எழுத்துச் சீர்திருத்தம் கூடவே கூடாது:- நக்கீரன் செய்தி

நக்கீரன் இதழில் வெளிவந்த செய்தி இது. ஐயா திருவள்ளுவன் இலக்குவனார் நக்கீரனுக்கு வழங்கிய நேர்க்காணல் இங்குச் செய்தியாக இடம்பெற்றுள்ளது.

மக்களுக்குத் தெரியாமல் எழுத்தை மாற்றுவது முறையா?


பெருமதிப்பிற்குரிய தமிழ் ஊழியன் அவர்களுக்கும் 'எழுத்துச் சீர்மை'யில் பங்காற்றும் என் பெருமதிப்பிற்குரிய பிற தமிழறிஞர்களுக்கும் பணிவன்பான வணக்கங்கள்!

அண்மையில்தான் நான் இணைய உலகத்துள் அடியெடுத்து வைத்தேன். வந்த புதிதிலேயே உயர்திரு. இராம.கி அவர்களின் வலைப்பூவான 'வள'வை எதேச்சையாகத்திருக்காண (தரிசிக்க) நேர்ந்ததென் பேறு! அங்கேதான் 'தமிழ் எழுத்துச் சீர்மை'யை எதிர்க்கும் சின்னத்தைக் கண்டேன். அஃது என்ன, ஏது என விவரம் அறிய நான் மேற்கொண்ட தேடல்கள் என்னை இத்தளத்துக்குக் கொண்டு வந்துசேர்த்தன. இங்கு வந்த பிறகுதான் தமிழில் இப்பேர்ப்பட்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதே எனக்குத் தெரிய வந்தது.


தீவிர தமிழ்ப் பற்றும், நாட்டு நடப்புகளை ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து கண்காணிக்கும் வழக்கமும் கொண்டிருந்தும் எனக்கே இங்கு வந்த பிறகுதான் இது தெரிகிறது எனில் பொதுமக்களுக்கு இது பற்றி என்ன தெரிந்திருக்கும்? சொல்லப் போனால், இப்படியொரு கேள்விக்கே இடமில்லை; பொதுமக்களுக்கு இப்படி ஒரு விவகாரம் நடப்பதே தெரியாது என்பதுதான் உண்மை.

இஃது அநியாயம் இல்லையா? உலகெங்கும் பத்துக் கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் ஒரு மொழியில், அந்த மக்களுக்கு எதையுமே தெரிவிக்காமல், அந்த மொழியின் அறிஞர்கள் மட்டும் -அதாவது அந்த மக்களின் எண்ணிக்கையில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லாத சிலர் மட்டும்- ஒன்று சேர்ந்து அந்த மொழியின் அடிப்படைக் கட்டமைப்பையே மாற்றியமைத்து விடப் பார்ப்பது நியாயமா? அன்னைத் தமிழ் என்ன தமிழறிஞர்களின் தலைமுறைச் சொத்தா?

பாலம் கட்டுவதற்கும், பாதை அமைப்பதற்கும், மலையை உடைப்பதற்கும், மரத்தைப் பிடுங்குவதற்குமெல்லாம் கூட மக்களிடம் கருத்துக் கேட்டு அரசாங்கங்கள் ஆட்சி புரியும் இக்காலத்தில், மக்களுடைய பண்பாட்டு உயிரான, வரலாற்று அடையாளமான, இனத்தின் உயிர்நாடியான தாய்மொழியில் கைவைப்பதற்கு முன்பு அம்மக்களிடம் கருத்து கேட்க வேண்டியது தேவையில்லையா?

ஆனால் எழுத்துச் சீர்திருத்தவாதிகள் இதுவரை மக்களிடம் இதைக் கொண்டு போகாததும் நல்லதாய்த்தான் போயிற்று! திரு. தமிழ் ஊழியன் அவர்களே! இந்தச் சீர்திருத்தத்தை எதிர்க்கும் பிற தமிழறிஞர்களே! நீங்கள் முந்திக் கொள்ள வேண்டும்! உடனே ஓர் ஏட்டினர் சந்திப்புக்கு (press meet) ஏற்பாடு செய்து மக்களுக்கு இது பற்றி நீங்கள் தெரிவிக்க வேண்டும்! தமிழ் இனத்தை -ஈழத்தில்- அழித்தது போதாதென்று அடுத்து தமிழ் மொழியையும் அழிக்க எடுக்கப்படும் இந்த முயற்சியை மக்களுக்கு நீங்கள் தெரியப்படுத்த வேண்டும்! அதுவும் 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' தொடங்குவதற்குள் இதை நீங்கள் செய்ய வேண்டும்!

ஏற்கனவே மக்கள் பயன்பாட்டிலிருந்து எழுத்துத் தமிழ் அழிந்து விட்டது. படைப்பாளிகளையும், ஊடகத்தாரையும் தவிர பொதுமக்கள் யாரும் இன்று தமிழை எழுதப் பயன்படுத்துவதில்லை. பேச்சுத் தமிழ் பற்றிச் சொல்லவே வேண்டா. ஒவ்வொரு தமிழ்ச் சொல்லுக்கு முன்னும் பின்னும் ஓர் ஆங்கிலச் சொல்லைப் போட்டுத்தான் இன்று மக்கள் 'தமிழ்(?)' பேசுகிறார்கள். பேச்சுத் தமிழ் ஏறத்தாழ தொண்ணூறு விழுக்காடு சிதைந்து விட்டது. இந்நிலையில் மக்களுக்குத் தமிழில் இருக்கும் ஒரே பயன்பாடு 'ஊடக நுகர்வு!' இந்த எழுத்துச் சீர்திருத்தம் வந்தால் அந்த ஒரே பயன்பாடும் தமிழுக்கு அற்றுப் போகும் என்பதை மக்களுக்கு நீங்கள் புரிய வைக்க வேண்டும்!

இதனால் அச்சு ஊடகங்களுக்கு விழப் போகும் பேரிடியைப் பற்றி அவர்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களையும் உங்களுடன் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

இவ்வாறு, இந்தச் சிக்கலை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் சென்று, பொதுமக்களையும் ஊடகத்தாரையும் உங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு போராடினால்தான் அதிகார வர்க்கத்தினரின் இந்தத் தமிழ்ச் சீர்(அழிப்பை)திருத்தத்தைத் தடுக்க முடியும் என்பது என் பணிவான கருத்து. இவ்வளவு அறிவுப்பூர்வமாக வாதங்களை நீங்கள் எடுத்து வைத்தும் ஏற்காத அவர்கள், மக்கள் சக்தியும் ஊடகங்களின் செல்வாக்கும் உங்கள் பின் சேர்ந்தால் எப்படி நடுநடுங்கி இந்த முயற்சியிலிருந்து பின்வாங்குவார்கள் என நான் உங்களுக்குக் கூற வேண்டியதில்லை.

எனவே அருள்கூர்ந்து பொதுமக்கள் ஊடகத்தார் என்னும் இரு மாபெரும் ஆற்றல்களையும் உங்கள் பின்னணியில் திரட்டிக் கொண்டு போராட, எங்களை(பொதுமக்களை)யும் மதித்து உங்களுடைய இந்தப் புனிதப் போராட்டத்தில் சேர்த்துக் கொள்ள நீங்கள் முன்வர வேண்டுமென வேண்டிக் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்!

நன்றி! வணக்கம்!!

எழுத்தாக்கம்:-
-இ.பு.ஞானப்பிரகாசன்,
சூன் கஅ, உ0க0, பகல் க:00.