ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை உண்டு

எழுத்துச் சீர்மை பிரச்சனையில் ஒரு சில செய்திகளை முன்வைக்க விரும்புகிறேன். தமிழில் எழுத்துகள் (Graphemes) ஒலியனுக்கும் (Phonemes) அசைக்கும் (Syllables) உண்டு. எனவே ஒலியன் பற்றியும் அசை பற்றியும் தெரிந்துகொள்வது நல்லது.



தமிழில் கடல், தங்கம், பகல் ஆகிய மூன்று சொற்களில் முதல் சொல்லில் உள்ள க ஒலிப்பில்லா தடையொலி. இரண்டாவது சொல்லில் உள்ள க (மெல்லினத்திற்குப் பின்னர் வருகிறது) ஒலிப்புள்ள ஒலி. மூன்றாவது சொல்லில் உள்ள க இரண்டு உயிர்களுக்கு நடுவில் வருகிற உரசல்தன்மை கொண்ட ஒரு ஒலி. மூன்றின் வருகையும் வருகிற சூழல்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒன்று வருமிடத்தில் மற்றொன்று தமிழில் வராது.

எனவே அவற்றை ஒரே ஒலியனின் மாற்றொலி (allophones) என்று கூறுவார்கள். தமிழில் ஒலியனுக்குத்தான் வரிவடிவம் - எழுத்து - உண்டு. இது மிக அருமையான அறிவியல் முறையாகும். க என்ற எழுத்தைச் சொல்லில் அது வருகின்ற இடத்தை அடிப்படையாகக் கொண்டு, மேற்குறிப்பிட்ட மூன்று உச்சரிப்பில் சரியானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.

எனவே மூன்று ஒலிகளுக்கும் தனித்தனி வரிவடிவம் தேவையில்லை. மாறாக வடமொழிகளில் மூன்றுமே தனித்தனி ஒலியன்கள். எனவே அங்கே அவற்றிற்குத் தனித்தனி எழுத்துகள் உண்டு. அடுத்து அசை பற்றியது. மெய் ஒலிகள் தடையொலிகள் (sounds produced by obstruction of air) . எனவே அவற்றைத் தனித்து ஒலிக்க இயலாது.

உயிரொலிகள் தடையற்ற ஒலிகள். எனவே தனித்து அவற்றை ஒலிக்கமுடியும். நாம் பேசும்போது, உயிர் தனித்து வரலாம். மெய்யானது உயிரோடு இணைந்துதான் வரும். உயிர் தனித்து வந்தாலும், மெய்யோடு இணைந்து வந்தாலும் அவை தனித்தனி அசை எனப்படும். இந்த அடிப்படையில் ஒவ்வொரு உயிர்மெய்யும் ஒவ்வொரு அசையாகும்.

எனவே தமிழில் 30 ஒலியன்களுக்குத் தனித்தனி எழுத்துகள் (scripts for phonemes) . அதுபோன்று ஒவ்வொரு அசைக்கும் தனித்தனி வரிவடிவங்கள் (Syllabic scripts) . எனவே தமிழ் எழுத்துமுறை ஒலியன் மற்றும் அசை எழுத்து முறையாகும்.

அசை எழுத்தில் மெய்யும் உயிரும் இணைந்து வரும்போது, உயிர் ஒலியனுக்கு உரிய வரிவடிவம் (Graphems) அப்படியே வராமல், அதற்குரிய துணைவடிவம் (allographs) வரும். இந்தத் துணைவடிவங்களில்தான் சில பிரச்சனைகள். ஒரு உயிருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துணைவடிவங்கள் உள்ளன. இதனால் அச்சுத் தொழிலில் சில பிரச்சனைகள் இருந்தன.

தமிழர் அல்லாதவர்கள் கற்கும்போதும் சில பிரச்சனைகள் உண்டு. ஆனால் தாய்மொழியாகத் தமிழைக் கற்பவர்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆகாரம், ஐகாரம் ஆகியவற்றிற்கானத் துணைவடிவங்களும் அச்சுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டுதான் மாற்றப்பட்டது. தமிழர்களால் கற்றுக்கொள்ள முடியவில்லை என்பதற்காக மாற்றப்படவில்லை.

ஆனால் தற்போது அச்சிலும் கணினி வளர்ந்துவிட்டபிறகு, பிரச்சனையே இல்லை. எத்தனை வரிவடிவங்களையும், எவ்வளவு சிக்கலான வடிவங்களையும் கணினியில் கொண்டுவர முடியும். தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பவர்களும் சற்று கவனத்தோடு கற்றுக்கொண்டால் எளிது.

ஆங்கிலத்தில் ஒரே எழுத்துக்குப் பல்வேறு ஒலிகள் உள்ளன. நாம் அவற்றைக் கற்றுக்கொள்ளவில்லையா? city என்பதில் C ஆனது ஒருவகையாகவும், cut என்பதில் ஒரு வகையாகவும் உச்சரிக்கப்படவில்லையா? நமது சிரமங்களுக்காக ஆங்கிலத்தில் மாற்றுகிறார்களா? இல்லையே.

ஒவ்வொரு மொழிக்கும் சில தனித்தன்மைகள் உண்டு. எனவே தமிழில் உயிர் ஒலியன்களுக்குத் துணைவடிவங்களில் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட வரிவடிவம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


எழுத்தாக்கம்:-
ந. தெய்வ சுந்தரம்,
தமிழ் மொழித்துறைப் பேராசிரியர்,
மொழியியல் ஆய்வுப்பிரிவு இயக்குநர்,
சென்னைப் பல்கலைக்கழகம்.
மின்னஞ்சல்:-mailto:-mndsundaram@hotmail.com


எழுத்துச் சீர்த்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு


தமிழ் மொழியின் எழுத்துகளை சீர்திருத்த வேண்டும் என்று நான் மிகவும் மதிக்கும் பேராசிரியர் வா.செ.கு அவர்களும், நண்பர் கணேசன் அவர்களும் பல்லாண்டுகளாக பல இடங்களில் எழுதி வருகிறார்கள், பல ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இப் போக்கு எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது. இது உண்மையிலேயே மிகவும் கெடுதி தரும், அறவே வேண்டாத போக்கு என்பது என் கருத்து. தமிழர்கள் இன்று இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட முயற்சிகள் தமிழுக்கு அளப்பரிய கேடு செய்யும். இது பற்றி பேரா வா.செ.கு அவர்களிடமும், கணேசனிடமும் வேறு யாருடனும் நான் கருத்துரையாட அணியமாக இருக்கின்றேன். மொழி வேறு எழுத்துரு வேறு என்று பற்பல கருத்துகள் வைப்பவர்களின் கருத்தோட்டங்களை நான் நன்கு அறிவேன். இப்போதைக்கு அண்மையில் நண்பர் கணேசன் இட்ட கீழ்க்காணும் பதிவிற்கு என் மறுமொழியைக் கீழே ஓர் இடுகையாக பதிவு செய்கிறேன். பின்னர் தேவை கருதி இது பற்றி தொடர்ந்து சில கூறுதல் வேண்டும்.

http://nganesan.blogspot.com/2008/05/english-medium-effect-on-tamil.html

நண்பர் கணேசன்,
வணக்கம். நான் எத்தனையோ முறை கூறியிருக்கிறேன். தமிழ் உயிர்மெய் எழுத்துக்களில் உள்ள இகர, ஈகார, உகர ஊகாரக் குறிகளைப் பிரித்து எழுதத்தேவை இல்லை. அருள்கூர்ந்து இதனைச் செய்யாதிர்கள்!! இதனால் பல மில்லியன் கணக்கான பதிவுகளை மக்கள் படிக்க இயலாமல், கல்வெட்டு தேர்வாளரைக் கொண்டு படிப்பது போல படிக்க நேரும். தட்டச்சுப் பொறி காலத்திய சீர்திருத்ததை, இன்று வளர்ந்துள்ள கணிப்புரட்சி நாளில், சிலிக்கான், நானோநுட்பக் காலத்தில், முன்வைத்து வலியுறுத்துவது என்னை வியக்க வைக்கின்றது. தமிழை alphabet முறைக்கு மாற்றுவது இந்திய எழுத்துமுறையின், அதுவும் சிறப்பாக தமிழ் எழுத்து முறையின் அருமையைக் கெடுப்பது ஆகும். தமிழ் எழுத்து முறை Abugida வும் அல்ல, Abjad முறையும் அல்ல. தனித்தன்மை வாய்ந்த தமிழ் எழுத்து முறை. . உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றும் கொண்டிருப்பது.

உயிர்மெய் எழுத்தின் உயிரைப் பிரித்து எழுத வேண்டும் எனில் ஏன் கி =க்இ என்றும், கு = க்உ என்றும் எழுதி, பகா எண்ணாகிய 31 எழுத்துக்களோடு எல்லாவற்றையும் அழகுற எழுதலாமே? அகரம் ஏறிய மெய்யெழுத்தை எழுதி எதற்காக ஐயா புதிதாக உயிர்க்குறி இடுதல் வேண்டும்?! தமிழ் எழுத்து முறையை மாற்ற வேண்டும் என்றால் இலத்தீன் எழுத்து முறைக்கு மாறிவிடலாமே? அல்லது "கூடை" என்பதை க்ஊட்ஐ என்று எழுதலாமே? ஏன் தனியாக மேலும் பிற உயிர்க்குறிகள் தேவை? தமிழ் உயிர்-மெய் எழுத்து மட்டும் கொண்டு இயங்கும் alphabet நெடுங்கணக்கு கொண்ட மொழியில்லை. தமிழ் உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றும் கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த மொழி. நீங்கள் கூறுவது redundant system (தேவையில்லாத, வெற்றாக மேலும் குறிகளை சேர்ப்பது; இருக்கும் குறைகளைப் பெருக்குவது. ).

நான் மிகவும் மதிக்கும் வா.செ.கு அவர்களும் நீங்களும் ஏன்தான் இப்படி இந்த அழிவுதரும் போக்கை வலியுருத்துகிறீர்கள் என்று விளங்கவில்லை? அருள்கூர்ந்து இப் போக்கினை உடனே நிறுத்த வேண்டிக்கொள்கிறேன்.

