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மூன்று தீர்வுகள் சமகாலத்தில் எழுந்திருக்கவேண்டும் என்றே முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

அடிப்படை அடவில் ஒரு சதுரத்தின் நாலுபக்கங்களிலும் ஒன்றோ, இரண்டோ தீற்றுகளைக் சேர்க்கமுடியும் என்றால் மொத்தம் எட்டு அடவுகள் அமையும், இதோடு வெறும் சதுரத்தையும் சேர்க்கும் போது 9 அடவுகள் கிடைக்கும். புள்ளி ஒட்டிய சதுரம் மெய் என்றும், எதுவுமே இல்லாத சதுரம் அகரமேறிய உயிர்மெய் எனவும், ஒரு தீற்றுக் கிழக்கில் கொண்ட சதுரம் ஆகாரத்தைக் குறித்தது என்றும் சொன்னேன். கிழக்கே இரண்டு தீற்றுக்கள் கொண்ட சதுரம் முன்னே சொன்னது போல் எதற்குமே பயன்படாது போயிருக்கிறது. ஆகார உயிர்மெய்க்காக, சதுரத்தின் கிழக்கில் இருந்து வெளிப்பட்ட தீற்று வட்டெழுத்தானபோது அது காலானது. வடபுலத்து எழுத்துக்களில் இன்றும் அது அடிப்படை எழுத்தில் இருந்து பிரியாது ஒட்டிக் கொண்டு இருக்கிறது. தமிழி எழுத்து வட்டெழுத்தாகிப் பின் வீச்செழுத்தாகிப் பின் அச்செழுத்துக்காக அறவட்டாகப் பிரிக்கப்பட்டுக் காலானது.

இனி, மற்ற உயிர்மெய்களுக்குப் போவோம்.


ஒரு தீற்று சதுரத்தின் மேலிருந்து கிளம்பி வடக்கே நீண்டிருக்குமானால் அது இகர உயிர்மெய் எனப்பட்டது. இரு தீற்றுக்கள் சதுரத்தின் மேலிருந்து கிளம்பி வடக்கே நீண்டிருக்குமானால் அது ஈகார உயிர்மெய் எனப்பட்டது. சதுரத்தின் மேலிருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்ட தீற்றுக்கள் வட்டெழுத்தும், வீச்செழுத்தும் எழுந்த வகையாற் திசைமாறிக் கொக்கியாகவும், சுழிக்கொக்கியாகவும் மாறின. ஆனாலும் இன்றுவரை (2700 ஆண்டுகளுக்கு அப்புறமும்) அவை வடக்கு நோக்கிப் புறப்பட்டுப் பின் திரும்பியே இவை உருமாறுகின்றன.


ஒரு தீற்று சதுரத்தின் கீழிருந்து கிளம்பி தெற்கே நீண்டிருக்குமானால் அது உகர உயிர்மெய் எனப்பட்டது. இரு தீற்றுக்கள் சதுரத்தின் கீழிருந்து கிளம்பி தெற்கே நீண்டிருக்குமானால் அது ஊகார உயிர்மெய் எனப்பட்டது. சதுரத்தின் கீழிருந்து தெற்கு நோக்கிப் புறப்பட்ட தீற்றுக்கள் வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்த வகையாற் திசைமாறி இன்று சுற்று (கு - வில் வருவது), விழுது (ஙு - வில் வருவது), இருக்கை (நு - வில் வருவது), கூட்டு (கூ-வில் வருவது), சுழிச்சுற்று (பூ -வில் வருவது), இருக்கைக்கால் (நூ -வில் வருவது), கொண்டை (மூ -வில் வருவது) ஆகிய குறிகளாக மாறியிருக்கின்றன. ஆனாலும் இந்த 7 குறிகளும் கீழிருந்து தான் புறப்படுகின்றன. தெற்கில் பிறந்த தீற்றுக்கள் என்னும் குறிப்பு 2700 ஆண்டுகள் ஆனபிறகும் மங்காது இருக்கிறது. [இன்றைக்கு எழுத்துச் சிதைப்பாளர்கள் காட்டும் குறியீடோ, எழுத்தின் பக்கத்தில் கிளம்பி கிழக்கேயோ, அன்றேல் திசை திரும்பித் தெற்கே வந்தாற் போலோ, அமைகின்றன. பழைய உகரங்களின் அடிப்படைத் தீற்றுக்களை, அடிப்படை அடவை இந்த மாற்றத்தால் இவர்கள் காற்றில் பறக்கவிடுகிறார்கள். இற்றைய உகர, ஊகார உயிர்மெய்கள் பார்ப்பதற்குத் தான் ஏழு உகர/ஊகாரக் குறியீடுகளாய்த் தெரியும். அடிப்படையில் பழைய அடவுக்கொள்கை இன்னும் அவற்றுள் காப்பாற்றப் படுகிறது.]


