*(மலேசிய நண்பன் 22-08-2010 ஞாயிற்றுக்கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம் இது. மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்கள் இவ்வங்கத்தில் பதிலளிக்கிறார். எழுத்து மாற்றம் தொடர்பான அவருடைய பதிலை இங்குப் பதிவிடுகிறேன்.) -தமிழ் ஊழியன்
மணிவண்ணன், லூயி தீமோர், கெமாயாங்.
கேள்வி: தமிழ்மொழிக்கு எழுத்துச் சீர்த்திருத்தம் தேவை என்று சிலர் கட்சி கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். உண்மையிலேயே நமக்கு இப்போது எழுத்துச் சீர்த்திருத்தம் அவசியம் தானா?
பதில்: இளமை காலாவதியாகிறது. பணி ஓய்வு பெறும் காலம் வருகிறது. அந்த மாதிரியான சமயங்களில் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சியைப் பார்த்து வாழ்க்கையை ரசிக்க வேண்டும். அதை விட்டு விட்டு இருக்கிற தமிழைத் திருத்துகிறேன் என்று கிளம்பினால் மன உளைச்சல் தான் மிஞ்சும்.
இருக்கிற மனைவி அழகாகத்தானே இருக்கிறாள். இன்னும் அழகாய் ஆக்கிக் காட்டுகிறேன் என்று கிறுக்குப் பிடித்து அலையக் கூடாது. அழகாக இருந்தவளை அசிங்கமாக்கிய பாவத்தைச் சுமக்கக் கூடாது.
கணினியின் நிரல் ஆக்கத்திற்கு CPU எனும் மத்தியச் செயலகத்தின் வேகம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு Parsing எனும் கணினிக்கு உள்ளே இருக்கும் பகுத்தறித் தன்மை கூடுதலாக இருக்க வேண்டும். இது கணினி அறிஞர்களுக்குத் தெரிந்த விஷயம். இந்த Parsing கணினிப் பகுத்தறித் தன்மையைக் கூடுதலாக்க வேண்டும் என்றால் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் தேவை என்கிறார்கள் ஒரு தரப்பினர். என்னய்யா இது. அநியாயமாக இருக்கிறது. இப்போது வரும் Dual Core கணினிகள் இந்த Parsing தன்மைகளை எல்லாம் தாண்டி எங்கேயோ போய் விட்டன.
இவர்கள் என்னடா என்றால் இன்னும் பழைய குண்டு சட்டிக்குள் கும்பிப் போன குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். (குதிர்+ஐ). எங்கேயாவது காமா சோமா இருப்பான். அங்கே போய் காது வலிக்கிற மாதிரி பூ சுற்றுங்கள். இருக்கின்ற தாய்மொழியைக் கட்டாயம் ஆக்க துப்பு இல்லை. சீர்திருத்தம் செய்து கிழிக்கப் போகிறார்களாம்.
இப்போது இருக்கும் தமிழ் எழுத்துருகளை மாற்றினால் அச்சுத்துறையில் பெரிய பெரிய மாறுதல்கள் செய்ய வேண்டி வரும். உலகத்தில் உள்ள எல்லா தமிழ்ப் புத்தகங்களையும் மாற்றியாக வேண்டும். உலகத்தில் இருக்கிற எல்லா தமிழ் நிரலிகளையும் மாற்றியாக வேண்டும்.
உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களின் கணினிகளையும், ஏதாவது ஒரு வகையில் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். இப்போது தமிழில் இலவசமாக நிரலிகள் கொடுப்பவர்கள் கூட காசு கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அது மட்டுமா. சின்னச் சின்னப் பதிப்பகங்கள் எல்லாம் அடிபட்டு போகும். தமிழில் Unicode எனும் ஒருங்குறி இருக்கிறதே. அப்புறம் ஏன் அய்யா தமிழ்ச் சீர்த்திருத்தம்.
பேரும் புகழும் கிடைக்க ஆசைப் படலாம். ஆனால், உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த வேதனையில் அந்த ஆசை வரக்கூடாது. திசை மாறி வீசும் காற்றில் குளிர்காய்ந்து, ஆனந்த பைரவிக்கு காம்போதியில் சுதி தேடுவதில் அர்த்தமே இல்லை. தமிழ் மொழி சீர்திருத்தம் செய்யப்பட்ட செம்மொழி. அதைச் செத்துப் போன மொழியாக ஆக்கவேண்டாம். அந்தப் பாவத்தை ஏழேழு ஜென்மத்திற்கும் சுமக்க வேண்டாம்.
ம்அல்எ‘‘ச்இய்அ ந் அண்ப்அன் - இது என்ன எழுத்து என்று புரிகிறதா? எழுத்துச் சீர்த்திருத்தம் வந்தால் "மலேசிய நண்பன்" என்பதை இப்படியும் எழுதச் சொல்லுவார்கள். ஆக, இப்பொழுதே எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
எழுத்தாக்கம்: மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (மலேசியா)