எழுத்தாக்கம்:-
பேராசிரியர் செல்வா, கனடா

மூலம்: http://tamilveli.blogspot.com/2008/12/blog-post.html

தமிழ் எழுத்துச் சீர்மை இணைப்புப் பட்டை

பேரன்பினிய தமிழன்பர் பெருமக்களே,

தமிழ் எழுத்துச் சீர்மை வலைப்பதிவைத் தொடர்ந்து வாசித்து - நேசித்து வருகின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

தமிழ் எழுத்துச் சீர்மை வலைப்பதிவுக்கு இணைப்புக் கொடுக்க விரும்புகிறீர்களா?

அதற்குரிய இணைப்பு பின்வருமாறு:-




gif maker


இந்தச் சுட்டியை உங்கள் வலைப்பதிவு, இணையத் தளம் முதலியவற்றில் இணைத்துக் கொள்ளவும்.

எழுத்துச் சீர்மையால் மொழித்திறன் கூடும்?

எழுத்துச்சீர்மை பற்றிய பேரா. வா.செ.கு அவர்களின் உரையைக் கண்டேன்.

தமிழ் உயிர்மெய்யெழுத்துகளில் ஆ, ஐ, எ, ஏ, ஒ, ஓ, ஔ வரிசைகளை எழுத அந்தந்த மெய்யெழுத்துகளையும் அவற்றுக்கு முன்பும் பின்பும் சில குறியீடுகளையும் பயன்படுத்துகிறோம். இது போல், இ, ஈ, உ, ஊ வரிசைகளை எழுதுவதற்காகப் புதிய குறியீடுகளை அறிமுகப்படுத்துகிறார்.

இந்தச் சீர்திருத்தத்தை முன்வைப்பதற்கு முக்கிய காரணமாக தமிழகத்துக்கு வெளியே 15 இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றும் இச்சீர்திருத்தம் அவர்கள் இலகுவாகத் தமிழ் கற்க உதவும் என்றும் சொல்கிறார். இந்த அடிப்படையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இத்தொகையைக் காட்டிலும் பெரிய மக்கள் தொகையை அயலகத்தில் கொண்டுள்ள மொழிகள் எத்தனையோ உள்ளன. (எடுத்துக்காட்டுக்கு, சீனம்.) இந்த மொழிகள் எவையும் இதற்காக தங்கள் எழுத்து முறையை மாற்றுவதில்லை.

அயலக மக்கள் மொழியைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அவர்களுக்குத் தாயக மக்களுக்கு உள்ள கல்வி, சமூகச் சூழல் வாய்க்காததே முக்கிய காரணம். இப்படி ஒரு எழுத்துச் சீர்திருத்தம் செய்தால், அவர்கள் மொழித்திறன் கூடும் என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படை ஆய்வும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்க, இந்த மாற்றம் அவர்களுக்காக தாயகத் தமிழர்களையும் சேர்த்துக் குழப்பும்.

பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம் என்று இதனைக் குறிப்பிடுவதும் ஏற்புடையதாக இல்லை.

அச்சு வில்லைகள் தொடர்பான (நிறுவக் கூடிய) நடைமுறைப் பிரச்சினையின் காரணமாக பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் வந்ததாக கேள்வி.

அதுவும் அவர் புதிதாக குறியீடுகள் ஏதும் புகுத்தவில்லை. ஆகார, ஐகார வரிசைகளில் ஏற்கனவே மற்ற உயிர்மெய்யெழுத்துகள் பயன்படுத்திய குறியீடுகளையே றா, னா, ணா, லை, ளை, னை, ணை ஆகியவற்றுக்குப் பொருத்தினார். எழுதும் முறை புதிதானாலும் மக்கள் ஏற்கனவே அக்குறியீடுகளுக்குப் பழகி இருந்தது ஒரு முக்கிய விசயம். தற்போதைய பரிந்துரையில் முழுக்க புதுக் குறியீடுகள் வருவது குழப்பும்.


*இந்த மாற்றம் ஒரு சில ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதா? அல்லது, சீராக அக்காலத்தைய எல்லா கல்வெட்டுகள், செப்பேடுகளிலும் காணப்பட்டதா?

*தகவல் தொடர்பு பெரிதாக இல்லாத அக்காலத்தில் சீரான எழுத்து மாற்றங்கள் இருந்தது எப்படி?

*இந்த எழுத்து மாற்றங்கள் எவ்வாறு நேர்ந்திருக்க கூடும்? இப்போது போல் யாரும் முடிவெடுத்து மாற்றி இருப்பார்களா? அதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரம் யாரிடம் இருந்தது?

*இல்லை, எழுதப்பட்ட பொருள், அதற்குப் பயன்படுத்திய கருவிகளின் தன்மை காரணமாக, அதாவது நடைமுறை நுட்பக் காரணங்களால், இம்மாற்றங்கள் தானாக நிகழ்ந்தவையா (யாரும் முடிவெடுத்துச் செயற்படுத்தாமல்)?

தமிழ் மொழி குறித்த இவ்வாதாரங்கள் இல்லாவிட்டாலும் இதே போல் மாற்றங்கள் நிகழ்ந்த பிற மொழிகளின் தன்மைகளையாவது அறிய வேண்டும். இதன் மூலம், நாம் தற்காலத் தமிழில் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்கள் குறித்து ஒரு அறிவடிப்படை நிலைப்பாட்டை எடுக்க இயலும்.


எழுத்தாக்கம்:
ரவிசங்கர்
மின்னஞ்சல்: ravidreams@gmail.com
மூலம்: http://blog.ravidreams.net/

தகவல் - அரசியல் யுகத்தில் தமிழ் (3/3)