ஒரு தீற்று சதுரத்தின் பக்கத்திலிருந்து கிளம்பி மேற்கே நீண்டிருக்குமானால் அவை எகர/ஏகார உயிர்மெய்களாகும். இவற்றை வேறுபடுத்த சதுரத்தின் மேற்பக்கத்திற் புள்ளிக் குறியீடு பயன்படும். மேற்பக்கத்திற் புள்ளியும் மேற்குப் பக்கத்திற் தீற்றும் இருந்தால் அது எகரம். மேலே புள்ளியில்லாது, மேற்குப் பக்கத்தில் மட்டும் தீற்று இருந்தால் அது ஏகாரம். மேற்கு நோக்கிப் புறப்பட்ட ஒற்றைத் தீற்று வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்த வகையாற் திசை மாறி இன்று கொம்பாக மாறியிருக்கிறது. அது கொம்பாக மாறியது முற்றிலும் இயற்கையே. மேற்கே தீற்று இருந்ததை இன்றுவரை அது நமக்கு எடுத்துரைக்கிறது.

பொதுவாகத் தீற்றுக்கள் நாலுபக்கமும் எழுந்தன. வெறுமே கிழக்குப் பக்கம் மட்டும் அவை எழவில்லை. இந்த அடிப்படை உண்மையை அறியாத சில அரைகுறைச் சீரழிப்பாளர்கள் ”கொம்புகளின் குதர்க்கம்” என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். ”ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்றாளாம்” என்று பழமொழி சொல்வார்கள். பழந்தமிழ் உயிர்மெய்களின் அடவை ஒழுங்காகப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் ”கொம்புகளின் குதர்க்கம்” என்று வீண் குதர்க்கம் பேசுகிறார்கள். குதர்க்கம் கொம்புகளிடம் கிடையாது. இந்தச் சிதைப்பாளர்களிடம் தான் இருக்கிறது. ஒற்றைக் கொம்புகளுக்கும் வீரமாமுனிவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சிதைப்பாளர்களில் ஒருசிலர் ஏன் வீரமா முனிவரைப் போட்டு இப்படிக் குதறிக் கொண்டிருக்கிறார்கள் என்று விளங்குவதேயில்லை. வீரமாமுனிவரின் பங்களிப்பைக் கீழே பார்ப்போம்.


இரு தீற்றுக்கள் சதுரத்தின் பக்கத்திலிருந்து கிலம்பி மேற்கே நீண்டிருக்குமானால் அது ஐகார உயிர்மெய்யாகும். இன்றுங்கூட ஐகாரக் கொம்பு இரட்டைக் கொம்பாகவே மலையாளத்தில் எழுதப்படும். வீச்செழுத்தில் இருந்து தமிழ் அச்செழுத்து உருவாக்கியவர்கள் இரட்டைக் கொம்பைப் பிரித்து எழுதாமல் அப்படியே சேர்த்து எழுதியபடியே வைத்துக் கொண்டார்கள். இதெல்லாம் ஒரு 350 ஆண்டுப் பழக்கம்.


இப்பொழுது சதுரத்தின் நாலு பக்கங்களிலும் இரண்டு தீற்றுக்கள் வரை போட்டுப் பார்த்தாயிற்று. [அதிலும் கிழக்கே இரண்டு தீற்றுக்கள் கொண்ட அடவு கடைசி வரைப் பயன்படாமலே போனது. மொத்தம் எட்டு அடவுகளில் ஏழு அடவுகளே தமிழிப் பொறிப்புகளுக்குப் பயன்பட்டன. இனி ஒரு தீற்று ஒரு திசையிலும் இன்னொரு தீற்று இன்னொரு திசையிலுமாக ஆகக் கூடிய அடவுகள் 6 ஆகும்.

