தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1/2)

தற்போது நடப்பில் இருக்கும் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைப்பதற்குச் சிலர் புறக்கதவு வழியாகத் தீவிரமாக முயன்று வருவதாகச் செய்திகள் அடிபடுகின்றன.

“இவ்வாண்டு சூன் 23-27 வரை தமிழகம், கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் இது குறித்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. கலைஞர் கருணாநிதி புதிய எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அறிவிப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் ஓசையின்றி நடக்கின்றன.” என்றெல்லாம் தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்துகொண்டிருக்கின்றன.

செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் சிலர் தங்களின் ஆளுமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி தமிழ் எழுத்துகளில் புதிய மாற்றங்களைச் செய்ய முனைவதாகவும் கேள்விப்படுகிறோம்.

இவர்களின் இந்தத் தனிப்பட்ட நிகழ்ப்பு (Personal Agenda) பல ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இருந்தாலும், நற்றமிழ் அறிஞர் பெருமக்கள் சிலருடைய கண்டிப்பான எதிர்ப்புகளினால் தமிழ் எழுத்தை மாற்றும் முயற்சி மண்ணைக் கௌவிக்கொண்டு இருக்கிறது.

ஆனால், இப்போது தமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் இவர்கள் இடபெற்றுவிட்ட நிலையில்..; தமிழக முதல்வருக்கு மிகவும் அணுக்கமானவர்கள் ஆகிவிட்ட நிலையில்.. வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல, மெல்ல மெல்ல தமிழ் எழுத்துச் சீர்த்திருத்த நிகழ்ப்பை மீண்டும் தூசுதட்டி கையில் எடுத்துள்ளனர்.

இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட நல்லறிஞர்கள் இந்தப் புல்லறிவுத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கத் துணிந்துவிட்டனர். இந்தச் சிக்கல் இன்னும் பெரிதாக வெடிக்காவிட்டாலும் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கிறது.

இது இம்மாட்டில் நிற்க, இந்தப் புதிய எழுத்து மாற்றம் என்பது என்ன? எதை மாற்றப் போகிறார்கள்? ஏன் மாற்றப் பார்க்கிறார்கள்? தமிழ் எழுத்து மாற்றம் தமிழைச் சீர்படுத்துமா? அல்லது சீரழிக்குமா? என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இன்று தமிழில் நாம் பயன்படுத்திவரும் 247 எழுத்துகளில், ஏற்கனவே பல காலக்கட்டங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வீரமாமுனிவர் காலத்திலும் பின்னர் அண்மை நூற்றாண்டில், பெரியார் காலத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது வரலாறு.


ஆனால் இப்போது, சிலர் புதிதாகச் செய்ய விரும்பும் மாற்றங்கள் தமிழ் எழுத்து அமைப்பில் பூதாகரமான சிதைவை ஏற்படுத்துகின்றன என்று நற்றமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர். அதனைப் படிப்படியாகக் காண்போமா?

இப்போது சீர்த்திருத்தம் என்ற பெயரில் மாற்றப்பட வேண்டிய எழுத்துகளாக இகர - ஈகார, உகர – ஊகார எழுத்துகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

காரணம், இவை நான்கும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறதாம். குறிப்பாக, உகர ஊகார எழுத்துகளை எழுதுவதற்கு நிறைய குறியீடுகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமாம்.

கவனிக்க:-

1)கு, டு, மு, ரு, ழு, ளு –இந்த 6 உகரங்களில் கீழ்நோக்கிச் சுழிக்க வேண்டும்.

2)ங, சு, பு, யு, வு –இந்த 5 எழுத்துகளில் கீழ்நோக்கி ஒரு கால் இட வேண்டும்.

3)ஞு, ணு, து, நு, லு, று, னு –இந்த 7 உகரங்களில் கீழே அரை சுற்றுவந்து மேல்நோக்கி கோடு ஏற்ற வேண்டும்.

இப்படியாக உகர எழுத்துகள் ஒரு சீர்மையில் இல்லாமல், பல்வகைப்பட்டு இருக்கின்றனவாம். ஊகாரமும் இப்படியேதானாம். ஆகவேதான், இவற்றைச் சீரமைத்து ஒரே அமைப்பில் எழுத வேண்டுமாம். அதற்காகக் கீழே உள்ளது போன்ற குறியீடுகளை பயன்படுத்த வேண்டுமாம்.