எழுத்துச் சீர்மையை முன்மொழிபவர்கள் அதற்குப் பின்னால் இருக்கும் மறுபக்கங்களை ஆராய்வதோ அல்லது பொதுவுக்குக் காட்டுவதோ இல்லை. மொழிநலன் பேணும் நடுநிலையாளர்கள் அவற்றை ஆராய்வதும் விவாதிப்பதும் தானே அறிவுடைமை. இந்தத் தொடர் எழுத்துச் சீர்மையின் மறுபக்கங்கள் சிலவற்றைப் பட்டியல் போட்டுக் காட்டுகின்றது. நாமும் ஆராய்வோம் வாரீர். - தமிழ் ஊழியன்
<<<<<<<<>>>>>>>>
  • 1.தட்டச்சு பிரபலமாக இருந்த காலத்தில் அரசு அலுவலகங்களில் ஓங்கி ஒலித்த விமர்சனம் இது. ஆங்கிலத்தோடு ஒப்பிடுகையில் தமிழில் தட்டச்சு செய்ய அதிக நேரமானது உண்மைதான். எனினும் நமது அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளைப் பார்த்தால், ‘விரைவு’ என்பது வேலை நேரத்தின்போது அலுவலர்களின் ஓய்வு நேரத்தை அதிகரிக்க உதவியிருக்கலாமே தவிர, சொல்லிக் கொள்ளும் படியாக வேறென்ன பயன் விளைந்திருக்க முடியும்?
  • 2.தமிழில் மொத்தம் 247 எழுத்துகளைக் கற்க வேண்டியுள்ளது என்ற மலைப்பில் நியாயமில்லை. ஏனெனில், தற்போதுள்ள எழுத்து வடிவங்களின்படியே நாம் கற்பது மொத்தம் 72 குறிகள் மட்டுமே: உயிர் 11 (‘ஊ’ என்ற எழுத்தில் ‘உ’ மேல் உள்ள ‘ள’ ‘ஒள’ இலும் வருகிறது), ஒற்றுநீங்கிய மெய் 17 (‘ள’ என்ற எழுத்து ‘ஒள’ இல் வந்துவிடுவதால்),
  • ஒற்று 1, ஆயுதம் - 1, உயிர்மெய்யில் உகர ஊகார வரிசை நீங்கலாக உயிர்க்குறிகள் _ 6, உகர ஊகார உயிரமெய் 36. ஆக, நாம் இதுவரை கற்றவை 247 ஒலிகள் (247 எழுத்துகள் அல்ல), 72 குறிகள், ஒலிகளிலும் கூட, புழக்கத்தில் இல்லாமல் அட்டவணை யோடு நின்றுள்ள உயிர்மெய் ஒலிகள் பல (எடுத்துக்காட்டாக, ஙகர மற்றும் ஞகர வரிசைகளில்).
  • 3.அறிவியல், பொறியியல், மருத்துவம் இன்ன பிற துறைகளிலெல்லாம் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொள்கிற ‘ஐ.டி. தலைமுறை’ ஏன் தமிழை மட்டும் போகிற போக்கில் கற்றுக்கொள்ள நினைக்கவேண்டும்-? இது ஒருபுறம் இருக்க, தமிழாக்கம் மற்றும் தமிழ்க் கலைச்சொல்லாக்கம் குறித்த ‘மரபு’ இலக்கண விதிகளை நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
  • 4.ஆங்கிலம் கற்றுக் கொள்வது அப்படியன்றும் எளிதானதல்ல. பேரெழுத்து, சிற்றெழுத்து என்ற இருவகை வடிவங்கள். இதிலும், அச்சு வடிவம், கையெழுத்து வடிவம் என்று மேலும் இருவேறு வடிவங்கள். ஆக 52 குறிகளை எழுதவும் 104 குறிகளை அடையாளம் காணவும் கற்றாக வேண்டும் (26 அல்ல). இது தவிர, ஆங்கிலத்தில் எழுதும் எழுத்துக்கும் ஒலிக்கும் பல சமயங்களில் தொடர்பே இருப்பதில்லை.
  • ஒரே எழுத்து சூழலுக்கேற்பப் பல ஒலிகளை எழுப்பும் போதாததற்கு, இம் மொழியில் விதிகளைவிட விதிவிலக்குகளே அதிகம். இவற்றையெல்லாம் கடும் பயிற்சியால்தான் கற்றுக்கொள்ள முடியும். அத்தோடு, பிற மொழிகளில் உள்ள ஒலிகள் பல (இன்னும்) ஆங்கிலத்தில் இல்லை. உலக மொழிகளின் அனைத்து ஒலிகளையும் உள்வாங்கிய மொழி எதுவும் இன்னும் உருவாகவில்லை.
  • 5.நுனிநாக்கு ஆங்கிலம் வேலை வாய்ப்புக்கு உத்திரவாதமல்ல, திறமைக்கும் ஆங்கில அறிவுக்கும் நேரடித் தொடர்பு ஏதுமில்லை. அதே போல, சரளமான ஆங்கிலப் பேச்சுக்கும் ஆங்கில மொழிப் புலமைக்கும் தொடர்பு இருக்க வேண்டிய அவசியமுமில்லை. மிஞ்சிப் போனால், ஆங்கிலப் பேச்சுத்திறனால் ‘கால்_சென்டர்’ நிறுவனங்களில், ‘போன் பாய்’ வேலை கிடைக்கக்கூடும் கவுரவமான சம்பளத்தில்.
  • 6.சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கற்றது தமிழ்’ ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் ‘ஐ.டி.’ துறையில் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்ற பொறாமை உணர்ச்சியைக் கொட்டித் தீர்த்ததைத் தவிர, இந்தப் படம் தமிழ் கற்றவர்களின் பிரச்சினையை ஊறுகாய் மாதிரிகூடத் தொட்டுக் கொள்ளவில்லை.
  • 7.உலகத் தமிழர்களில் ஏறத்தாழ 20 விழுக்காட்டினர் தமிழகத்திற்கு வெளியே உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா போன்ற ஓரிரு நாடுகள் தவிரப் பிறவற்றில் உள்ள தமிழ் வழி வந்தோரைப் பொறுத்தமட்டில், தமிழுக்கும் அவர்கள் வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனினும் அவர்கள் தமிழைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுவது, தங்கள் பூர்வீகப் பண்பாட்டோடு கொண்டுள்ள தொடர்பு அறுந்துவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தால்தான். தமிழ் மீது கொண்ட உண்மையான அக்கறையால் அவர்களில் சிலர் முன்வைக்கும் சீர்திருத்தங்கள் நிச்சயம் நம் கவனத்துக்குரியவை. ஈ.வெ.ரா.வுக்கே எழுத்துச் சீரமைப்பில் ஆர்வம் வரக்காரணம் சிங்கப்பூர்த் தமிழரின் சீரமைப்பு முயற்சியே.
  • 8.‘அறிவு _ இடைவெளி’ என்ற தொடரை நாம் எச்சரிக்கையுடன் அணுகவேண்டும். தகவல் தொழில் நுட்பத்தால் பல்வேறு தகவல்களைச் சடுதியில் திரட்டிக்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. இந்தத் ‘தகவல் பெருக்கம்’ வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற உதவுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் இதை ‘அறிவு’ என்று கொள்வது அபத்தமாக முடியும். ‘அறிவு _ இடைவெளி’ என்ற தொடர் பரவலாகப் பயன்பாட்டில் இருந்தாலும், ‘தகவல்_இடைவெளி’ என்பதே சரியானதாயிருக்கும்.
  • 9.இதுவரையிலான மொழிச் சீர்திருத்தப் பரிந்துரைகள் பெரும்பாலும் தட்டச்சு, ‘லெட்டர் பிரஸ்’ ஆகியவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டவை. ஆனால் அவை இப்போது காலாவதியாகிவிட்ட தொழில் நுட்பங்கள். உருவாகிவரும் ‘டிஜிடல்’ யுகத்தில் மொழியின் வரிவடிவத்திற்கான தேவை அருகிவர, ஒலி வடிவமே முன்னுரிமை பெற்று வருகிறது. நாவல்கள், கவிதைகள் போன்ற படைப்பிலக்கியங்கள் வாசிக்கப்பட்ட குறுந்தகடு வடிவமேற்கத் தொடங்கியுள்ளன.
  • பேசினாலே வரிவடிவத்திற்கு மாற்றிவிடும் மென்பொருள்கள் ஏற்கெனவே பல மொழிகளில் புழக்கத்தில் உள்ளன. தமிழிலும் அது விரைவில் பரவலாகக் கூடும். எனவே, தமிழ் எழுத்துகளை விரைவாக எழுத முடியவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இனி இடமிருக்காது_அதைக் கணினி பார்த்துக்கொள்ளும். எதிர்காலத்தில், வரிவடிவக் காட்சியை அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு மட்டும் எழுத்தறிவு இருந்தால் போதுமானதாக இருக்கும் அத்தகையதொரு சூழ்நிலையில் எழுத்துச் சீர்திருத்தத்துக்கே தேவையிருக்காது.
  • 10.தற்போதைய தகவல் தொழில்நுட்பட்திற்கு ஏற்ப மொழியைச் செப்பனிடுவது பற்றிப் பேச நேர்ந்துள்ளதுகூட நம் அரசுகளின் மெத்தனத்தின் விளைவுதான் எனக் கணினி வல்லுநர்கள் பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். பன்னாட்டு அமைப்பான ‘யுனிகோடு கன்ஸார்ட்டியம்’ என்ற அமைப்பில் தக்க அறிவியல்பூர்வமான காரணங்களை முன்வைத்து, எல்லாத் தமிழ் எழுத்து களையும் குறியடை செய்வதற்குத் தேவையான குறிவெளியைப் பெறத் தவறியதே, தற்போது தமிழ் எழுத்துரு பயன்பாடு தொடர்பான மென்பொருளாக் கத்தில் சிக்கல்களை எதிர் கொள்ளக் காரணம்.
  • 11.உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் உறுதியான இடம் பிடித்திருக்கும் ஜப்பான் நாட்டு மொழியில் தமிழைவிடப் பல மடங்கு அதிகமான எழுத்துகள் உள்ளன. எனினும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் மொழி ஒன்றும் பெரிய முட்டுக்கட்டையாக அமைந்து விடவில்லை. இன்று உலகின் ஏழு பணக்கார நாடுகளில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய மூன்று நாடுகள் தவிர ஏனைய நான்கிலும் (பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்) ஆங்கில ஆதிக்கமில்லை என்பதைக் கவனிக்க.
  • 12.வளர்ந்து வரும் அறிவியல் / சமூக அறிவியல் துறைகளில் நாளுக்கொரு கண்டுபிடிப்பு நிகழ்ந்து வருகிறது. கண்டுபிடிப்புகள் உடனுக்குடன் காப்புரிமை பெற்று, நுகர்வுக்கேற்ற வடிவம் தாங்கிச் சந்தைக்கும் வந்துவிடுகின்றன. இங்குத் தமிழருடைய பங்களிப்பு என்ன? ஆண்டுதோறும் வெளியிடப்படும் நொபல் பரிசு பெறுவோர் பட்டியலில் இடம் பிடிக்கும் தமிழர் எத்தனை பேர்? இதுவரை இயலவில்லை என்றால், அதற்கு ஏதுவான அரசியல்_பொருளாதாரச் சூழல் இங்கில்லை என்பதுதானே அர்த்தமாக முடியும்? இதற்குப் பொறுப்பேற்கப் போவது யார்?
  • 13.‘தமிழில் புராண இதிகாசங்களைத் தவிர வேறு என்ன இருக்கிறது?’ என்று நையாண்டி செய்வார் ஈ.வெ.ரா. தமிழில் போதிய (அறிவியல் / சமூக அறிவியல்) நூல்கள் இல்லாத காரணத்தால்தான் அனைத்து நிலையிலும் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த முடியாமல் நொண்டிக் கொண்டிருக்கிறோம். மேனிலைப் பள்ளிப் படிப்புவரை தமிழ்வழி பயின்றுவிட்டுக் கல்லூரிக்குச் செல்கையில் ஆங்கிலவழியிலேயே மிகப்பெரும்பாலும் கற்கவேண்டியுள்ளது என்பதால், பள்ளியிலேயே ஆங்கிலவழி பயின்றவர்களுக்கு அது பெரும் வசதியாகிவிடுகிறது. எனவே, பொருட் செலவையும் பொருட்படுத்தாது தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்வியில் சேர்த்து விடும் பெற்றோருடைய மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
  • 14.தமிழ்வழிக் கற்றோருக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம்கூட வேண்டாம். முன்னுரிமையாவது தரப்படுகிறதா என்றால், அதுவும் இல்லை, அவ்வளவு ஏன், ஆட்சியின் தலைமையிடமான தலைமைச் செயலகத்தில் குறைந்த பட்சம் தமிழ் பேசத் தெரியாதவர்களுக்கு இடமில்லை என்று சட்டமியற்ற முடியுமா? இப்படியொரு கேள்வியைக் கேட்ட உடனே தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு பீறிட்டுக் கிளம்பிவிடும். 1978லேயே அரசு ஊழியர்கள் தமிழில் ஒப்பமிட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்ட போதிலும், அதை மீறுபவர்களை எதுவும் செய்ய இயலா நிலையிலேயே இன்றுவரை அரசு உள்ளது.
  • 15.எனினும், தொழில்நுட்ப ஆர்வமும் சமூக அக்கறையும் ஒன்றுக்கொன்று முரணான எதிர்மறைகளாக இருக்க வேண்டியதில்லை. பெரும்பாலும் அவை ஒத்த விளைவுகளுக்கே இட்டுச் செல்கின்றன. (முற்றும்)

எழுத்தாக்கம்:-
முனைவர் ச. ராஜநாயகம், லயோலா கல்லூரி

தகவல் - அரசியல் யுகத்தில் தமிழ் (2/3)

தமிழில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமா? அப்படி அவசியமானால், எத்தகைய மாற்றங்கள்? என்ற கேள்விகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு உதவியாகச் சில தெளிவுகளை நாம் இங்கே தொகுத்துக் கொள்ளலாம்.


