தமிழ் எழுத்துச் சீர்மை வலைப்பதிவு அறிமுகம்

தமிழ் எழுத்துகளில் சீர்த்திருத்தம் செய்யப்படவிருப்பதாகச் செய்தி அறியப்படுகிறது. இதன் தொடர்பிலான செய்தி கடந்த 7.1.2010ஆம் நாளன்று மாலை மலர் இணைய இதழில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணையத் தளத்தில் எழுத்துச் சீர்மை தொடர்பான 30 நிமிட காணொளி இடம்பெற்று இந்தச் செய்தியை உறுதிபடுத்தியது.


பலரும் மதிக்கத்தக்க அறிஞராகவும் கல்வியாளராகவும் விளங்கும் முனைவர் வா.செ.குழந்தைசாமி இந்தப் புதிய எழுத்துச் சீர்மையை வலியுறுத்தியும் பரப்புரை செய்தும் வருகின்றார்.

1.தமிழ் எழுத்துகளில் இ, ஈ, உ, ஊ ஆகிய நான்கு எழுத்து வரிசை எழுத்துகளில் சீர்மைத் தன்மை இருக்கவில்லை.

2.தமிழ்மொழியைச் சீர்மையாகவும் எளிமையாகவும் விரைவாகவும் கற்கலாம்

3.உலகம் முழுவது உள்ள தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ்ப் படித்துவிடுவார்கள்

4.இந்தச் சீர்மையின் வழி தந்தை பெரியார் கொண்டுவந்த எழுத்துச் சீர்மை முழுமைபெறும்

முதலிய கரணியங்களைக் காட்டி அவர் இந்தச் சீர்மையை முன்மொழிந்து வருகின்றார்.

இந்த முயற்சி புதியதன்று. கடந்த பத்தாண்டுகளாக இக்கருத்தினை விடாமல் வலியுறுத்தி வருகின்றார். ஆயினும், அவருடைய எழுத்துச் சீர்மை முன்மொழிவில் தமிழுக்கு ஊறு செய்யக்கூடிய தன்மைகள் அதிகமிருப்பதால் அறிஞர்கள் குழாம் அதனை இதுவரையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போதும்கூட, தமிழ்க்கடல் புலவர் இரா.இளங்குமரனார், மறைமலை இளக்குவனார், முனைவர் மு.இளங்கோவன், பேராசிரியர் செல்வா(கனடா), பெரியண்ணன் சந்திரசேகரன்(அமெரிக்கா), பேராசிரியர் இராம.கி, மணி.மு.மணிவண்ணன் முதலிய நல்லறிஞர்கள் பலர் எழுத்துச் சீர்மையை வெளிப்படையாக மறுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, 'எழுத்துச் சீர்மையின் மறுபக்கங்கள்' என்னும் தலைப்பில் எல்லாருடைய சிந்தனையையும் தட்டி எழுப்பக்கூடிய வகையில் நாக.இளங்கோவன் அழம்நிறைந்த ஆய்வொன்றை வெளியிட்டு இருக்கிறார். எழுத்துச் சீர்மை முன்மொழிவில் மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட மறுபக்கங்களையும் இந்தச் எழுத்துச் சீர்மையால் விளையப் போகும் எதிர்மறை விளைவுகளையும் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். மேலும், இந்தச் சீர்மை தேவையற்றது என்பதற்கான பல நுட்பமான கரணியங்களை பன்னாட்டுச் சூழலில் ஆய்ந்திருக்கிறார்.

இருந்தாலும், எதிர்வரும் சூன் திங்களில் தமிழகம் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் பயன்படுத்திக்கொண்டு எழுத்துச் சீர்மையை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட சில தரப்பினர் முனைப்புடன் இருக்கின்றனர் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், எழுத்துச் சீர்மை குறித்த பல்வேறு கருத்துகள் உலகத் தமிழரிடையே நிலவுவதைக் காணமுடிகின்றது. அவற்றைப் பின்வரும் முறையில் வகைப்படுத்திக் கூறலாம்.