மேலே படத்தில் காட்டப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தினால், அதிகமான எழுத்து வடிவங்களை நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகுமாம். குழந்தைகள் வெகு எளிதாகத் தமிழ் எழுத்துகளைப் படித்துக்கொள்வார்களாம். தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படும் குறியீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாமாம்.

எப்படி என்கிறீர்களா? இதோ இப்படித்தானாம்.

(மாற்றி அமைக்கப்பட்ட இகர, ஈகார உகர, ஊகாரங்கள்)

இந்தப் புதிய மாற்றத்தினால், தமிழ்மொழிக்குப் பெரிதாக ஏதும் பயனுண்டா என்று கேட்டால் இல்லை! இல்லை! இல்லை! என்பதே பதில். ஆனால், இதனால் மேலே சொன்னது போன்ற சில நன்மைகள் உண்டு என்று சிலர் வாதிடுகின்றனர். அவர்களுடைய வாதங்கள் ஏற்புடையதாகத் இல்லை என்பது மட்டுமல்ல அறிவுடைமையானதும் அல்ல.

அவர்களின் வாதங்களுக்கு நாம் சில எதிர்வாதங்களை வைக்க முடியும்.

1)அதிகமான எழுத்து வடிவங்களை நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

=>இத்தனை காலமும் அடிப்படை எழுத்துகளாக தமிழில் 30 மட்டுமே இருந்தாலும், நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளையும், அவற்றுக்குரிய வடிவங்களையும் பல்லாயிரம் கோடி தமிழ் மக்கள் எந்தவொரு சிறு சிக்கலும் இன்றி படித்தும் எழுதியும் நினைவில் வைத்தும் வந்திருக்கிறோமே எப்படி?

=>பிற்பட்ட காலத்து மக்களே இவற்றைப் படிக்கவும் எழுதவும் நினைவில் வைத்துக்கொள்ளவும் முடிந்திருக்கிறது என்றால், அறிவும் ஆற்றலும் நுட்பமும் நிரம்ப இருக்கும் தற்கால மக்களாலும் எதிர்கால மக்களாலும் முடியாதா என்ன?


2)குழந்தைகள் வெகு எளிதாகத் தமிழ் எழுத்துகளைப் படித்துக்கொள்வார்கள்.

=>எளிதாகப் படித்துக்கொள்ளுதல் என்பது கற்பித்தலையும் கற்றலையும் சார்ந்ததே அன்றி எழுத்துகளைச் சார்ந்திருப்பது அல்ல. அப்படிப் பார்த்தால், தமிழைவிட அதிகமான எழுத்துகளை வைத்திருக்கும் சீனர்களும், கொரியர்களும், சப்பானியர்களும் கல்வியில் தமிழர்களை விடவும் பின்தங்கி இருக்க வேண்டும் அல்லவா?

=>சீனர்களும் கொரியர்களும் சப்பனியர்களும், தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழைச் சீர்படுத்த துடியாய் துடிப்பவர்களைவிட பல மடங்கு துடிதுடித்து அவர்கள் மொழியைத் திருத்தியிருக்க வேண்டுமல்லவா?

3)தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படும் குறியீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாம்.

=>இற்றைக் காலத் தொழிநுட்பத்தின் குழந்தையாகிய கணினியிலும் கைப்பேசியிலும் தமிழ்க் எழுத்துகளை எழுதுவதில் பாரிய சிக்கல் ஏதுமில்லை என்ற சூழலில் எழுத்துக் குறியீடுகளைக் குறைக்க வேண்டியதன் தேவையும் அவசியமும் என்ன?

=>குறியீடுகளைக் குறைப்பதனால் தமிழ்மொழியில் ஏற்படப் போகும் ஆக்கங்கள் – வளர்ச்சிகள் என்னென்ன?

=>குறியீடுகளைக் குறைக்கிறோம் என்று சொல்லி, தமிழ் எழுத்துகளின் தனித்த அடையாளத்தைச் சிதைப்பது முறைதானா?

=>எழுத்துகளை மாற்றி அமைத்துவிட்டால் அதனை மக்கள் உடனே புரிந்துகொண்டு சரளமாகப் படித்துவிடவோ அல்லது எழுதிவிடவோ முடியுமா?