முதலாவது :
11)தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கோ ஆங்கில மொழிக்கோ நாம் எதிரிகள் அல்ல. எனினும் இவை இரண்டுமே அவற்றின் உண்மையான பயன்பாட்டுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்படுகின்றன என்பது நம் கருத்து. சில சமயங்களில், தேர்தல் காலங்களில் ஒரு கட்சிக்குச் சார்பாக ‘அலை’ வீசுவதைப் போலவே இந்தத் ‘தகவல் தொழில்நுட்ப _ ஆங்கில’ அலையும். அது அடங்கி ஓயுமா நீடித்துப் பாயுமா எனத் தெரியாமல், தற்சமயம் வீசும் அலையால் அடித்துச் செல்லப்பட்டு மொழியையும் அதற்கு அடகுவைப்பதைவிட, அந்த அலையின் நிலைதிறனை ஆய்வுக்குட் படுத்தி, அது செல்லும் திசையைத் தீர்க்கதரிசன மாய்க் கணித்து, தொலை நோக்குப் பார்வையுடன் மாற்றங்களைச் செய்வதையே நாம் வலியுறுத்துகிறோம். காற்றுள்ளபோதேதூற்றிக் கொள்ளலாம்தான். ஆனால், ஆடிப் பட்டம் தேடி விதைப்பது அதனினும் சாலச் சிறந்தது.


இரண்டாவது :
12)தகவல் தொழில்நுட்பத்திற்கு ஏற்பத் தமிழ் மொழியைச் செப்பனிட்டுவிட்டால் மட்டும் தற்போதுள்ள ஆங்கில ஆதிக்கமோ ஆங்கில மோகமோ குறையப் போவதில்லை. ஏனெனில், இது மொழியையும் கடந்த அனைத்துலகப் பொருளாதார அரசியல். உலகச் சந்தையைக் கட்டுப்படுத்தும் நாட்டின் மொழி உலக அரங்கில் கொடிகட்டிப் பறப்பதில் வியப்பில்லை. எனவே, இதைத் தமிழ் மொழிக்கான சவால் என்பதைவிட, தமிழினத்திற்கான சவாலாகவே காணவேண்டும். உலகச் சந்தையில் தமிழர்கள் சாதித்தால் உலக அரங்கில் தமிழ் மொழியும் சாதிக்கும்.


மூன்றாவது:
13)‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே....’ எனத் தொடங்கி மேடையிலே வீராவேசம் கொப்பளிக்க முழங்குவது தமிழரின் ஒரு முகம் என்றால், பிற இனத்தாரோடு தன்னை ஒப்பிட்டு, சுய கழிவிரக்கம் கொண்டு தாழ்வு மனப்பான்மையில் உழல்வது மற்றொரு முகமாக உள்ளது. இதன் விளைவுதான் ஆங்கிலத்திற்கு அபரிமிதமான முக்கியத்துவம் தந்து, எங்கே பந்தயத்தில் நாம் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் மொழியைக்கூட விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்கும் போக்கு.


14)இந்தக் கிடுக்கிப் பிடியிலிருந்து விடுபட வேண்டுமானால் நாம் கேட்க வேண்டிய தலையாய கேள்வி, “தமிழில் என்ன சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம்?’’ என்பதல்ல, “உலக அறிவுக் கருவூலத்தில் எவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளோம்?’’ என்பதே.

நான்காவது :
15)தமிழருக்குச் சொந்தமான நிலத்தில் தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் தமிழே ‘ஆட்சி’ மொழியாக நிலவவேண்டும் என்று கோரிக்கை வைத்தாலே ‘மொழி வெறியர்’ என்ற பட்டம் சூட்டப் பெறும் அவலம் வேறெந்தத் தேசிய இனத்திலும் காண முடியாதது. ஒரு மொழி எப்போது ‘ஆளும்’ என்றால், அம்மொழிவழிக் கற்றோருக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்போது எனலாம்.

16)இதற்கென உறுதியான அரசியல் தீர்மானம் எடுத்து, அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் திராணி ஒரு அரசுக்கு இல்லையென்றால், அந்த மொழி ‘ஆளுகிறது’ என்பதில் அர்த்தமில்லை. வாழாத, வாழவைக்காத மொழி ஆளுவது எப்படி? சோத்துக்கு உத்திரவாதம் தராத எந்த மொழியும் செத்துப் போகும்; செத்துத்தான் போக வேண்டும்.

ஐந்தாவது:
17)மாற்றத்தை விழையும் எந்தவொரு தேடலுக்கும் அடிநாதமாக விளங்குவது, ‘யாரை முன்வைத்து மாற்றம்?’ என்ற கேள்வி. ‘எத்தகைய மாற்றங்களால் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்குத் தமிழால் ஈடுகொடுக்க முடியும்?’ என்ற ஆர்வத்தைவிட, “தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத தமிழரின் எண்ணிக்கையைக் குறைக்க இதனால் முடியுமா? என்ற அக்கறையே நம்மை வழிநடத்தும் உந்துசக்தியாகத் திகழ வேண்டும். (3 ஆம் பாகத்தில் தொடரும்..)


எழுத்தாக்கம்:-
முனைவர் ச. ராஜநாயகம், லயோலா கல்லூரி
மூலம்: http://www.keetru.com/vizhi/jan08/rajanayagam.php

தகவல் - அரசியல் யுகத்தில் தமிழ் (1/3)

ஒருதலை
  • 1)இது தகவல் யுகம் என்கிறார்கள். இங்கு வேகம் முக்கியம் என்கிறார்கள். இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்கக்கூடிய விதத்தில் தமிழ் இல்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். வேகத் தடையாக அமைந்திருப்பவை தலையாய தாகத் தமிழ் எழுத்துகளின் ‘நெடுங்கணக்கு’ எண்ணிக்கை மற்றும் ஒழுங்கற்ற வரிவடிவம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். போதாதற்கு இறுகிப்போன இலக்கணம் வேறு என்று இடித்துரைக்கிறார்கள்.

2)இது தகவல் யுகம் என்கிறார்கள். இங்கு ஆங்கிலம் முக்கியம் என்கிறார்கள். அறிவும் அறிவியலும் ஆங்கிலத்திற்கே சொந்தம் என்பதால் அவற்றை முறையாக இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்குக்கூடத் தமிழுக்குத் திராணி இல்லை என எள்ளி நகையாடு கிறார்கள். கடினமான மொழியாக்கம் மற்றும் கலைச்சொற்கள் படாத பாடுபடுத்தி விடுகின்றன என்று அலுத்துக் கொள்ளுகிறார்கள். ஆங்கிலப் பெயர்கள், இன்றியமையாக் கலைச்சொற்கள் முதலியவற்றை ஆங்கில மூலத்தில் உள்ளபடியே உச்சரிக்கக்கூடிய அளவுக்குத் தமிழில் ஒலிகள் இல்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

  • 3)இது தகவல் யுகம் என்கிறார்கள். இங்குத் தமிழால் பிழைக்க முடியாது என்று சாபமிடுகிறார்கள். ‘கற்றது தமிழ்’ என்று வெள்ளித் திரையில் குத்திக் காட்டுகிறார்கள். உலகமய மாக்கல் சூழலில் உலகமொழியாகிய ஆங்கிலத்தால் மட்டுமே வாய்ப்புகளின் வாசல்கள் திறந்துவிடப்படுவதாக முரசு கொட்டுகிறார்கள். ஆங்கிலத்திற்கு இசைவாகத் தமிழை ‘பெண்டு’ நிமிர்த்தினால் மட்டுமே தமிழால் கொஞ்ச நஞ்சமாவது தாக்குப்பிடிக்க முடியும் என்று குறி சொல்லுகிறார்கள்.

மறுதலை
  • 4)இது தகவல் யுகம் என்பதை நாம் மறுத்தற்கில்லை. எனினும், தகவல் தொழில் நுட்பத்திற்கும் (த.தொ) அரசியல் பண்பாட்டுக்கும் இடையில் ஒருவித இயங்கியல் ரீதியான உறவு இருப்பதைக் கவனிக்க வேண்டும். எந்த அரசியல் பண்பாடு தகவல்தொழில்நுட்பத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துகிறதோ அந்த அரசியல்_பண்பாட்டு மொழிக்கு ஏவல் செய்வதாகத் தகவல்தொழில்நுட்பம் மாறிவிடுகிறது.

5)இதன் மற்றொரு முகமாக, எந்த அரசியல் பண்பாடு தகவல்தொழில்நுட்பத்தின் ஆளுகையின் கீழ்ப்பட்டு, தன்னைத் தகவமைத்துக் கொள்ளத் தடுமாறிக் கையறு நிலையில் நிற்கிறதோ, அந்த அரசியல் பண்பாட்டின் மொழியும் அதே கையறு நிலைக்குத் தன்னைத் தள்ளிக் கொள்கிறது. எனவே, ‘மொழிக்கு வளையும் தகவல் தொழில்நுட்பமா? தகவல் தொழில் நுட்பத்திற்கு வளையும் மொழியா?’ என்ற வினா அரசியலோடு பின்னிப் பிணைந்துள்ள உண்மையைக் கண்டுகொள்ள வேண்டும். எனில், எதற்காக மொழியில் மாற்றம் ?

  • 6)இது தகவல் யுகம் என்பதை நாம் மறுத்தற்கில்லை. எனினும், ஏறத்தாழ ஆறு கோடித் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் (தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் எல்லாரும் தமிழர்கள் அல்ல) இந்தத் தகவல் யுகம் ‘புரட்சி’ யால் பயனடைபவர்கள் எத்தனை விழுக்காடு என்ற கேள்வியையும் கேட்டுவைக்க வேண்டியுள்ளது. இம் ‘மாபெரும் புரட்சி’ யுகத்தில் தமிழ் பேச மட்டுமே முடிந்த (எழுத்தறிவற்ற) தமிழர்கள் குறைந்தது 40 விழுக்காடு (இரண்டு கோடி) இருப்பார்கள் (இந்த 2.4 கோடிப் பேரும் தமிழ் எழுத்து சரியில்லை என்பதால் படிக்க மறுத்துவிட்டவர்கள் அல்லர்).

7)பள்ளி செல்லும் வயதிலுள்ள தமிழ்க் குழந்தைகளில் கணிசமானோர் முதுகில் குடும்பச் சுமை கொலுவீற்றிருக்கிறது. பள்ளி செல்வோரிலும் முக்காலே மூணு வீசம் பேர் அரசு/அரசுதவி பெறும் பள்ளிகளில், தகவல் யுகத்திற்கு வெகு தொலைவிலான தமிழ்வழிக் கல்வியில் தொலைந்து போயுள்ளார்கள். இதில் தேறிவந்து, கல்லூரி வாயிலை எட்டும் வெகு சிலரில் எத்தனை பேருக்கு இந்திய / தமிழக அளவில் முன்னணியில் இருக்கும் கல்லூரிகளின் வாயில் திறந்துவிடப்படுகிறது?

