எழுத்துச் சீர்த்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு


தமிழ் மொழியின் எழுத்துகளை சீர்திருத்த வேண்டும் என்று நான் மிகவும் மதிக்கும் பேராசிரியர் வா.செ.கு அவர்களும், நண்பர் கணேசன் அவர்களும் பல்லாண்டுகளாக பல இடங்களில் எழுதி வருகிறார்கள், பல ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இப் போக்கு எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது. இது உண்மையிலேயே மிகவும் கெடுதி தரும், அறவே வேண்டாத போக்கு என்பது என் கருத்து. தமிழர்கள் இன்று இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட முயற்சிகள் தமிழுக்கு அளப்பரிய கேடு செய்யும். இது பற்றி பேரா வா.செ.கு அவர்களிடமும், கணேசனிடமும் வேறு யாருடனும் நான் கருத்துரையாட அணியமாக இருக்கின்றேன். மொழி வேறு எழுத்துரு வேறு என்று பற்பல கருத்துகள் வைப்பவர்களின் கருத்தோட்டங்களை நான் நன்கு அறிவேன். இப்போதைக்கு அண்மையில் நண்பர் கணேசன் இட்ட கீழ்க்காணும் பதிவிற்கு என் மறுமொழியைக் கீழே ஓர் இடுகையாக பதிவு செய்கிறேன். பின்னர் தேவை கருதி இது பற்றி தொடர்ந்து சில கூறுதல் வேண்டும்.

http://nganesan.blogspot.com/2008/05/english-medium-effect-on-tamil.html

நண்பர் கணேசன்,
வணக்கம். நான் எத்தனையோ முறை கூறியிருக்கிறேன். தமிழ் உயிர்மெய் எழுத்துக்களில் உள்ள இகர, ஈகார, உகர ஊகாரக் குறிகளைப் பிரித்து எழுதத்தேவை இல்லை. அருள்கூர்ந்து இதனைச் செய்யாதிர்கள்!! இதனால் பல மில்லியன் கணக்கான பதிவுகளை மக்கள் படிக்க இயலாமல், கல்வெட்டு தேர்வாளரைக் கொண்டு படிப்பது போல படிக்க நேரும். தட்டச்சுப் பொறி காலத்திய சீர்திருத்ததை, இன்று வளர்ந்துள்ள கணிப்புரட்சி நாளில், சிலிக்கான், நானோநுட்பக் காலத்தில், முன்வைத்து வலியுறுத்துவது என்னை வியக்க வைக்கின்றது. தமிழை alphabet முறைக்கு மாற்றுவது இந்திய எழுத்துமுறையின், அதுவும் சிறப்பாக தமிழ் எழுத்து முறையின் அருமையைக் கெடுப்பது ஆகும். தமிழ் எழுத்து முறை Abugida வும் அல்ல, Abjad முறையும் அல்ல. தனித்தன்மை வாய்ந்த தமிழ் எழுத்து முறை. . உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றும் கொண்டிருப்பது.

உயிர்மெய் எழுத்தின் உயிரைப் பிரித்து எழுத வேண்டும் எனில் ஏன் கி =க்இ என்றும், கு = க்உ என்றும் எழுதி, பகா எண்ணாகிய 31 எழுத்துக்களோடு எல்லாவற்றையும் அழகுற எழுதலாமே? அகரம் ஏறிய மெய்யெழுத்தை எழுதி எதற்காக ஐயா புதிதாக உயிர்க்குறி இடுதல் வேண்டும்?! தமிழ் எழுத்து முறையை மாற்ற வேண்டும் என்றால் இலத்தீன் எழுத்து முறைக்கு மாறிவிடலாமே? அல்லது "கூடை" என்பதை க்ஊட்ஐ என்று எழுதலாமே? ஏன் தனியாக மேலும் பிற உயிர்க்குறிகள் தேவை? தமிழ் உயிர்-மெய் எழுத்து மட்டும் கொண்டு இயங்கும் alphabet நெடுங்கணக்கு கொண்ட மொழியில்லை. தமிழ் உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றும் கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த மொழி. நீங்கள் கூறுவது redundant system (தேவையில்லாத, வெற்றாக மேலும் குறிகளை சேர்ப்பது; இருக்கும் குறைகளைப் பெருக்குவது. ).

நான் மிகவும் மதிக்கும் வா.செ.கு அவர்களும் நீங்களும் ஏன்தான் இப்படி இந்த அழிவுதரும் போக்கை வலியுருத்துகிறீர்கள் என்று விளங்கவில்லை? அருள்கூர்ந்து இப் போக்கினை உடனே நிறுத்த வேண்டிக்கொள்கிறேன்.

எழுத்தாக்கம்:-
பேராசிரியர் செல்வா, கனடா

மூலம்: http://tamilveli.blogspot.com/2008/12/blog-post.html

1 கருத்து:

ப.கந்தசாமி சொன்னது…

மொழியை ஆக்கம் பெற ஏதாவது செய்யுங்கள் ஐயா. "நான்" மேதாவி என்று எண்ணி கிறுக்கத்தனம் ஏதும் செய்யவேண்டாம் தமிழ் மே-தாவிகளே!