=>எழுத்துகளை மாற்றி அமைத்துவிட்ட பிறகு, பழைய எழுத்து முறையில் எழுதப்பட்ட அறிவுக் களஞ்சியங்களைப் படிப்பது எப்படி?

=>கணினி, கைப்பேசி தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய எழுத்து வடிவங்களைச் செய்வது யார்? எப்படி? எப்போது?

இப்படியாக பல கேள்விகளுக்கு எழுத்துச் சீர்திருத்த மேதைகள் இன்னும் பதில்கள் சொல்லியப்பாடில்லை. ஆனால், பாத்திரமே இல்லாமல் பாலைக் காய்ச்சத் துடிக்கிறார்கள்.

இப்போதைக்கு இந்த மட்டில் நிறுத்தலாம் என எண்ணுகிறேன். தமிழ் எழுத்து மாற்றம் குறித்து என்னுடைய புரிதலை இங்கு நினைக்கிறேன். இதில், மேலும் தெளிவு வேண்டின் விளக்குவதற்கு அணியமாக(தயார்) உள்ளேன். இதில், மாற்றுக் கருத்துகள் உடையவர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இதுபற்றி எழுத இன்னும் செய்திகள் கிடக்கின்றன. அவை நமக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. ஆய்வு என்ற பெயரில் அப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.

அதைப்பற்றி, அடுத்த இடுகையில் இன்னும் தொடர்வேன்.

எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை

சென்னை, ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்திய எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? என்னும் தலைப்பிலமைந்த கருத்தரங்கம் மார்ச் 2, 2010, செவ்வாய்க்கிழமை மாலை 6-30 மணிக்கு நடந்தது.




[படம்: பேரா. மறைமலை, மணிவண்ணன், இராம.கி., இ. திருவள்ளுவன்]


கணிஞர் மணி மு.மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
அவர் தமது தலைமையுரையில் பேசியவற்றுள் சில:-

“சீர்திருத்தம் என்பதை நாம் வெறுப்பதாகவோ எதிர்ப்பதாகவோ கருதிவிடக்கூடாது. பழமையைப் போற்றுவதாகவும் கருதிவிடக்கூடாது. காலத்தினால் மாற்றம் நிகழ்வது இயல்பே. ஆனால் அம்மாற்றம் படிப்படியாக, சிறிதுசிறிதாகவே ஏற்படும். தமிழ்க்கல்வெட்டு எழுத்துகளின் மாற்றநிலையைப் பார்த்தால் இவ்வுண்மை புலனாகும்.

இப்போது சீர்திருத்தம் என்பவர்கள் உடனடியாக ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்த விழைகிறார்கள். இம்மாற்றத்தினால் என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது?

எழுத்துகள் குறைந்தால் கல்வி கற்கும் திறன் அதிகமாகும் என்னும் கூற்று உண்மையில்லை என்பதற்கு ஒரு சான்று கூறுகிறேன். தமிழ்நாட்டில் படிப்பறிவு 74%.தமிழைவிடக் குறியீடுகள் மிகுந்தும் தமிழில் இல்லாத கூட்டெழுத்துகள் நிறைந்தும் மொழி மலையாளம்.எனினும் தமிழ்நாட்டை விட அங்குப்படிப்பறிவு மிகுதி.(94%)

ஆயிரக்கணக்கான குறியீடுகளையும் எழுத்துவடிவங்களையும் கொண்டுள்ள சீனம்,சப்பான் மொழியினரின் கல்வியறிவு சாலச் சிறந்துவிளங்கவில்லையா?எனவே பொய்யான தகவல்களையும் பொருந்தாத கூற்றுகளையும் அடிப்படையாகக் கொண்டுவிளங்கும் எழுத்துச்சீர்திருத்தக் கருத்துப்பரப்புரை ஏற்கத்தக்கதன்று.

தமிழ் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரிய மொழி எனக் கருதிவிடக்கூடாது.இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா எனப் பல நாடுகளிலும் தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மாற்றம் - எழுத்தமைப்பில் - ஏற்படுமாயின் அயல்நாட்டுத்தமிழுக்கும் இந்தியத் தமிழுக்கும் வேறுபாடு தோன்றும். தமிழிலிருந்து மலையாளம் பிரிந்ததைப்போல பல மொழிகள் மீண்டும் உருவாகும் சூழல் ஏற்படும்.