  • 8)உள்ளே நுழையும் பேறுபெற்ற ஓரிருவரில் எத்தனை பேருக்குத் தகவல் தொழில் நுட்பப் தொடர்பான பாடங்களில் இடம் கிடைக்கிறது? ஆக, இந்தத் தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்குமான ‘அறிவு -_ இடைவெளி’ அதிகமாகிறதே தவிர குறைவதில்லை. எனவே, யாரை முன்வைத்து மொழியில் மாற்றம்?

9)இது தகவல் யுகம் என்பதை நாம் மறுத்தற்கில்லை. எனினும், முழுக்க முழுக்க ஆங்கிலவழிக் கல்வி பயின்ற அனைவருக்கும் இன்று தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புக் காத்திருக்கவில்லை என்பதும் உண்மை. இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் ‘ஐ.டி.’ பரபரப்பைத் தாண்டி, பத்து பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால், தமிழ்வழிக் கற்றதாலேயே அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு நழுவிச் சென்று விடவில்லை என்பது தெரியும். ஏன், இன்றைய சூழலில்கூடக் தமிழ்வழிப் பயின்றவர்களில் எத்தனையோ பேர் தகவல்தொழில்நுட்பத் துறைகளில் முத்திரை பதித்து வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவியலாது.

விடுதலை
  • 10)தகவல் யுகத்தின் ‘ஒருதலை’க்கும் ‘மறுதலை’க்கும் இடையில் இன்று ‘விடுதலை’’யை எதிர்நோக்கித் தடுமாறிக் கொண்டுள்ளது தமிழ். இத்தகைய சூழ்நிலையில், தமிழில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமா? அப்படி அவசியமானால், எத்தகைய மாற்றங்கள்? என்ற கேள்விகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு உதவியாகச் சில தெளிவுகளை நாம் இங்கே தொகுத்துக் கொள்ளலாம். (2ஆம் பாகத்தில் தொடரும்..)
  • பாகம் 1 / பாகம் 2 / பாகம் 3

தமிழ் படிக்காமைக்கு எழுத்துகளல்ல சிக்கல்


அமெரிக்கா வாழ் தமிழரின் குழந்தைகள் பலர் தமிழைப் படிக்காமல் இருப்பதற்கு எழுத்துகளிலுள்ள சிக்கலெல்ல. முழுமையாக பெற்றோர்களின் ஈடுபாடுதான். பெரும்பாலான பெற்றோர்கள் தாங்களே குழந்தைகளில் தமிழ் பேசுவதை விட்டுவிட்டார்கள்.

தாய்மொழி மேல் (இங்கு வேண்டுமென்றே நான் தமிழ் என்று குறிப்பிடவில்லை, தாய்மொழி என்று குறிப்பிடுகிறேன்) உண்மையிலேயே பற்றுள்ள பெற்றோர்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசுகிறார்கள். வார இறுதியில் நடக்கும் தமிழ்ப் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி எழுத்துகளையும், சொற்களையும், மொழியையும் மேலும் கற்கச்சொல்கின்றனர்.

இக்குழந்தைகள் எல்லாம் 50-60 மணி நேரப் பயிற்சியிலேயே புழக்கத்தில் அதிகம் பயன்படுத்தப் படும் அனைத்து எழுத்துகளையும் கற்று விடுகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக வாசிங்டன் பகுதியில் தமிழ்ப்பள்ளி நடத்தி வரும் என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் இதை உறுதியாகச் சொல்கிறேன்.

நகைச்சுவை என்னவென்றால் எழுத்து மாற்றத்தை ஆதரிக்கும் பலரின் பேரக் குழந்தைகள்தான் தமிழைப் படிப்பதில்லை, தமிழில் பேசுவதில்லை. ஆடத்தெரியாத நாட்டியக் காரர்கள் தெருக்கோணல் என்று சொன்ன பழமொழிதான் ஞாபகம் வருகிறது. கொடுமையென்னவென்றால் இவர்கள் நினைக்கிறபடி தமிழ் எழுத்துகள் இருக்க வேண்டுமென்பதால்தான் தமிழ் யுனிகோடும் நொண்டியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

தமிழ் யுனிகோட்டுக்கு இந்த எழுத்து மாற்றம் அவசியம் என்று பொய்யுரைகளைப் பரப்பித் திரிகின்றனர். தம்முடைய அரசியல்பலம் கொண்டு எப்படியாவது இதைச் சாதிக்க நினைக்கிறார்கள்.


  • எழுத்தாக்கம்:-

  • சொர்ணம் சங்கர்

  • மின்னஞ்சல்:-mailto:-m-sornam@gmail.com

கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்: இ. ஈ. உ. ஊ கற்பதில் எந்தச் சிக்கலும் இல்லை

CTA (http://www.catamilacademy.org/) has been functioning for over 12 years and teaching Tamil language for over 1500 students in 7 branches. The students are from 3 - 15 years of age. (pre-school to 7th grade) I was one of the founder of the school and involved in various level for over 12 years. I had been principal for a branch. My son has grauduated (7th grade) and he has passed advanced level in TVU certification. Many children has achieved TVU advanced level. My daughter is in 2nd grade. From first grade CTA uses TN books along with other books. The syllabus is very tough. In addition to academic, students learn many other things and train themselves for annual day celeberations, which could be Pattimanram, drama, song or dance.


I have taught little children to high shool kids. I have never heard a complaint about the letters especially i-kara, I-kara, u-kara and U-kara letters. All children within 4 years learn all the Tamil alphabets without much trouble. When they complete CTA all the children learn to speak, write and read Tamil. They may not be fluent in speaking. But that's the problem of parents. Most parents do not speak them in Tamil at home. And the children themselves speak in English to each other. That's another problem.


I am currently involved in Annual day program. Last year I was a coordinator for a "vazhakkadu manram". My script used Tirukkural, Moothurai, nalvazhi like poems. I have given the script in Tamil not in English. The children used my script to learn and the final outcome was sweet. It brought tears to my eyes. No children uses English script in CTA and we are proud of that.


See the attached script which I had written for them. These kids about 10 years old. See for yourself.

anbudan,

Thillai,

a proud Tamil teacher....

தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் தேவையா?

  • 1.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்கிற பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது(07.01.2010 மாலைமலர்). தமிழ் அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள் எல்லாம் விழிப்புற வேண்டிய காலகட்டம் இது.

2.மேடைகளிலும், அச்சிலும் பரவுவதற்கு முன்பே இணையத்தில் இது தொடர்பான விவாதங்கள் வேகமாக உலவி வருகின்றன. இணையம் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவுவதால் சென்னை,பெசண்டு நகரில் நடப்பதைக் கோடம்பாக்கத்தில் இருப்பவர்கள் அறிவதற்கு முன்பே உலகத் தமிழர்கள் தெரிந்துகொள்கின்றனர்.

  • 3.'வடவேங்கடம் தென்குமரி' எல்லை கடந்து தமிழும், தமிழர்களும் உலகெங்கும் பரவியிருப்பதால் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும் தமிழ் பற்றி இனி முடிவு செய்யமுடியாது. அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருப்பவர்களையும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

4.தமிழகத்தில் ஒரு கருத்துப்பொறி வெளிப்படுவதற்கு முன்பே இணையத்தில் தமிழர்கள் கருத்துச் சொல்லத் தொடங்கிவிடுகின்றனர். அவ்வகையில் தமிழக அரசு நடத்த உள்ள தமிழ்ச்செம்மொழி, தமிழ் இணைய மாநாடு பற்றி இணையத்தில் பலரும் பலவகையில் உரையாடி வருகின்றனர். அதில் ஒன்று தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய உரையாடலாகும்.

  • 5.தமிழ் எழுத்துகள் காலந்தோறும் மாறி வந்துள்ளன என்பது வரலாறு. பானை ஓடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், பனை ஓலைகள், அச்சு, கணிப்பொறி என்று பயன்பாட்டுப் பொருளுக்கு ஏற்பத் தமிழ் எழுத்துகள் வரிவடிவ வேறுபாட்டுடன் எழுதப்பட்டு வருகின்றன. தொல்காப்பியர், வீரமாமுனிவர், பெரியார் காலத்தில் தமிழ் எழுத்துகள் தேவை கருதி வடிவ மாற்றங்களைச் சந்தித்துள்ளன.

6.பழைமைக்குப் பழைமையாக விளங்கும் தமிழ் புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் மொழியாகவும் விளங்குகிறது. கல்வெட்டில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள் கணிப்பொறி வந்த பிறகு எந்த வகையான இடையூறும் இன்றி அதில் பயன்பாட்டுக்கு வந்தது. கணிப்பொறி அறிமுகமான சூழலில் தமிழார்வம் உடைய பொறியாளர்கள் சிலர் கணிப்பொறிக்கு ஏற்பத் தமிழ் எழுத்து வடிவங்களை மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். ஆனால் அறிஞர் வ.சுப.மாணிக்கம் போன்றவர்கள் இதனை எதிர்த்தனர்.

  • 7.தமிழ் எழுத்தைத் திருத்த வேண்டும் என்பவர்கள், தந்தை பெரியார் திருத்தி எழுதியதை முன்னுதாரணமாகக் காட்டுகின்றனர். பெரியார் ண,ல,ள,ற,ன என்ற ஐந்து எழுத்துகளும் ஆ,ஐ.ஒ,ஓ, என்னும் நான்கு எழுத்துகளுடன் இணைந்த(ணா,ணை,ணொ,ணோ,லை, ளை,றா, றொ,றோ,னா,னை,னொ,னோ என்று ) 13 எழுத்து வடிவங்களைச் சீர்மைப்படுத்தினார். இது சீர்மைப்படுத்தம் ஆகும். முன்பே பெரியார் எழுத்துத் திருத்தம் தேவை என்று வலியுறுத்தியதுடன் அதனை 1935 முதல் தம் விடுதலை ஏட்டில் நடைமுறைப்படுத்தினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு 1978 இல் தமிழ்நாட்டு அரசு தந்தைபெரியாரின் வடிவ மாற்றத்தினை ஏற்றுக்கொண்டு அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஓர் ஆணையிட்டது.