கிழக்கு/மேற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
கிழக்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
கிழக்கு/வடக்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
வடக்கு/மேற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
வடக்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
மேற்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்ருக்கள் உள்ள அடவு

இந்த ஆறு அடவுகளில் முதல் அடவையே ஒகர/ஓகார உயிர்மெய்களைக் குறிப்பதற்குப் பழந்தமிழர் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒகரம், ஓகாரத்தை வேறுபடுத்தச் சதுரத்தின் மேற்பக்கத்திற் புள்ளிக் குறியீடு பயன்படும். மேற்பக்கத்திற் புள்ளியும் மேற்கு/கிழக்குப் பக்கங்களில் ஒவ்வொரு தீற்றும் இருந்தால் அது ஒகரம். மேலே புள்ளியில்லாது, மேற்கு/கிழக்குப் பக்கங்களில் ஒவ்வொரு தீற்றும் இருந்தால் அது ஓகாரம். பின்னால் வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்த வகையாற் மேற்குப் பக்கத்துத் தீற்று திசை மாறி இன்று கொம்பாகவும், கிழக்குப் பக்கத்துத் தீற்று திசை மாறிக் காலாகவும் உருப்பெற்றிருக்கின்றன. இந்த உருமாற்றங்களிலும் ஓர் ஒழுங்கு இருக்கிறது. கொம்பு வந்தாலே அது மேற்கேயிட்ட தீற்றின் மறுவுரு என்பதும், வெறுங்கால் வந்தாலே அது கிழக்கேயிட்ட தீற்றின் மறுவுரு என்பதும், விளங்கும். மேலே எடுத்துரைத்த ஆறு இருபக்க தீற்றுக்கள் உள்ள அடவுகளில் மீந்திருக்கும் ஐந்தும் பயன்படாமலே போயிருக்கின்றன. வேறு ஏதேனும் புதுக் குறியீடுகள் எதிர்காலத்தில் ஏற்படுமானால் அந்த அடவுகளை எண்ணிப் பார்க்கலாம்.

ஔகாரத்திற்கு என்று எந்தக் குறியீடும் தொடக்க காலத்தில் இல்லை. தொடக்க காலத் தமிழியில் 11 தீற்றுக் குறிமுறைகளே இருந்திருக்கின்றன.

தமிழி எழுத்துக்களின் அடவு அடிப்படை 2 தீற்றுக்களும், ஒரு புள்ளியும் தான். புள்ளியும் கூட மெய்யெழுத்தைக் குறிப்பதற்கும், எகர/ஏகாரங்களிலும், ஒகர/ஓகாரங்களிலும் குறில்/நெடில் வேறுபாடு காட்டவும் மட்டுமே பயன்பட்டிருக்கிறது. [ஒருவேளை தொடக்க காலத்தில் இந்தக் குறில் நெடில் வேறுபாடு தமிழில் இல்லை போலும். இதைப் பற்றிய விளக்கம் நம் எகர/ஏகார, ஒகர/ஓகாரச் சொற்களின் ஒரு பொருள்/வேறொலிப்புச் சிக்கலுக்குள் கொண்டுபோகும். எனவே அதைத் தவிர்க்கிறேன்.]

மொத்தத்தில் தொடக்க காலத்து அடவு என்றவகையில், இதில் செய்துபார்த்துத் திருத்திக் கொள்ளும் பாங்கு இருக்கிறது. இன்றுவரை அந்தப் பாங்கு மாறவில்லை. வீரமாமுனிவர் எகர/ ஏகாரங்களிலும், ஒகர/ஓகாரங்களிலும் வரும் புள்ளியைத் தவிர்த்து மேற்கே வரும் கொம்பை ஒற்றைச் சுழியாகவும் இரட்டைச் சுழியாகவும் மாற்றியமைத்தார். அது கொம்புகளில் இருந்து கிளைத்த ஒரு மாற்றம் என்ற அளவில் அடிப்படை அடவைக் குலைக்கவில்லை. இப்பொழுதும் மேற்கே இருந்து கிளைத்த தீற்றை அவை இன்னமும் நினைவூட்டுகின்றன.