1.இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசைகளில் சீர்மைக்குத் தேவை இருந்தாலும், முனைவர் வா.செ.குழந்தைசாமி முன்மொழியும் புதிய எழுத்து வடிவங்கள் ஏற்கத்தக்கவை அல்ல.

2.தமிழ் எழுத்துகள் மிகவும் செம்மையான கட்டமைப்பைக் கொண்டிருப்பதால் அதில் எந்த வகையான மாற்றமோ அல்லது சீர்மையோ செய்ய தேவையில்லை.

3.அப்படியே எழுத்தில் சீர்மை செய்யவேண்டுமானால், பன்னாட்டு அளவில் விரிவான ஆய்வுகள், மதிப்பீடுகள், விவாதங்கள், கருத்தாடல்கள் நடத்தப்பெறல் வேண்டும்.

4.இன்றைய நுட்பவியல் உலகத்தில் தமிழ் எழுத்துச் சிக்கல் முற்றிலும் களையப்பட்டுவிட்டது அல்லது சிக்கல் இருந்தாலும்கூட அது மிகச் சொற்பமானதே. ஆகவே, எழுத்துச் சீர்மையைச் செய்வதன் மூலம் புதிய வகையில் நெருக்கடி நிறைந்த சிக்கல்கள் ஏற்படும்.

இப்படியான பல்வேறு நிலைப்பாடுகள் நிலவுகின்ற போதிலும், இ, ஈ, உ, ஊகார எழுத்துச் சீர்மையை ஊடகத்தின் வாயிலாக தொடர்ந்து வலியுறுத்தியும் அதற்கு வலிமை கூட்டியும் வருகின்றனர்.

இந்தச் சூழலில், உலகம் பரவிய தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், பற்றாளர்கள், பயனாளர்கள், கணிஞர்கள் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளோடு எழுத்துச் சீர்மையை எதிர்கொண்டிருக்கின்றனர். காட்டாக;

1.தமிழ் சான்ற அறிஞர் பெருமக்கள் ஒன்றுகூடி எழுத்துச் சீர்மை மீதான முழுமையான ஆய்வுகள், மதிபீடுகள், கருத்தாடல்கள் நடத்த வேண்டும்.

2.பன்னாட்டு அளவில் எழுத்துச் சீர்மை குறித்த ஆய்வுகள் நடத்தப்பெற வேண்டும்.

3.தமிழ் எழுத்துச் சீர்மை தேவையா? இல்லையா? என்பதை முடிவு செய்வதற்கு உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கும் முழு உரிமை வழங்கப்படல் வேண்டும்.

4.இன்று தமிழ்மொழியானது தமிழ்நாட்டுக்கு மட்டுமே முழுச் சொந்தமாகவோ சொத்தாகவோ கருத இடமில்லை. ஏனெனில், மலேசியா, சிங்கை, இலங்கை முதலிய நாடுகளிலும் தமிழ்மொழி அரசு மொழியாக; ஆட்சி மொழியாக இருக்கின்றது.

ஆகவே, தமிழ்மொழி குறித்த எந்தவொரு முடிவையும் செய்வதற்கு முன்பாக உலகளாவிய நிலையில் வெளிப்படையான கருத்தாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

5.இவையெல்லாம் சாத்தியப்படுவதற்கு எவரேனும் எங்கேனும் எப்போதேனும் ஒரு சரியான களத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் தீர்வைச் செய்யவேண்டும் என்று சிந்தித்ததன் விளைவாக உருவாகியதுதான் இந்தத் தளம்; தமிழ் எழுத்துச் சீர்மை - மாற்றமும் மறுபக்கமும் என்னும் இந்த வலைப்பதிவுத் தளம்.