8.அதன் பிறகு எந்த மாற்றமும் வேண்டாம் என்பது தமிழறிஞர்களின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. ஆனால் சில அறிஞர்கள் இ,ஈ,உ,ஊ எழுத்துகளில் மாற்றம் வேண்டும் எனவும் அவ்வாறு மாற்றினால் 4 x 18 = 72 எழுத்துகளில் சீர்மை காணப்படும் எனவும் வாதிடுகின்றனர். ஆனால், இதைச் சீர்மை என ஏற்றுக்கொள்ள முடியாது. இது முற்றாக மாற்றம் ஆகும். இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.நாம் எழுதும் சொற்களில் இவ்வகை எழுத்துகள்தான் (அதாவது கி,கீ,மு,மூ) அதிகம் புழங்குகின்றன. இவ்வாறு வரும் 72 எழுத்துகளைப் புதிய குறியீடுகளால் எழுதத் தொடங்கினால் கற்றவர்களால் தமிழைப் படிப்பதே இயலாததாகிவிடும். புதியவர்கள் எப்படித் தமிழ் கற்பார்கள்?ஆகவே, சீர்மைக்கும் மாற்றத்திற்கும் அறிஞர்கள் வேறுபாடு உணர வேண்டும்.

  • 9.இவ்வாறு முப்பதாண்டுக் காலம் எழுத்துத்திருத்தம் வலியுறுத்திவரும் அறிஞர்கள் எதிர்வரும் செம்மொழி மாநாட்டில் தங்கள் விருப்பத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கின்றனர். இவர்களை உலகெங்கும் பரவி வாழும் தமிழறிஞர்களில் பெரும் பிரிவினர் இணையம் வழியாகக் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொருவரும் தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற போர்வையில் திருத்த முனைந்தால் தமிழ்மொழியின் அமைப்பு கட்டுக்குலையத் தொடங்கும் எனவும் இத்தகு செயலால் இதுவரை அச்சான நூல்களைப் படிப்பதில் மிகப்பெரிய சிக்கல் எழும் என்கிற கருத்து வலியுறுத்தப்படுகிறது. எளிமைப்படுத்த என்று முனைந்து தமிழ் வளர்ச்சிக்கு இடையூறு செய்துவிடக்கூடாது என்கிற நியாயமான அச்சத்தையும் பல அறிஞர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

10.சீன, சப்பான் மொழிகள் சிக்கலான குறியீடுகளையும் அதிக எண்ணிக்கையிலான எழுத்துக்களையும் கொண்டுள்ளன. அவர்கள் இதுபோன்ற திருத்த வேலைகளில் ஈடுபடாமல் உலகில் வெளிவரும் அறிவு நூல்களை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வகையிலும் மொழிபெயர்க்கப்பட்டவற்றை மக்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் வகையிலும் செயல்படுகின்றனர். தாய்மொழிவழிக் கல்விக்கு அங்கெல்லாம் முதன்மையிடம்தான். ஆனால் இங்கு அந்த நிலையில்லை.

  • 11.பெரும்பாலான தமிழறிஞர்கள் கணிப்பொறி நுட்பம் அறியாதவர்களாக இவ்வளவு காலமும் இருந்ததால் கணிப்பொறிக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்கிற முழக்கம் முன்பு காதுகொடுத்துக் கேட்கப்பட்டது. இம்முழக்கம் இப்பொழுது வலுவிழந்துவிட்டது. ஏனெனில் தமிழறிஞர்கள் இப்பொழுது மடிக்கணினியுடன் வலம்வரத் தொடங்கிவிட்டனர். மதுரையில் அமர்ந்தபடி ஒரு பேராசிரியர் அமெரிக்காவில் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளருக்குச் சிலப்பதிகாரம் நடத்தும் அளவிற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். எனவே தமிழ் எழுத்துத் திருத்தம் என்றவுடன் இது கணிப்பொறி தெரிந்தவர்கள் எடுக்க வேண்டிய முடிவு என்கிற காலம் மலையேறிவிட்டது. தமிழும்,மொழியியலும், கணினியும், இணையமும் அறிந்த தமிழ்ப்பேராசிரியர்களைக் கேட்டு எடுக்க வேண்டிய முடிவாகிவிட்டது.

12.கனடா நாட்டில் வாழும் அறிஞர் ஈழத்துப்பூராடனார்(அகவை 82) முதன்முதலாகக் கணிப்பொறி கொண்டு அச்சிட்டு நூல் வெளியிட்டவர் (1984).அவர் நூற்றுக்கணக்கான நூல்களைப் பழைய எழுத்து முறையிலேயே இன்றும் வெளியிட்டு வருகிறார்.இனியும் தொடர்ந்து வெளியிட உள்ளதாகவும் எழுத்துச் சீர்திருத்தத்தால் அச்சிடும் இடம்,தாளின் அளவு,செலவு அதிகரிக்குமே தவிர வேறொரு பயனும் இல்லை என்கிறார். பிற நாடுகளில் நூலகங்களில் உள்ள நூல்களைப் படிக்க ஆள் இல்லாமல் போவார்கள் என்று குறிப்பிடும் அவர் இன்று கல்வெட்டுகளை,ஓலைச்சுவடிகளைப் படிக்க ஆள் தேடுவதுபோல் எதிர்காலத்தில் தமிழ் நூல் படிப்புக்கு ஆள்தேடும் நிலையைத் தமிழுக்குப் புதிய எழுத்துச்சீர்திருத்தம் உண்டாக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்.

  • 13.எழுத்துத் திருத்தத்தில் கவனம் செலுத்துவதற்கு மாறாக நம் இணையப்படைப்புகள் உலகம் முழுவதும் செல்வதால் அதற்கேற்ற ஒருங்குகுறியில்(யுனிகோடு)கவனம் செலுத்த வேண்டும். தரப்படுத்தப்பட்ட எழுத்துகளில் இணையத்தில் இருக்கும் படைப்புகள் யாவும் ஒருங்குகுறிக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். குறிப்பாகத் தமிழர்களின் பொதுச்சொத்தான தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளம் முதலில் ஒருங்குகுறிக்கு மாறவேண்டும். அதனை அடுத்துத் தமிழக அரசின் தளம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தளம் யாவும் உடனடியாக ஒருங்குகுறிக்கு மாற வேண்டும்.

14.ஏழாண்டுகளாக(2003) ஒருங்கு குறி பயன்பாட்டுக்கு வந்து உலகெங்கும் இவ்வகை எழுத்துகள் பயன்பாட்டில் இருப்பதைப் புறக்கணிக்கக்கூடாது. தரப்படுத்தப்பட்ட எழுத்துகள் ஒருங்குகுறிக்கு மாற்றுவதற்கு ஆகும் காலம் மிகவும் குறைவாகும். செலவு இல்லை என்றே சொல்லலாம். அரசும் அனைத்துத் துறையினரும் தமிழ் ஒருங்குகுறி எழுத்தில்தான் அச்சிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் தமிழ் வளங்கள் உலகம் முழுவதும் பரவும்.எனவே உலகத் தமிழர்களுக்கு இனிப்பான செய்தி தர அரசு நினைத்தால் ஒருங்குகுறியை ஏற்று அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும்.

  • 15.தமிழகத்தில் புற்றீசல் போல ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகிவிட்டன. அனைத்துப் பிள்ளைகளும் ஆங்கில நூல்களைப் படிக்கின்றனர். அவ்வாறு இருக்கத் தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.அதனையும் இல்லாமல் செய்யும் நிலைக்கு எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்துவிடும் எனத் தமிழ்ப்புலவர்கள் அஞ்சுகின்றனர்.எனவே எழுத்துத்திருத்தம் பற்றி இனி யோசிக்கத் தேவையில்லை. எழுதப்பட்டுள்ள நூல்களைப் படிக்க தமிழ்வழிப் பள்ளிகளை அரசு நடத்த வேண்டும் என்பதும் தமிழ்வழிக் கல்விக்கு அரசு ஆணையிடவேண்டும் என்பதும் உலகச்செம்மொழி மாநாட்டின் குறிக்கோளாகவும் அறிவிப்பாகவும் இருக்க வேண்டும் என்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்னும் பழைய எழுத்துவடிவில் எழுதுவதையே வழக்கமாகவும்,வசதியாகவும் நினைக்கும் தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்று கூறி இப்பேச்சுக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
  • எழுத்தாக்கம்:-

எழுத்து சீர்மை: 30 நிமிட காணொளி விளக்கம்

இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய் வரிசைகளின் சீர்மை பற்றிய விளக்கக் காணொளி கீழே தரப்பட்டுள்ளது. இதனை முழுமையாகக் காண்பதன் வாயிலாக தற்போது முன்மொழியப்பட்டுள்ள எழுத்துச் சீர்மை பற்றி அறிந்துகொள்ள முடியும்.

  • காணொளியைக் காணும் அதே வேளையில், இதில் விளக்கப்படும் எழுத்துச் சீர்மை எந்த அளவுக்குத் தமிழுக்குப் பயனளிக்கக் கூடியது; எந்த அளவில் தமிழை வளர்த்தெடுக்கும்; இன்றைய கணினி ஊழியில் எந்த அளவுக்குத் தமிழை மேம்படுத்தும் என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டும்.
எழுத்துச் சீர்மைக்காக முன்வைக்கப்படும் கரணியங்கள், விளத்தங்கள், சான்றுகள் ஏரணமாக இருக்கின்றனவா என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

  • தமிழ்நாட்டுத் தமிழர்களை மட்டும் முன்வைத்துச் சிந்திக்காமல் உலகத் தமிழர்களையும் சிந்தனைக் கணக்கில் சேர்த்துக்கொண்டு இக்காணொளியைக் காணவேண்டும்.
காணொளியைக் கண்ட பிறகு, தமிழில் இதற்கு முன்னர் செய்யப்பட்டுள்ள எழுத்துச் சீர்மைகளின் வரலாற்றைத் தேடிப்படித்து ஏரணச் சிந்தையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு


எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு


காணொளியைக் காண கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்.