இதுநாள் வரை இருக்கும் தமிழி அடவிற்கு மீறிச் சொல்லப்படுகிற எந்த முயற்சியும் 2700 ஆண்டுகள் (தொடக்க நிலை, வட்டெழுத்து நிலை, வீச்செழுத்து நிலை, அச்செழுத்து நிலை என எல்லாவற்றிலும்) தொடர்ந்து வந்த போக்கைக் குலைக்கும் ஒன்றாகும்.

வரிவடிவம்:- சப்பானியன் காப்புணர்வும் தமிழன் சிதைப்புணர்வும்

தன்னுடைய தாய்மொழியின் எழுத்து வடிவத்தைக் காப்பதற்குச் சப்பான்காரன் பெரும்பாடு படுவதற்கும் அஞ்சுவதே இல்லை. எவ்வளவு சிக்கல் - சிரமம் எதிர்கொண்டு வந்தாலும், தொழில்நுடபம் வேகமாக வளர்ந்தாலும், படிப்பதற்கும் எழுதுவதற்கும் இடர்பபடுகள் ஏற்பட்டாலும் தங்கள் மொழியின் வரிவடிவத்தை நிலைப்படுத்துவதில் சப்பானியர் உறுதியாக இருக்கின்றனர்.

தொழில்நுட்பத்திற்காகவோ வேறு எந்த காரணத்திற்காகவோ சப்பானியர் தங்கள் எழுத்தில் தலைகீழ் மாற்றங்களைச் செய்துகொள்ளவில்லை. மொழியின் தனித்த அடையாளம் சிதைந்து; சீரழிந்துபோகும் அளவுக்கு எழுத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக, தங்களுடைய வரிவடித்தின் தனி அடையாளத்தையும் தனிச்சிறப்பையும் பாதுகாப்பதில் அவர்கள் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் - எந்த அளவுக்கு மெனக்கெடுகிறார்கள் என்பதற்கு இந்தச் செய்தி நல்ல சான்று.
//இரங்கானா அல்லது கதங்கானா முறையில் அல்லது ரோமானிய (ஆங்கில) எழுத்துகளில் சப்பானிய எழுத்துகளை அடித்தால், படவெழுத்துகள் வரும் முறையில் கணிப்பலகையை (Keyboard) அமைத்துள்ளனர். 'கஞ்சி' எழுத்துகளின் உச்சரிப்பினைத் தட்டச்சு செய்தால், கஞ்சி அச்சில் வரும் முறையில் விசைப்பலகையை அமைத்துக்கொண்டார்களே தவிர, விசைப்பலகையின் விசைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப எழுத்து வடிவங்களைச் சிதைத்துக் கொள்ளவில்லை. அன்றாடம் ஏறத்தாழ 2000 கஞ்சி வடிவங்களைப் பயன்படுத்தும் தேவை உள்ளது. இதனால், மிகவும் மெதுவாகவே கணியச்சிட முடிகிறது.
  • இதனைத் தவிர்க்க ஒருவர் கண்டுபிடித்த முறையே பன்முரசு முறைக் கணிப்பலகை. சப்பானியர்கள் தங்கள் எழுத்தைச் சிதைக்கவில்லை. மாறாகத் தேவைக்கேற்ப கணினி விசைப்பலகையை அமைத்துக்கொண்டு தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றனர். //
சப்பானியரின் இந்த உயர்ந்த மொழிமானம்; எழுத்து வடிவக் காப்புணர்வோடு, இன்று தமிழ் எழுத்துகளைச் சிதைக்கப் புறப்பட்டிருக்கும் தமிழர்கள் சிலரின் மொழி உணர்வு; வரிவடிவக் காப்பு உணர்வையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; ஓர்ந்து பாருங்கள்.
  • இ, ஈ, உ, ஊகார தமிழ் எழுத்து வரிவடிவத்தைச் சிதைத்து புதிய வகையிலான எழுத்து வடிவத்தை அறிமுகப்படுத்த துடியாகத் துடித்துக்கொண்டிருக்கும் சிலருக்கு இதனைச் சிந்திக்க நேரமில்லாமல் போகலாம். அல்லது இதனைக் கண்டும் காணாததுபோல கண்மூடி - வாய்ப்பொத்தி மௌனியாக இருந்துவிடுவார்கள்.
ஆனால், உண்மைத் தமிழ் பற்றாளர்களும் நடுநிலையாளர்களும் உலகம் முழுவதும் பரந்து இருக்கின்றனர். அத்தகையவர் அன்புகூர்ந்து இதனைச் சிந்திக்க வேண்டும்; எழுத்துச் சீரழிப்பைத் தடுப்பதற்கு தகுந்த செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். காரணம்,
இப்போது இல்லாவிட்டால்; இனி
என்றுமே தமிழைக் காப்பாற்ற முடியாது.