ஏனைய நாட்டுத்தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் என்ன கருதுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதன்பின்னரே இத்தகைய செயல்களைப் பற்றிய சிந்தனைக்குச் செல்லவேண்டும்.”

பொறியாளர் இராமகி கூறியவற்றுள் சில:-


இ,ஈ,உ,ஊகாரக் குறியீடுகளை மாற்றினால் சென்னைப் பல்கலைப் பேரகராதியின் 59% சொற்கள் மாற்றம் பெற நேரலாம். கல்பாக்கம் சீனிவாசன் புள்ளிவிவரங்களின் படி இ-கர ஈகார, உகர ஊகாரக் குறியீடுகள் தமிழில் 24% சொற்களில் உள்ளன. நான்கில் ஒரு சொல் மாறுவது என்பது மிகப் பெரிய மாற்றம்.

இளைய தலைமுறையினர் இம்மாற்றங்களால் இன்று அச்சிலிருக்கும் பல நூல்களைப் புரிந்துகொள்ளாது இடர்ப்படுவர். பழைய பதிப்புகள் படிப்பாரற்றுப் போகும். இப்பதிப்புகளில் 90%க்கு மறுபதிப்பு வாராமல் போகலாம்.

மேலும் இன்றைய குறியீடுகளால் தமிழைப் படிப்பதற்குத் துன்பமாகவுள்ளது என யாரேனும் முறைப்படி ஆராய்ந்தார்களா? இவர்கள் பள்ளிகளுக்குப் போய்க் கணக்கெடுத்து வந்தார்களா? எத்தகைய ஆய்வும் நிகழ்த்தாமல் இவர்களாக ஒரு முடிவுக்கு எப்படிவரலாம்?

சீன மொழியிலோ சப்பானிய மொழியிலோ ஆயிரக் கணக்கான குறியீடுகள் உள்ளன என்றாலும் அவர்களே பண்பாட்டுத் தொடர்ச்சி கருதி அவற்றை மாற்றுவது பற்றித் தயங்குகிறார்களே!" என்றார்.

திரு.இலக்குவனார் திருவள்ளுவன் இலக்கண நூல்களை அடிப்படையாகக் கொண்டு உரையாற்றினார்.

“கி.மு.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியம் எழுத்துகளின் வடிவங்களை விளக்குகிறது. அதன்பின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூல் “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என்று குறிப்பிடுவதன் மூலம் தொல்காப்பியர் கால எழுத்து வடிவமுறை மாற்றம் பெறவில்லை என்னும் கருத்தை வலியுறுத்துகிறது. இதன் பின்னர் வந்த இலக்கண நூல்களும் இக் கருத்தையே வலியுறுத்துகின்றன. இதனால் தமிழில் எழுத்து வடிவங்கள் மாற்றம் பெறவில்லை என்பது புலனாகிறது.

கல்வெட்டு எழுத்து ஒரு சுருக்கெழுத்துப் போன்று தொழில்நுணுக்கமொழியே. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ் எழுத்துகள் மாற்றம் பெற்றதாகக் கூறல் தவறு.”

மூன்று உரையாளர்களும் மிகவும் நடுநிலையாக, யாரையும் தனிப்பட்ட முறையில் குறித்துப் பேசாமல், தகுந்த சான்றாதாரங்களுடன் உரை நிகழ்த்தியமை அவையோரின் கவனத்தை ஈர்த்தது.

துணைமுதல்வர் நூல்வெளியீட்டு விழாவையும் மீறி ஐம்பது பேர் கூட்டத்திற்கு வந்திருந்தமை மகிழ்வளித்தது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பரவலாக இனி இது போன்ற கூட்டங்கள் நடக்கவிருப்பதன் முன்னோடியாக இக்கூட்டம் அமைந்தது எனலாம்.