எழுத்துச் சீர்மை: கணியத்தமிழ் கூறியது

நாம் ஆழ்ந்த ஈடுபாடுள்ள தமிழ் ஆர்வலர்கள் எனினும், தமிழின் பரிமாணங்களை முழுமையாக அறிந்தவர்கள் அல்லர். அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ் வல்லமை பொருந்திய மைய அரசின் கீழ் அமைந்துள்ள ஒரு மாநில மொழியாகக் கருதப்படுவது அதன் பரவலையும், உலக அளவில் அதன் தரத்தையும் மிகவும் குறைத்து மதிப்பிடுவதாகும்.

இந்திய மொழிகளில் தமிழ் மட்டும்தான் இரண்டு நாடுகளில் இலங்கை, சிங்கப்பூர் தேசிய மொழி, ஆட்சி மொழி என அங்கீகாரம் பெற்றுள்ளது.

மலேசியா, மொரிசியஸ், தென் ஆப்ரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஃபிஜி போன்ற பல கீழை நாடுகளிலும், மேலை நாடுகளிலும் அரசு அங்கீகாரம் பெற்ற மொழி 90 - க்கு மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
இவற்றுள் 60 - க்கு மேற்பட்ட நாடுகளில் கணிசமான தொகையில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.தமிழர்களின் மக்கட் தொகை உலகில் தோராயமாக ஏழரைக் கோடி. இவர்களில் ஏறத்தாழ 20 சதவிகிதம் பேர் தமிழக எல்லைகட்கு வெளியே வாழ்கிறார்கள்.
தமிழரின் இந்தப் பரவலை அறிந்து தான் இங்கிலாந்தில் உள்ள BBc நிறுவனம், அது ஒலிபரப்பும் 40 - க்கு மேற்பட்ட மொழிகளில் வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகியவற்றின் ஆட்சி மொழிகளான வங்கம், உருது தவிர்த்த, மீதமுள்ள இந்திய மொழிகள் இருபதில், இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் ஒலிபரப்புகிறது.
UNESCO நிறுவனம் அண்மைக் காலம் வரை 30 - க்கு மேற்பட்ட மொழிகளில் Courier என்ற மாத இதழை நடத்தி வந்தது. இந்திய மொழிகளைப் பொருத்தவரை இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில்தான் அவ்விதழை வெளியிட்டுவந்தது.
சீன மொழியில் நாற்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் ஒலிபரப்புகிறார்கள். அவர்களும் இந்திய மொழிகள் இருபதில், இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் தான் ஒலிபரப்புகிறார்கள்.
தமிழ் மக்கள் ஒரு குவலயக் குடும்பம் (Global Family) . தமிழ் ஒரு குவலயக் குடும்பத்தின் மொழி: தமிழின் இந்தப் பரிமாணம் அதன் எதிர்கால வாழ்வுக்கு இன்றியமையாதது. எனவே இந்தப் பரிமாணம் காக்கப்பட வேண்டும்.
தமிழ் ஒரு குவலயக் குடும்பத்தின் மொழி என்ற பரிமாணம் காக்கப்பட வேண்டுமானால், உலகு தழுவி வாழும் தமிழர்கள் தங்கட்கு இருக்கும் ஒரே அடையாளமான தங்கள் தாய்மொழி தமிழை அறிந்தவர்களாகவும், தமிழ் மரபொடு தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
பெரும்பாலும் ஆங்கில மொழியின் 26 எழுத்துகளோடு தொடர்பு கொண்டுள்ள உலகத் தமிழ் குழந்தைகள், 247 எழுத்துகளைக் கொண்ட தமிழ் வரிவடிவத்தின் எண்ணிக்கையைப் பார்த்து மலைத்து நிற்கின்றனர்.
இந்தப் பிரச்சினை தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் கற்கும் 15 இலட்சம் குழந்தைகளுக்கும் பொருந்தும்.நாம் இங்கு முன்வைக்கும் சீர்திருத்தத்தை ஏற்றால், தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துக்களையும் சிரமமின்றி எழுதுவதற்கு 39 எழுத்துகளை மட்டும் கற்றால் போதுமானது.
இது பெரியார் அவர்கள் 1933 - இல் ஆரம்பித்து வைத்த எழுத்துச் சீரமைப்பின் அடுத்த கட்டம். இச்சீரமைப்பு இன்றியமையாதது: அறிவுத் துறைகளைக் கற்பதற்கும் மொழி தேவை. அடையாளத்திற்கும் மொழி தேவை.
விரைவு இன்றைய உலகின் வெற்றி வாசல்: தமிழ் மொழியைக் கற்பதில் விரைவு காணும் இச் சீரமைப்பு, தவிர்க்க இயலாதது. நடைமுறைப்படுத்தப்பட ஒரு நல்ல தருணத்திற்காகக் காத்திருக்கிறது. அதாவது நல்ல தலைவனுக்காகக் காத்திருக்கிறது. இரண்டையும் நாம்தான் உருவாக்க வேண்டும்.

வரிவடிவ மாற்றம்

கற்றுக் கொள்வதற்கு எளிதாக வரிவடிவங்களை மாற்றிக் கொள்வது அவசியம் என்ற கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள். இதன் பொருட்டு உகர, ஊகார, வரிசை உயிர்மெய்க் குறியீடுகளைப் புதிதாக அறிமுகப்படுத்துகிறார். மேலும், இகர, ஈகார வரிசைக் குறியீடுகளைத் தனி வடிவங்களாகப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்.
இதனால் குழந்தைகளுக்கும், தமிழ் கற்க விரும்பும் பிற மொழியினருக்கும் தமிழைக் கற்பது எளிதாகும் என்கிறார்.

வரிவடிவம் என்பது பதியும் ஊடகங்களும், பதியும் முறைகளும், பதியப் பயன்படும் கருவிகளும் மாறுபடும் போதெல்லாம் மாறுபடக்கூடிய - மாறுபடவேண்டிய ஒரு மொழிக்கூறு என்பதால் தமிழில் ஏற்படும் வரிவடிவ மாற்றங்களைத் தாராளமாக வரவேற்கலாம் - வரவேற்க வேண்டும்.

வரிவடிவ மாற்றத்தால் எழுத்துகளின் எண்ணிக்கையிலோ தன்மையிலோ எந்த மாறுதலும் ஏற்படாது; இதனால் வரிவடிவ மாற்றம் தமிழ் மொழியின் தன்மையை எந்த வகையிலும் பாதிக்காது; காலந்தோறும் ஏற்படும் வரிவடிவ மாற்றம் தமிழ் மொழி வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளதேயன்றி ஒருபோதும் வளர்ச்சிக்குக் குந்தகம் செய்யவில்லை; இதனால் வா.செ.கு அவர்களின் வரிவடிவச் சீர்திருத்தத்தையும் வரவேற்போமாக!
வா.செ.கு அவர்களின் வரிவடிவ மாற்றம் எதிர்காலச் சந்ததியினருக்குச் சிறந்ததொரு வழிகாட்டியாக வாழ்த்துகிறேன்!

வரியுருமாவுடன் வா.செ.கு எழுத்துரு

டாக்டர் வா.செ.கு சீரமைத்த வரிவடிவங்களில் அமைந்த எழுத்துருக்கள் பலவற்றை வரியுருமாவுடன் இணைத்து வழங்குகிறோம். இந்த சீரமைப்பால் பெரியார் முன்மொழிந்த தமிழ் எழுத்து சீரமைப்பு முழுமை அடைவதோடு தமிழை எழுதுவதும் கற்பதும் எளிதாகும்.
ஆதலால் வா.செ.கு எழுத்துகளைப் பலரும் பயன்படுத்தி இந்த வா.செ.கு சீரமைப்பைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவர் என்ற உறுதியுடையோம்!

மீண்டும் எழுத்துச் சீர்த்திருத்தம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ் வரிவடிவத்தில் உள்ள எழுத்துகளை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு அதிகாரப்படியாக அறிவிப்பு செய்துள்ளது. மாலை மலர் இணையத்தளத்தில் (7.1.2010) வெளிவந்துள்ள செய்தி இது:-

*************************

சென்னை, ஜன 7
தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக தனிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழு அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது.

தமிழ் எழுத்துக்களில் எத்தகைய சீர் திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது பற்றி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்ட பிறகு தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. பிறகு தமிழக அரசு தமிழ் எழுத்து சீர்திருத் தங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

தமிழ் எழுத்துக்கள் ஏற்கனவே பல தடவை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. முதலில் தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் பனை ஓலைச் சுவடிகளில் எழுதுவதற்கு ஏற்ப மாற்றப்பட்டது.

18-ம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டைச்சேர்ந்த ஜோசப் என்ற அறிஞர் தமிழ் அகராதியை உருவாக்கினார். அது தமிழ் அச்சுக்கலைக்கு உதவியாக இருந்தது. எல்லாரும் அவர் செய்த தமிழ் எழுத்து சீர் திருத்தங்களை ஏற்றுக் கொண்டனர்.

1950-களில் திராவிடர் கழக நிறுவனர் ஈ.வெ.ரா. பெரியார் தமிழ் எழுத்துக்களில் ஏராளமான சீர்திருத்தம் செய்தார். இதன் பயனாக தட்டச்சு எந்திரங்களில் தமிழ் எழுத்துக்களை மிக எளிதாக பயன்படுத்த முடிந்தது.