சீனத்தைக் காட்டி தமிழைச் சீர்திருத்தும் சதிநாச வேலை


இ, ஈ, உ, ஊகார வரிசையில் உள்ள 72 எழுத்துகளைச் சீர்திருத்த வேண்டும் என்று அறிவாளிகள் கும்பலொன்று அறிவிலித்தனமாக இயங்கிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆய்வுக்குரிய தருக்கங்களையோ அல்லது அறிவுக்குப் பொருந்திய ஏரணங்களையோ அல்லது பகுத்தறிவுடன் கூடிய வாதங்களையோ முன்வைக்க மாட்டாமல், உப்புச் சப்பில்லாத காரணங்களை முன்வைத்து எழுத்துச் சீர்திருத்தத்தைப் பரப்புரை செய்கிறார்கள். அவை:-

1.இந்தச் சீர்த்திருத்தத்தால் தந்தை பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்துச் சீர்மை நிறைவு பெறும்.

2.சீன மொழி மிகப்பெரிய சீர்திருத்ததிற்கு உள்ளாகினதால் இன்று வளர்ச்சி அடைந்திருக்கிறது.

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதையாக மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லி - அறைத்த மாவையே அறைப்பது போல - துவைத்த துணியையே துவைப்பது போல இந்த இரண்டு காரணங்களை மட்டுமே வாயில் நுரைதள்ள சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ‘எழுத்துச் சிதைப்பாளர்கள்’.

ஆனால், அந்தச் சிதைப்பாளர்களின் வாதங்களை அடித்து நொறுக்கும் வகையில் அண்மையில் ஐயா நாக.இளங்கோவன் அவர்கள் ஆழமான ஆய்வினை வெளியிட்டுள்ளார். கடந்த மே16இல் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் நடத்திய ‘எழுத்து மாற்ற எதிர்ப்பு மாநாட்டில்’ இந்த ஆய்வு வெளியிடப்பட்டது.

இப்போது, அது காணொளி வடிவத்தில் வந்திருக்கிறது; தமிழ் எழுத்து மாற்றத்திற்கு சீன மொழியை மேற்கோள் காட்டிப் பேசும் ‘எழுத்துச் சிதைப்பாளர்களின்’ வாதங்களை தூள்தூளாக்கிப் போடுகிறது.

அதுமட்டுமல்லாமல், தந்தை பெரியாரைக் காட்டிக் காட்டி கருத்து பர(ச)ப்பும் ‘எழுத்துச் சிதைப்பாளர்களின்’ முகமூடியை ‘டர்ர்ர்ர்ர்ர்ரென’ கிழித்துப் போடுகிறது. பகுத்தறிவு பேசிய பெரியாரின் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் சதிகாரர்களின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

அனைவரும் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய காணொளி இது. அறிவுடைமைப் பண்பும் நடுநிலைப் போக்கும் உடையவர்கள் அமைதியாகக் கண்டு - கேட்டு - சிந்தித்து - சீர்தூக்கிப்பார்க்க வேண்டிய அரிய காணொளி இது.

பகுதி 1



">பகுதி 2



">பகுதி 3





எழுத்துச் சீர்மைக்கு எதிராக 14 குறட்பாக்கள்

எந்த ஓர் ஆய்வும் செய்யாமல் - கருத்துரிமை வழிநின்று எந்தவொரு விவாதமும் செய்யாமல் - உலகத் தமிழ் அறிஞர்களை அழைத்து கலந்து பேசாமல் - மொழி அறிஞர்களின் மாற்றுக் கருத்துகளுக்குச் கொஞ்சமும் செவிசாய்க்காமல் - அறிவுடைமையான முறையில் ஆராய்ச்சி எதுவும் செய்யாமல் - ஆண்மைத் திறத்தோடு நேருக்கு நேர்நின்று கருத்துமோதல் பண்ணாமல் - வெளிப்படையாக வந்து கருத்தாடல் புரியாமல்...