எழுத்தாக்கம்:-
மணி மு.மணிவண்ணன்

எழுத்துச் சீர்மை: தமிழ்மணம் திரட்டியின் நிலைப்பாடு

தமிழ் எழுத்துச் சீர்மை விவகாரத்தில், தமிழ்மணம் திரட்டி தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்து உள்ளது. அது இங்கு மறுபதிவு செய்யப்படுகிறது. அனைவரும் படிக்க வேண்டிய செய்தியிது. குறிப்பாக, இதற்கான மறுமொழிகள் மிகவும் கூர்ந்து கவனிக்கத்தக்கன. கணினி நிரலாக்கப் பணிகளுக்கு எழுத்துச் சீர்மை மிகவும் தேவையா? என்ற கருத்தின் அடிப்படையில் மிக விரிவான கருத்தாடலை மறுமொழிப் பகுதியில் தவறாமல் படிக்கவும். -தமிழ் ஊழியன்


******************************************
******************************************

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - தமிழ்மணத்தின் நிலைப்பாடு


தமிழ்மணம் இணையத்தளத்தினை நடத்தி வரும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் குழுமம் (TMI Inc) தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழ் மொழியின் பயன்பாட்டிற்கும் தன்னாலான முயற்சிகளை செய்வதையே அடிப்படை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு தமிழ் வலைப்பதிவுகளின் வருகைக்குப் பிறகு அதிகரித்து இருக்கிறது என்பது கண்கூடு. இன்றைய இணைய தொழில்நுட்பத்தின் மூலம் ஆயிரக்கணக்கான வலைப்பதிவர்கள் தமிழில் எழுதி வருகின்றனர். முன்னெப்பொழுதையும் விட தற்பொழுது தமிழில் எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் பெருகி உள்ளனர்.

இணையம் என்றில்லாமல் நாளிதழ்களும், அச்சு இதழ்களும், புத்தகங்களும் இன்று அதிகளவில் விற்கப்படுகின்றன. பல துறை சார்ந்த நூல்கள் தமிழில் வெளிவருகின்றன. வணிக ரீதியில் இந்தப் புத்தகங்கள் விற்பதைக் கொண்டு வாசகர்கள் எண்ணிக்கையும் இன்று அதிகரித்து உள்ளதை உணர முடிகிறது. வெகுஜன ஊடகங்கள் தவிர பல சிற்றிதழ்களும், மாற்று இதழ்களும் முன் எப்பொழுதையும் விட அதிகளவில் அச்சிலும் இணையத்திலும் வெளிவருகின்றன. தமிழ் வழியில் பொறியியல் படிப்பினை இவ்வருடம் முதல் அறிமுகப்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலும் தமிழ்ச்சங்கங்கள் வாரயிறுதிகளில் தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகின்றன. இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் பயில்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட சில மாநிலங்களில், தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அவர்களது அமெரிக்கப் பள்ளிக்கூட மதிப்பெண்களோடு சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு இப்பள்ளிகள் அமெரிக்கக்கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தமிழின் பயன்பாடு பல வழிகளிலும் முன்னெப்பொழுதையும்விட அதிகமாக நடந்து வருகிறது. தற்போதைய தமிழ் எழுத்து வடிவில் இதனை நாம் சாதித்து இருக்கிறோம்.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழக அரசு தமிழ் மொழியில் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்யப்போவதாகவும், வருகின்ற செம்மொழி மாநாட்டில் அது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அதிகாரபூர்வமான செய்திக்குறிப்பு ஒன்று கடந்த சனவரி 7ஆம் தேதியன்று வெளியான மாலை மலரில் வெளியாகி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக இது குறித்த பரவலான விவாதம் இணையத்தளங்களிலும், தமிழ்க் குழுமங்களிலும் நடந்து வருகிறது.

எழுத்துச் சீர்திருத்தம் என்பது என்ன ?

தமிழ் மொழியில் உள்ள வரிவடிவங்களில் இகர, ஈகார, உகர, ஊகார வடிவங்களில் சீர்மையை கொண்டு வரப் போவதாக தமிழறிஞர்கள் சிலர் பேசி வருகின்றனர். இவர்கள் மிகவும் சிறுபான்மையினர்; ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள். வரும் சூன் மாதம் கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் வேலைத்திட்டங்களைத் தமிழ்ச்சமுதாயத்தின் மேல் திணிக்க முனைகின்றனர்.