எம்.ஜி.ஆர். தன் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். "லை, னை'' எழுத்துக்கள் பழக்கத்துக்கு வந்தன. முதலில் சிறிது எதிர்ப்பு தோன்றினாலும் நாளடைவில் இந்த எழுத்துக்கள் பழகிவிட்டன.
அது போல தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துவதில் சிரமத்தை குறைக்க தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. கணினிகளில் தமிழ் எழுத்துக்களை மிக, மிக சுலபமாக பயன்படுத்த இனி வரும் எழுத்து சீர் திருத்தம் உதவும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

இந்த சீர்திருத்தம் இணைய தளங்களில் தமிழ் பயன் பாட்டை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

தமிழ் எழுத்துச் சீர்மை வலைப்பதிவு அறிமுகம்

தமிழ் எழுத்துகளில் சீர்த்திருத்தம் செய்யப்படவிருப்பதாகச் செய்தி அறியப்படுகிறது. இதன் தொடர்பிலான செய்தி கடந்த 7.1.2010ஆம் நாளன்று மாலை மலர் இணைய இதழில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணையத் தளத்தில் எழுத்துச் சீர்மை தொடர்பான 30 நிமிட காணொளி இடம்பெற்று இந்தச் செய்தியை உறுதிபடுத்தியது.


பலரும் மதிக்கத்தக்க அறிஞராகவும் கல்வியாளராகவும் விளங்கும் முனைவர் வா.செ.குழந்தைசாமி இந்தப் புதிய எழுத்துச் சீர்மையை வலியுறுத்தியும் பரப்புரை செய்தும் வருகின்றார்.

1.தமிழ் எழுத்துகளில் இ, ஈ, உ, ஊ ஆகிய நான்கு எழுத்து வரிசை எழுத்துகளில் சீர்மைத் தன்மை இருக்கவில்லை.

2.தமிழ்மொழியைச் சீர்மையாகவும் எளிமையாகவும் விரைவாகவும் கற்கலாம்

3.உலகம் முழுவது உள்ள தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ்ப் படித்துவிடுவார்கள்

4.இந்தச் சீர்மையின் வழி தந்தை பெரியார் கொண்டுவந்த எழுத்துச் சீர்மை முழுமைபெறும்

முதலிய கரணியங்களைக் காட்டி அவர் இந்தச் சீர்மையை முன்மொழிந்து வருகின்றார்.

இந்த முயற்சி புதியதன்று. கடந்த பத்தாண்டுகளாக இக்கருத்தினை விடாமல் வலியுறுத்தி வருகின்றார். ஆயினும், அவருடைய எழுத்துச் சீர்மை முன்மொழிவில் தமிழுக்கு ஊறு செய்யக்கூடிய தன்மைகள் அதிகமிருப்பதால் அறிஞர்கள் குழாம் அதனை இதுவரையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போதும்கூட, தமிழ்க்கடல் புலவர் இரா.இளங்குமரனார், மறைமலை இளக்குவனார், முனைவர் மு.இளங்கோவன், பேராசிரியர் செல்வா(கனடா), பெரியண்ணன் சந்திரசேகரன்(அமெரிக்கா), பேராசிரியர் இராம.கி, மணி.மு.மணிவண்ணன் முதலிய நல்லறிஞர்கள் பலர் எழுத்துச் சீர்மையை வெளிப்படையாக மறுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, 'எழுத்துச் சீர்மையின் மறுபக்கங்கள்' என்னும் தலைப்பில் எல்லாருடைய சிந்தனையையும் தட்டி எழுப்பக்கூடிய வகையில் நாக.இளங்கோவன் அழம்நிறைந்த ஆய்வொன்றை வெளியிட்டு இருக்கிறார். எழுத்துச் சீர்மை முன்மொழிவில் மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட மறுபக்கங்களையும் இந்தச் எழுத்துச் சீர்மையால் விளையப் போகும் எதிர்மறை விளைவுகளையும் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். மேலும், இந்தச் சீர்மை தேவையற்றது என்பதற்கான பல நுட்பமான கரணியங்களை பன்னாட்டுச் சூழலில் ஆய்ந்திருக்கிறார்.

இருந்தாலும், எதிர்வரும் சூன் திங்களில் தமிழகம் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் பயன்படுத்திக்கொண்டு எழுத்துச் சீர்மையை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட சில தரப்பினர் முனைப்புடன் இருக்கின்றனர் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், எழுத்துச் சீர்மை குறித்த பல்வேறு கருத்துகள் உலகத் தமிழரிடையே நிலவுவதைக் காணமுடிகின்றது. அவற்றைப் பின்வரும் முறையில் வகைப்படுத்திக் கூறலாம்.

1.இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசைகளில் சீர்மைக்குத் தேவை இருந்தாலும், முனைவர் வா.செ.குழந்தைசாமி முன்மொழியும் புதிய எழுத்து வடிவங்கள் ஏற்கத்தக்கவை அல்ல.

2.தமிழ் எழுத்துகள் மிகவும் செம்மையான கட்டமைப்பைக் கொண்டிருப்பதால் அதில் எந்த வகையான மாற்றமோ அல்லது சீர்மையோ செய்ய தேவையில்லை.

3.அப்படியே எழுத்தில் சீர்மை செய்யவேண்டுமானால், பன்னாட்டு அளவில் விரிவான ஆய்வுகள், மதிப்பீடுகள், விவாதங்கள், கருத்தாடல்கள் நடத்தப்பெறல் வேண்டும்.

4.இன்றைய நுட்பவியல் உலகத்தில் தமிழ் எழுத்துச் சிக்கல் முற்றிலும் களையப்பட்டுவிட்டது அல்லது சிக்கல் இருந்தாலும்கூட அது மிகச் சொற்பமானதே. ஆகவே, எழுத்துச் சீர்மையைச் செய்வதன் மூலம் புதிய வகையில் நெருக்கடி நிறைந்த சிக்கல்கள் ஏற்படும்.

இப்படியான பல்வேறு நிலைப்பாடுகள் நிலவுகின்ற போதிலும், இ, ஈ, உ, ஊகார எழுத்துச் சீர்மையை ஊடகத்தின் வாயிலாக தொடர்ந்து வலியுறுத்தியும் அதற்கு வலிமை கூட்டியும் வருகின்றனர்.

இந்தச் சூழலில், உலகம் பரவிய தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், பற்றாளர்கள், பயனாளர்கள், கணிஞர்கள் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளோடு எழுத்துச் சீர்மையை எதிர்கொண்டிருக்கின்றனர். காட்டாக;

1.தமிழ் சான்ற அறிஞர் பெருமக்கள் ஒன்றுகூடி எழுத்துச் சீர்மை மீதான முழுமையான ஆய்வுகள், மதிபீடுகள், கருத்தாடல்கள் நடத்த வேண்டும்.

2.பன்னாட்டு அளவில் எழுத்துச் சீர்மை குறித்த ஆய்வுகள் நடத்தப்பெற வேண்டும்.

3.தமிழ் எழுத்துச் சீர்மை தேவையா? இல்லையா? என்பதை முடிவு செய்வதற்கு உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கும் முழு உரிமை வழங்கப்படல் வேண்டும்.

4.இன்று தமிழ்மொழியானது தமிழ்நாட்டுக்கு மட்டுமே முழுச் சொந்தமாகவோ சொத்தாகவோ கருத இடமில்லை. ஏனெனில், மலேசியா, சிங்கை, இலங்கை முதலிய நாடுகளிலும் தமிழ்மொழி அரசு மொழியாக; ஆட்சி மொழியாக இருக்கின்றது.

ஆகவே, தமிழ்மொழி குறித்த எந்தவொரு முடிவையும் செய்வதற்கு முன்பாக உலகளாவிய நிலையில் வெளிப்படையான கருத்தாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

5.இவையெல்லாம் சாத்தியப்படுவதற்கு எவரேனும் எங்கேனும் எப்போதேனும் ஒரு சரியான களத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் தீர்வைச் செய்யவேண்டும் என்று சிந்தித்ததன் விளைவாக உருவாகியதுதான் இந்தத் தளம்; தமிழ் எழுத்துச் சீர்மை - மாற்றமும் மறுபக்கமும் என்னும் இந்த வலைப்பதிவுத் தளம்.

எழுத்துச் சீர்மை தொடர்பிலான பலதரப்பட்ட கருத்தாடலுக்கும் பன்னாட்டவருடைய கலந்தாய்வுக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் இந்த வலைப்பதிவுத் தளம் நல்லதொரு களமாக அமையக்கூடும்.

தவிர. இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மின்னஞ்சல்கள், மடற்குழுக்கள் ஆகியவற்றில் எழுத்துச் சீர்மை தொடர்பாக உலாவருகின்ற செய்திகளை ஒரே இடத்தில் - ஒரே தளத்தில் காண்பதற்கு இந்தக் களம் மிகவும் பயன்படக்கூடும்.

ஆகவே, எழுத்துச் சீர்மை தொடர்பில் உலகமெங்கிலும் இருந்து எவரும் தங்களுடைய கருத்துகளை, எண்ணங்களை, ஏடல்களை, சிந்தனைகளை இங்குப் பதிவு செய்யலாம்.

வலைப்பதிவு நடத்தும் அன்பர்கள் தத்தம் வலைப்பதிவுகளில் எழுதும் செய்திகளை இந்தத் ‘தமிழ் எழுத்துச் சீர்மை’ வலைப்பதிவுக்கும் விடுத்து வைக்கலாம். அல்லது விவரம் தெரிவித்தாலே போதுமானது. அந்தச் செய்தியை இந்தத் தளத்தில் மறுபதிவிட்டு அனைவருடைய பார்வைக்கும் வழங்கலாம். அல்லது மின்னஞ்சல் வழியாக விடுத்து வைக்கலாம்.

தமிழ் எழுத்துச் சீர்மை வலைப்பதிவு முகவரி http://tamilseermai.blogspot.com. மின்னஞ்சல் முகவரி:- tamilseermai@gmail.com

அன்னை மொழியை வாழ்த்தி வணங்குவமே


அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே ! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே..!

சிந்தா மணிச்சுடரே! செங்கை செறிவளையே!
தந்த வடமொழிக்கும் தாயாகி நின்றவளே!

சிந்து மணற்பரப்பில் சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர் மூத்த சுமேரியத்தார்

செந்திரு நாவில் சிரித்த இளங்கன்னீ!
சிந்துங் கலைவடிவே ! சீர்த்த கடற்கோளில்

நந்தாக் கதிரொளியே! நாடகத்துப் பண்ணியலே!
வந்த குடிமரபோர் வாழ்த்தி வணங்குவமே!

  • பாவலலேறு பெருஞ்சித்திரனார்