இன்று எழுத்துச் சீர்திருத்தம் செய்ய சில தரப்பினர் தீவிரமாகச் செயல்படுகின்றனர்; தந்திரமாக செயல்படுகின்றனர்; யாருக்கும் தெரியாமல் புறக்கதவு வழியாக வந்துபோய் வேலை செய்கிறார்கள்; அரசியல் பலம் - அதிகார பலம் - ஆள் - அம்பு - சேனை - படை என அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு சதி வேலை செய்கிறார்கள்; தமிழை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல நாச வேலை செய்கிறார்கள்.

வரலாறு காணாத அளவுக்குத் தமிழ்மொழியில் மாபெரும் பேரழிவை ஏற்படுத்தவிருக்கும் இந்த எழுத்து சீத்திருத்தத்தை இன்று உலகம் முழுவதும் இருக்கின்ற பலர் எதிர்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

அந்த எதிர்ப்பலையின் ஒரு பகுதியாகக் கடந்த மே16-இல் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஏற்பாட்டில் 'தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு மாநாடு' எழுச்சியோடு நடந்தது.

அன்றைய மாநாட்டில் எழுத்து மாற்றத்தைக் கண்டித்து தமிழறிஞர் க.தமிழமல்லன் பாடிய குறட்பாக்கள் கீழே தரப்பட்டுள்ளன. இது வாசித்துப் பார்ப்பதற்கு மட்டுமன்று; நன்கு யோசித்துப் பார்ப்பதற்கும்தான்.



*நல்லெழுத்தை மாற்றுவதோ?***


1. தமிழடிமை நீக்கார் தமிழ்த்திருத்தம் செய்வர்
உமிழ்கின்ற எச்சிலுக்(கு)ஒப்பு.

2. எழுத்துத் திருத்தம் இனிமேலும் செய்தால்
கழுத்து முறிந்துவிடும் காண்.

3. குறிக்கோள்கள் இல்லாமல் நம்எழுத்தை மாற்றும்
அறிவில்லார் செய்கொடுமை ஆய்.

4. அடியோடு மாற்றி அருந்தமிழை வீழ்த்தும்
தடியாரைத் தாங்கிடுதல் தப்பு.

5. அழிப்பார் சுழிப்பார் அடிப்பார் கெடுப்பார்
பழிப்பார் தமிழின் பகை.

6. எழுத்துத் திருத்தத்தை எந்நாளும் ஏலோம்
முழுத்தமிழ் கொல்வாரை மொத்து

7. கன்னடத்தில் சொல்லிவிட்டால் கால்முறிப்பார் நல்எழுத்தை
என்னிடம் திருத்துகிறாய் இங்கு.?

8. இதுவரை போதும் எழுத்துத் திருத்தம்
புதுத்திருத்தம் செய்யாமை பேசு.

9. மலையாளம் கோளாறு மண்டாரின் சிக்கல்
இலைஎழுத்து மாற்றங்கள் அங்கு.

10. தொல்காப் பியமோ துணிந்தநன் னூலாரோ
சில்லெழுத்தும் மாற்றாமை சீர்.

11. கல்விமொழி யாக்கக் கடனாற்ற எண்ணார்கள்
நல்லெழுத்தை மாற்று வதோ?

12. பயிற்றுமொழி யாக்கு பசியைத் தணிக்கும்
வயிற்றுமொழி ஆக்கிடவே வாழு.

13. கற்ற தமிழ்மக்கள் கல்லாராய் மாற்றிவிடும்
உற்றதீச் சூழ்ச்சி ஒடுக்கு.

14. உயிர்துடிக்கும் அன்னைக் குடன்தேவை சொல்எதுவோ?
உயிர்மருந்தே பட்டன்(று) உணர்.