இவர்கள் அறிவித்துள்ள சீர்மை தமிழ் எழுத்துகளில் 72 எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், நான்கு புதிய வரி வடிவங்கள் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. வா.செ.குழந்தைசாமி வெளியிட்டுள்ள சீர்மைக் கட்டுரைகளில் இருந்து இதனை அறிய முடிகிறது. இது தமிழ்மொழிக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாகும். பல தமிழ் அறிஞர்கள் இந்த முயற்சிக்கு எதிரான தங்கள் ஆணித்தரமான கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். இவர்களுடன் தமிழ்மணமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.

சுமார் 72 எழுத்துக்களுக்கு மாற்றம் என்பது சீர்மையோ, சீர்திருத்தமோ அல்ல. மிகப் பெரிய மாற்றம். குறுகிய கால இடைவெளியில் எக் காலத்திலும் தமிழ் மொழி இவ்வாறு மாற்றப்பட வில்லை. தந்தை பெரியார் ஒரு சில எழுத்துக்களை மட்டுமே அச்சுத் தொழிலுக்கு ஏற்றவாறு மாற்றினார். அதுவும் புதிய வரி வடிவங்கள் எதையும் பெரியார் புகுத்தவில்லை. வழக்கில் இருந்த வரி வடிங்களைக் கொண்டே சில எழுத்துக்களில் சீர்மையை பெரியார் கொண்டு வந்தார். ஆனால் இன்றைய இணையம், கணினி யுகத்தில் இத்தகைய எந்த மாற்றமும் தமிழுக்குத் தேவை இல்லை. இன்று இணையத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் சில தெற்காசிய மொழிகளில் ஒன்றாக தமிழும் உள்ளது. கணினி பயன்பாட்டிலும் பலப் பிரச்சனைகளை களைந்து தமிழ் பயன்பாடு ஒரு சுமூகமான நிலையை எட்டி உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இந்தச் சீர்மை தேவை தானா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.

சீர்மையால் விளையும் கேடுகள்

இந்த எழுத்துச் சீர்மை ஏற்படுத்தப் பட்டால் தற்பொழுது வெளியாகி உள்ள எண்ணற்ற புத்தகங்கள் பயனற்றதாகி விடும். புதிய புத்தகங்களை வெளியிட வேண்டும். பல இணையத்தளங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் மறுபடியும் மாற்றப்பட வேண்டும். தற்பொழுது வழக்கில் உள்ள தமிழ் எதிர்காலத்தில் கல்வெட்டு தமிழ் போன்றதாகி விடும். வெகு இயல்பாக உள்ள தமிழ் பயன்பாடு பெருங்குழப்பத்திற்கு உள்ளாகும். தமிழின் பயன்பாடு வளர்ச்சியில் இருந்து தேக்க நிலையை அடையும்.

இத்தகைய ஒரு சீர்மை அவசியம் தானா என்ற கேள்வியை நாம் அனைவரும் எழுப்ப வேண்டும்.

தமிழ் மொழிக்கு இந்த சீர்மையால் நேரும் கேட்டினைத் தடுத்து நிறுத்தத் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்யத் தமிழ்மணம் முடிவு செய்திருக்கிறது. இதில் பதிவர்களின் ஆதரவினையும் தமிழ்மணம் வேண்டுகிறது.

இது குறித்த விரிவான வாசிப்பிற்குச் சில கட்டுரைகளைத் தமிழ்மணம் பரிந்துரை செய்கிறது

1.சுப.நற்குணன் - தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா?

2.நாக.இளங்கோவன் - எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள்
3.முனைவர் மு.இளங்கோவன் - தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?
4.மணி மு. மணிவண்ணன் - எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை
5.முனைவர். பெரியண்ணன் சந்திரசேகரன் - Tamil Script Reform: Its Vacuity Next to The Chinese Script
6.பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் - எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு


புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

தமிழ்மணம் நிர்வாகக் குழு சார்பாக:

எழுத்துச்சீர்திருத்தத்தை எதிர்த்து
சொர்ணம் சங்கர்,
இரா. செல்வராஜ்,
இரமணீதரன்,
தங்கமணி,
சுந்தரவடிவேல்,
இளங்கோ,
தமிழ் சசி,
பாலாஜி பாரி

பி.குறிப்பு:- இதற்கு வந்த மறுமொழிகளைப் படிக்க இங்கு சொடுக்கவும்.