எழுத்துச் சீர்மை தொடர்பிலான பலதரப்பட்ட கருத்தாடலுக்கும் பன்னாட்டவருடைய கலந்தாய்வுக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் இந்த வலைப்பதிவுத் தளம் நல்லதொரு களமாக அமையக்கூடும்.

தவிர. இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மின்னஞ்சல்கள், மடற்குழுக்கள் ஆகியவற்றில் எழுத்துச் சீர்மை தொடர்பாக உலாவருகின்ற செய்திகளை ஒரே இடத்தில் - ஒரே தளத்தில் காண்பதற்கு இந்தக் களம் மிகவும் பயன்படக்கூடும்.

ஆகவே, எழுத்துச் சீர்மை தொடர்பில் உலகமெங்கிலும் இருந்து எவரும் தங்களுடைய கருத்துகளை, எண்ணங்களை, ஏடல்களை, சிந்தனைகளை இங்குப் பதிவு செய்யலாம்.

வலைப்பதிவு நடத்தும் அன்பர்கள் தத்தம் வலைப்பதிவுகளில் எழுதும் செய்திகளை இந்தத் ‘தமிழ் எழுத்துச் சீர்மை’ வலைப்பதிவுக்கும் விடுத்து வைக்கலாம். அல்லது விவரம் தெரிவித்தாலே போதுமானது. அந்தச் செய்தியை இந்தத் தளத்தில் மறுபதிவிட்டு அனைவருடைய பார்வைக்கும் வழங்கலாம். அல்லது மின்னஞ்சல் வழியாக விடுத்து வைக்கலாம்.

தமிழ் எழுத்துச் சீர்மை வலைப்பதிவு முகவரி http://tamilseermai.blogspot.com. மின்னஞ்சல் முகவரி:- tamilseermai@gmail.com

6 கருத்துகள்:

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

திரு நற்குணன்,

நல்ல முயற்சி. வரவேற்கிறேன். உலகத் தமிழர்கள் யாவரும் தங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்ய வேண்டும். அதே போல் சீர்திருத்தம் பற்றிய எல்லா கட்டுரைகளுக்கான தொடுப்புகளையும் இவ்விடத்தில் இணையுங்கள். ஒரே இடத்திலிருந்து சீர்திருத்தத்தை வலியுறுத்துவோர் கருத்துகளையும், எதிர்ப்போர் கருத்துகளையும் நாம் படிக்க வகை செய்து தரவேண்டும்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்

Sathis Kumar சொன்னது…

நல்ல முயற்சி, வாழ்த்துகள்.
வலைப்பக்கம் எளிமையாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி.

gTheeban சொன்னது…

வணக்கம்.
தமிழுக்காக தாங்கள் வழங்கும் சேவைகள், இன்னும் வளர, தமிழ் மருதத்தின் வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

நன்முயற்சி; வெல்க.

- அ. நம்பி

தமிழ்மாறன் சொன்னது…

தமிழ் மீட்சிக்கும் மொழி நலத்திற்கும் தங்களின் சீரிய முயற்சியும் பங்களிப்பும் போற்றுதற்குரியது.மொழி காப்புக்கு தங்களைப் போன்ற உணர்வாளர்கள் அதிக அளவில் திரள வேண்டுமென்பதே என் நம்பிக்கை. தொடர்ந்து போராடுவோம்.வாழ்க

சவுக்கடி சொன்னது…

இன இரண்டகர்களும் தன்னல விளம்பர விரும்பிகளும் விருப்பம் போல் சிதைக்க, தமிழ் அவர்களுக்கே உரிமையான அவர்கள் வீட்டுத் தோட்டச் செடியன்று!

ஆடசி அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது, தமிழும் தமிழ்க் காப்பு முயற்சிகளும்!

மிகக் கடுமையான எச்சரிக்கையும் அறிவார்ந்த விளக்கங்களும் தருதற்கான இம் முயற்சியை வரவேற்கிறோம்.

ஒருமுகமாய் எதிர்ப்பை உணர்த்துவோம்.