  • எழுத்தாக்கம்:-
    முனைவர் க.தமிழமல்லன், புதுச்சேரி.
  • மூலம்:- thamizh-epi@googlegroups.com

எழுத்துச் சீர்திருத்தம் பற்றி சிங்கை கோவலங்கண்ணன்

(சிங்கை கோவலங்கண்ணன், மதுரை.இரா.இளங்குமரனார் )


செந்தமிழ் தழைக்குமா?அன்புள்ள தமிழ் மக்களே! குழந்தையார் முன்வைக்கும் தமிழ் வரிவடிவ மாற்றத்தால் தமிழ் தழைக்குமா? வாழுமா?ஆங்கிலம் கற்றதால் பேரறிவு பெற்றுவிட்டோம் என்று நினைத்துக் கொண்டு, தமிழை முழுதும் ஆய்ந்த பழுத்த தமிழ் புலவர் பெருமக்களை கிணற்றுத் தவளைகள் என்று பழிக்கும் சில ‘ஆங்கில அறவாளிகள்’ உலகின் செம்மையான வரிவடிவத்தையும் ஒலி வடிவத்தையும் கொண்டுள்ள நம் செந்தமிழை குலைக்க எழுத்துச் சீர்மை வேண்டுமென்று குழறுபடி மிக்கக் கொள்கையை முன்மொழிகிறார்கள்.

இவர்கள் தாங்கள் புலமை பெற்றுள்ள துறையில் தமிழுக்காக ஆக்கப்பணியில் ஈடுபடலாம் அன்றோ? இவர்களின் இம்முயற்சி வெற்றிப் பெற்றால், தமிழாகிய அமிழ்தம் சீரிழந்து சிறப்பிழந்து அழிவதோடு, நம் மொழியோடு நம் பண்பாடு, கலைச் செல்வங்கள் எல்லாம் மறைந்தொழியுமன்றோ? தமிழ் சீர்மைக் கெடுக்க நினைக்கும் கிறுக்கர்கள் வழி செல்லாது தமிழறிஞர் வழி நின்று தமிழைக் காப்போம்! வளர்ப்போம்!

எழுத்துச் சீர்மை குறித்த என் கருத்தோட்டம் வருமாறு:-

இன்று தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாது தேவைப்படுவது தமிழை ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் முழுமையாக ஆளுமைப் படுத்துவதேயன்றி, எழுத்துச் சீர்மையன்று. சீர்மை வேண்டுவோர் முன்பெல்லாம் தட்டச்சையும் கணிப்பொறியையும் காட்டி அவற்றை தமிழில் இயக்குவது அரிது என்றும் இடர்பாடு மிக்கது என்றும் கூறிவந்தனர். இன்றோ கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் தமிழை இனிதே பயன்படுத்துகிறோம். கணிப்பொறி அறிவியல் விண்ணைத் தொட்டுவிட்டது. கணிப்பொறியில் தமிழையும் பிற மொழிகளையும் ஒலி ஒளி வடிவில் எளிதில் செலுத்தி பயன்படுத்தும் வழி பிறந்துள்ளது. (விசைப் பலகையின்றி, எழுதுகோல் கொண்டு சிலேட்டில் அல்லது தாளில் இயல்பாக எழுதுவது போல் கணிப்பொறி திரையில் இப்போதுள்ள நம் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதி கணிப்பொறியில் பதிவு செய்ய முடியும்).

இப்போது இக்கூற்றை விட்டுவிட்டு தமிழை தங்களால் தான் காப்பாற்ற முடியும் என்று நினைக்கும் ‘அறிஞர்கள்’, இன்றைய தமிழ் வரிவடிவம், நம் குழந்தைகள் தமிழைக் கற்பதற்கு தடையாகவும் தொல்லையாகவும் இருப்பதாக, மற்றொரு பொய்யான கரணியத்தை முன் வைத்து எழுத்து சீர்மை வேண்டும் என்கின்றனர். தமிழல்லாத கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகளின் வரிவடிவம், ஒலிவடிவம் தமிழை விட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாக இருக்கின்றன. அம்மொழியாளர்கள் தத்தம் தாய் மொழியை விட்டுவிட்டார்களா? ஆங்கில வரிவடிவத்தை பயன்படுத்த முற்பட்டுள்ளனரா?இவர்கள் கூறும் இக்கரணியம் பொருந்தாது என்பதனை தமிழ் பெற்றோராகிய நாம் நன்கு அறிவோம். நானும் அறிவேன்.

என் பிள்ளைகளுக்கு தாய் மொழி சீனம். தந்தை மொழி தமிழ். அவர்கள் எவ்வித சிக்கலும் இல்லாமல் தமிழைப் படித்தார்கள். என் தலைமகளுக்கு தமிழ் அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுத்த போதே மற்ற இரு பிள்ளைகளும் தானாகவே கற்றுக் கொண்டார்கள். மேல்நிலை 12 ஆம் வகுப்பு வரை தமிழைப் படித்து நல்ல தேர்ச்சியும் பெற்றார்கள். இங்கே நாம் மற்றொன்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ் அரிச்சுவடியை ஒரு சில நாள்களில் கற்று, எழுத்துக் கூட்டி, தமிழ் நாளிதழையோ நூலையோ படிக்க இயலும்.

சீன மொழியைத் தாய் மொழியாக கொண்ட ஒருவர் சீன நாளிதழையோ நூலையோ படிப்பதற்கு குறைந்தது இரண்டாயிரம் வரிவடிவங்களை மனஞ் செய்திருக்க வேண்டும். இது போல் ஆங்கில அரிச்சுவடியை கற்ற பின் எழுத்துக் கூட்டி ஆங்கில நாளிதழையோ நூலையோ படித்தல் இயலாது என்பது நாடறிந்த உண்மை.இது இப்படியிருக்க தமிழை கற்றல் கற்பித்தல் கடினம், கடினம் என்று பிதற்றுவது முறையாகுமோ?எழுத்து சுருக்கமோ வரி வடிவ மாற்றமோ நம் மொழியை வாழ வைக்காது. மாறாக சீர்குலையச் செய்து விடும்.

முன்மொழியப்படும் எழுத்துத் திருத்தத்தைக் கடைப்பிடித்தால் வரும் சிக்கல்கள்:-

1) இந்த மடலை திருத்திய வரிவடிவத்தைக் கொண்டு அச்சிட்டால் இம்மடல் ஒன்றரை மடங்குக்கு மேல் கூடுதலான பக்கங்களாக விரிவடையும். இதனால் பணச்செலவு கூடுமன்றோ?

2) இப்போதுள்ள வரிவடிவங்களான ரு,து,பு,கூ,தூ, பூ,ரூ போன்றவற்றை நீக்கி, புதிய வரிவடிவத்தை எழுத, அச்சடிக்க கால நேரம் கூடுமன்றோ?

மொழி வாழ வளர வேண்டுமென்றால் அது பேச்சு மொழியாகவும் மக்கள் வழக்கு மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழை வாழ வைக்க தமிழ் ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் முதலில் நிலை நாட்ட வேண்டும்.தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையா முதன்மைப் பணிகள் பல உள. அவற்றில் ஒன்று தமிழ் சொல்வளத்தை பெருக்குதல். பிற திராவிட மொழிகளிலுள்ள தென்மொழிச் சொற்களை மீட்டு பயன்படுத்துதல். புதிய சொல்லாக்கத்தை ஊக்குவித்தல். இவற்றால்தான் தமிழ் நல்ல வளர்ச்சி பெருமேயயாழிய, தமிழ் வடிவ மாற்றத்தால் அன்று. அதன் பின் எழுத்து சீர்மை வேண்டின் தமிழறிஞர்கள் மொழி நூல் வல்லார்கள், கணிப்பொறி வல்லார்கள் ஒன்று கூடி முடிவு செய்யலாம்.

குறிப்பு: இன்று கணிப்பொறியில் தமிழ் புழக்கத்திற்கு, எழுத்து மாற்றம் விரும்பும் அறிஞர்களை விட அயல்நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பெரும் தொண்டாற்றியுள்ளனர். இவர்கள் வழிநின்று தாய் மொழியாம் தமிழை வளர்ப்போம்.

எழுத்தாக்கம்:-
வெ.கரு. கோபாலகிருட்டிணன் (வெ.கரு. கோவலங்கண்ணன்),
(19.03.2010) தலைவர், வணிக கல்விச் சாலை, சிங்கப்பூர்.

தமிழக அரசு தமிழைச் சீர்குலைக்கப் போகிறதா?

தமிழக அரசியல் (27-5-2010) இதழில் வெளிவந்த செய்தி இது.